புதன், 31 மார்ச், 2010

சுடச் சுடரும் சம்சாரம்??!

காலையில இன்னிக்கு
கவிதையொண்ணு எழுதினேன்,
நாலுவரி படிக்கிறேன்
புடிச்சிருக்கா சொல்லுங்க...

சட்டைக்குப் பித்தானைத்
தச்சு வைக்கச்சொல்லி
பத்துநாளாச் சொல்லுறேன்,
பத்திரிகைக்கு எழுதித்தான்
பாழப் போச்சுதுபோ...

சந்தைக்குப் போனப்ப
அவரைக்காய் வாங்கினேன்,
உங்களுக்குப் பிடிச்சதுபோல்
கறிசமைச்சு வச்சிருக்கேன்...

என்னத்த சமைச்சுவச்சு
என்னதான் போட்டியோ,
ரத்தத்தில் சர்க்கரையும்
கொதிப்பும்தான் கூடிப்போச்சு...

நல்லபடம் வந்திருக்குன்னு
நளினியக்கா சொன்னாங்க,
ஞாயித்துக் கிழமையில
நாமளும் போகலாமா?

நம்மவீட்டுக் கதையவச்சே
நாலுபடம் எடுத்துரலாம்
இன்னுமென்ன புதுக்கதையை
அங்கபோயி பாக்கப்போறே?

பள்ளிக்கூட லீவுக்கு
பாட்டிவீட்டுக்குப் போவோம்னு
புள்ளைக சொல்றாங்க
பத்துநாள் போகவா?

ஒத்தையா உட்டுட்டு
உறவாடக் கேக்குதோ?
சோத்தைப் பொங்கினமா
வீட்டைப் பாத்தமான்னு
'சிவனே'ன்னு இரு...
புள்ளைங்க ரெண்டுபேரும்
போயிட்டு வரட்டும்!

திங்கள், 29 மார்ச், 2010

அப்பாக்கள் பொய்சொல்கிறார்கள்!

பொய்சொன்ன வாய்க்கு
போசனம் கிடைக்காதுடா தம்பி,
பொருத்தமான முன்னுரையோடுதான்
பேசத்தொடங்குவாள் அம்மா...

அப்பா இப்பல்லாம்
அதிகம் பேசுவதில்லை
அப்படியே பேசினாலும்
அதிகமாய்ப் பொய்தான்,
தட்டில் சோற்றோடு
வருத்தத்தையும் முன்வைப்பாள்...

குழம்பு ஊற்றாமல்
சுணங்குவதிலிருந்து
குழம்பிப் போயிருக்கிறாளென்று
குழப்பமில்லாமல் தெரியும்...

ஆனால்,
அப்பனுக்குத் தப்பாத
அழுத்தக்காரப் பிள்ளையென்று
எப்போதும் என்னைச்
சொல்ல முடியாதபடி,
மனசைத் திறந்துவைத்தேன்
மனைவிக்கு முன்னாடி...

ஆயிரம் கேள்விகள்
அனைத்துக்கும் கவலை
வரவுசெலவு கேட்டு
வறுத்தெடுக்கும் விசாரணை
ஆக மொத்தத்தில்,
கிட்டியதென்னவோ
முட்டாளென்னும் பட்டம்தான்...

போதுமடா சாமீன்னு
வேகவேகமாய்த் திரும்பிவிட்டேன்
அப்பா கடைப்பிடித்த
அருமையான வழிக்கே...

ஆனாலும்
அடிக்கடி முணுமுணுக்கிறது வாய்,
"அம்மா, என்னையும்
மன்னித்துவிடு" என்று!

செவ்வாய், 23 மார்ச், 2010

கோபங்கள் கலைகையில்...யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே...

விகடனுக்கு நன்றி!

கோபங்கள் கலைகையில்...
****************************


இறங்கமாட்டேனென்று
அடம்பிடிக்கிற
இடுப்புக் குழந்தையாய்
அழுத்தமாயிருந்தது கோபம்...

தோற்கிற அறிகுறிகள்
தென்பட்ட மாத்திரத்தில்
இறக்கிவிடப்பட்ட குழந்தையின்
எரிச்சல் அழுகுரலாய்
வெடித்துக்கிளம்பியது கண்ணீர்...

கண்ணீர் துடைத்துவிட்ட
கைகளின் ஸ்பரிசத்தில்
மெல்லப் புரிந்தது
முழுமையான கரிசனம்...

கரிசனத்தின் பிடியில்
கர்வங்கள் கழன்றுவிழ,
இழுத்தணைத்துக்கொண்டு
தோளில் விம்மியது அன்பு!

சனி, 20 மார்ச், 2010

அவளை அப்படித்தான் அழைக்கிறார்கள்!

பொழுதுபோனதொரு
பின்மாலை நேரம்...
புழுதி மண்டிய
பிள்ளையார்கோயில் தெரு,
விழுது வீசிய
வயல்காட்டு ஆலமரம்,
அடியில் விளையாடி
அழுக்கான பிள்ளைகள்...

கூட்டுக்குத் திரும்புகிற
கூட்டப் பறவைகள்,
மாடுகளை உரசிக்கொண்டு
மடிதேடும் கன்றுகள்,
வேலைவிட்டுத் திரும்புகிற
வேக மனிதர்கள்,
விளம்பரம் வீசுகிற
அவசர வானொலி...

வட்டிப் பணம்கேட்டு
வசவு கக்கும் வசதிக்காரன்
புட்டிக்குப் பணம்கேட்டுச்
சண்டைபோடும் புருஷன்காரன்
சட்டியில் உலைகொதிக்க
உடன் கொதிக்கும் மனசுக்காரி
தீப் பெட்டிக்குப் பசைதடவி
ஒட்டிப்போன உடம்புக்காரி...

ஆகமொத்தம் எல்லாரும்
அழுத்தத்தில் தோய்ந்திருக்க,
பாதி ரொட்டியை
நாய்க்குக் கொடுத்துவிட்டு
மீதியைக் காப்பிக்குள்
முக்கிச் சுவைத்தபடி,
அவள் மட்டும் அங்கே
ஆறுதலாய்ச் சிரித்துக்கொண்டிருந்தாள்...

ஆனால்,
அவளை அங்கே எல்லாரும்
அனாதையென்றும் கிறுக்கியென்றும்
அவதூறு சொல்லுகிறார்கள்!

புதன், 17 மார்ச், 2010

உறவுக் கயிறு

படுமுடிச்சுப் போட்டுவிட்ட
பள்ளிக் காலணியின்
முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி
முன்னால்வந்து நீட்டுவாய்...

போடீ, முடியாதென்று
பொய்க்கோபம் காட்டினாலும்,
ஓர விழிகளில்
கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,
ஓடிவந்து அப்போதே
அவிழ்த்துவிடுவேன் நான்...

இன்றும்
முடிச்சினால் திணறுகிற
கடினமான வாழ்க்கைதான் உனக்கு...

கண்தோய்ந்த கண்ணீரும்
கையிலொரு பிள்ளையுமாய்
அவ்வப்போது நீ எந்தன்
கண்ணில் படுகிறாய்...

ஆனால்,
முடிச்சு இறுகுதென்று நீயோ,
இருக்கிறேன் அண்ணனென்று நானோ,
சொல்லிக்கொள்ள முடியாதபடி
என்னவோ தடுக்கிறது...

ஒற்றைப் புன்னகையும்
ஒருசில வார்த்தைகளுமாய்
விட்டுவிலகிப்போகிறோம்...

ஆனால்,
எட்டிச்சென்றபின்
முட்டுகிறது மனசு...

ஒன்றாய்ப் பிறந்த
நம் உறவின் அடர்த்தியை
எங்கே தொலைத்தோம்
இடைப்பட்ட நாட்களில்!???

திங்கள், 8 மார்ச், 2010

முன்னே வா பெண்ணே!

முன்னே வா முன்னே வா என்று
மும்முரமாய் அழைத்தார்கள்...

பின்னிருந்து தள்ளுகிற
தைரியத்தின் துணையோடு
முன்னேறிச் சென்று
சில அடிகள் வைத்தேன்...

ஆனால்,
சுற்றிலும் தெரிந்ததோ
முட்டுச்சுவர்கள் மட்டுமே...

ஆனாலும்,
முன்வைத்த காலைப்
பின்வைக்கத் தோன்றாமல்
அங்கேயே நிற்கிறேன்,
அனைத்தையும் கடக்கலாம் என்ற
அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்!

*************************************

சனி, 6 மார்ச், 2010

அள்ளித் தெளிக்கிற வார்த்தைகள்!

தெருவுக்கெல்லாம் தெரிந்துபோனது
அவன்
தோற்றுப் போனானென்று...

சின்ன வயசுமுதல்
செய்தகுற்றம் அத்தனையும்
அள்ளியெடுத்து
அவனோடு சேர்த்துவீசித்
தள்ளிவைத்தார்கள்
தெருவாசல் திண்ணையில்...

பசித்திருந்த வயிறும்
படபடக்கும் இதயமுமாக
விழித்துக்கொண்டது
இன்னொரு பகல்...

எல்லா வற்றையும்
இரவோடு மறந்துவிட்டு
அவனை,
உள்ளே அழைத்துக்கொண்டது வீடு...

ஆனால்,
அள்ளியெறிந்த வார்த்தைகள்மட்டும்
அலைந்துகொண்டிருந்தன
அக்கம் பக்கமெல்லாம்...

புதன், 3 மார்ச், 2010

நித்திய ஆனந்தம் தேடி...

ஒரு முகத்தை மறைத்து
இன்னொன்றைக் காட்டினார்கள்,
சாமியார் ஒருவரும்
சபலமுற்ற ஒருத்தியுமாக...

அட,
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...

ஏமாந்த கூட்டத்தின்முன்
இருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக...