ஞாயிறு, 15 மார்ச், 2009

தேர்தலும் ஒரு காலநிலை!

ஒற்றை இரவினில்
உருவான தார்ச்சாலை
கட்சிக்கொடி நிறத்தில்
இலவசமாய் நூல்சேலை

எதிர்க்கட்சி வந்தால்
என்ன கிடைக்குமென்று
கதிரறுக்க மறந்தபடி
கதைபேசும் வீண்வேலை

நேற்றுவரை இங்கே
காற்றுவந்த குழாய்களிலே
ஆற்று வெள்ளமெனப்
பெருகிவரும் நீரின்அலை

கட்சி வேட்டிகள்
சகதியிலே கரைபுரள
சாதிகளின் பெயர்சொல்லிப்
பெருந்தலைகள் பேசும்விலை

முந்தைய ஆட்சியிலே
மறைந்திருந்த ஊழலெல்லாம்
சந்தியிலே கிழித்துக்
கடைவிரிக்கும் மாயவலை

பற்றவைத்த குடிசைகளின்
தணல்சூடு தணியுமுன்னே
சட்டெனவே தயாராகும்
ஏழைகட்கு வீட்டுமனை

வேனில் வசந்தமென்று
வந்துபோகும் பருவமென
இந்திய நாட்டினிலே
தேர்தலும் ஒரு காலநிலை!!!

வியாழன், 12 மார்ச், 2009

அஸ்தமித்தாய் ஜோதியே...

கதவாய் ஜன்னலாய்
வாசல்
கடந்துசெல்லா ஜடப்பொருளாய்

பாயாய்த் தலையணையாய்
நாளும்
படுக்கையிலே துணைப்பொருளாய்

தாயாய்த் தாதியுமாய்
வாட்டும்
நோவினிலே கைமருந்தாய்

யாவுமாகி நிறைந்தும்
வீட்டில்
எள்ளளவும் புரிதலில்லை...

மனமிருக்கும் ஜீவனென்று
யாரும்
மதிப்பளிக்க மறந்ததனால்

பொத்திவைத்த சோகமெல்லாம்
உடலில்
புற்றாகி உயிர்குடிக்க,

அஸ்தமித்தாய் ஜோதியே,
இன்று
அழும்குழந்தை துவளுதடி!