செவ்வாய், 22 நவம்பர், 2011

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!


வெளிர்நீல வானத்தில்
வெள்ளிறகு மேகங்கள்,

வெய்யில் பூக்களோடு
விரிந்திருக்கும் தருநிழல்,

காற்றில் மிதந்துவந்து
கன்னம்தொடும் மழைத்துளி,

ஆற்றுநீர்ச் சுழிப்பில்
அலைக்கழியும் சருகு,

நீளமான மழைநாளில்
நிமிஷநேரச் சூரியன்,

தூரிகையில் மாயம்செய்யும்
துளியளவு தண்ணீர்,

மனம்நிறைந்த மகிழ்ச்சியில்
முகிழ்த்துவரும் கண்ணீர்,

இருளணிந்த மலையினில்
எங்கோ தெரியும் விளக்கு...

கருநீல வானத்தில்
கதிர்முளைக்கும் கிழக்கு,

வழிநடந்த பாதத்தை
வருடிவிடும் புல்மடி,

மார்கழிப் பூக்களின் 
மடிதுயிலும் மென்பனி,

கூடித்திளைத்த பின்
கொஞ்சநேரத் தனிமை,

காதலின் மொழியோடு
கலந்துவரும் ஒருமை,

இவையனைத்தும் ரசித்தபின்னும்
எழுதுவதைக் கவிதையென்பது
எந்த ஊர் நியாயம்?

***

செவ்வாய், 8 நவம்பர், 2011

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா

வரவுக்கும் செலவுக்குமிடையில்
வட்டிக்கணக்குப் பார்த்தபடி
புட்டிக் கண்ணாடி வழியாகப்
பிள்ளைகளின் 
எதிர்காலத்தைத் தேடுபவர்...

சட்டென்று கோவப்பட்டாலும்
சம்சாரத்துக்கு முன்னால்
பெட்டிப்பாம்பு...

அம்மா

அக்கறை காட்டுகிறேனென்று
அவஸ்தைப்படுத்துபவள்
அவ்வப்போது,
அன்பில் கரைத்தும் அழவைப்பவள்.

தப்பென்று தெரிந்தாலும்
தன்மையாய்ப் புரியவைப்பவள் 
அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில்
எப்போதும் தவிக்கும்
இருதலைக்கொள்ளி எறும்பு...

அக்கா

petty cash படியளப்பதில்
பெரிய மனசுக்காரி,
சிலசமயம்,
தட்டிக்கேட்பதில் தாய்.

தம்பி


போட்டுக்கொடுக்கவென்றே
வீட்டிலிருக்கிற ராட்சசன்...
மூத்தவனை முட்டாளாக்க
இளையவனாய்ப் பிறந்துதொலைத்த
எதிரி!


 *****

செவ்வாய், 1 நவம்பர், 2011

பார்வையொன்றே போதும்!


நல்லபெண்கள்
நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை
அருகில் சென்று
உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம்
முகங்கனிந்து
பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ
பெண் மூச்சுக்
காற்றாலே உயிர்த்திடும் உலகம்...

நீ, 
நேற்றுவரை நிராகரித்த
காதல் பார்வைகளை
என் தோட்டத்தில் பதியனிட்டேன்...
அவையும்
நாற்றுகளாகி
நாலு இலை விட்டதோடு
தோற்றுப்போய் நிற்கின்றன...

அதற்காகவாவது
பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே,
பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்!


டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.