சனி, 6 செப்டம்பர், 2008

ஊடல்


ஏக்கம் தடவிய
இறுக்கமான மௌனம்
தூக்கம் தொலைத்தவிழி
தழுவிட மறுக்கும்

பார்க்கவும் கூடாமல்
விழிகள் விலகிட
நோக்கிச் சுவரினை
நெஞ்சம் தவிக்கும்

உடைந்த வார்த்தைகள்
ஊனமாய்த் தடைபட
தகிக்கும் அமைதியோ
தாண்டவம் ஆடும்

புரளும் அசைவுகள்
எதிர்பார்ப்பை விதைத்திட
ஏமாற்றம் வந்து
இதயத்தை மூடும்

நடந்த நிகழ்வினை
நினைவில் படரவிட்டு
இடைஞ்சலின் காரணம்
புரியாமல் துவளும்

இறுக்கம் தொலைத்திட
வருத்தமாய் யோசித்து
பாராத பொழுதினில்
பார்வையால் வருடும்

மனதின் குமுறல்கள்
மௌனப் பெருமூச்சாய்
மோதி முதுகினில்
மெல்லச் சுடுகையில்

திரும்பிய விழிகள்
நெருங்கிய நிமிஷத்தில்
செல்லக் கோபமாய்
சிணுங்கல்கள் வெளிப்பட

அலையும் காற்றில்
கலையும் மேகமாய்த்
தொலைந்தது கோபம்
தீர்ந்தது மௌனம்!!!