திங்கள், 16 ஜூன், 2008

உறவுகளைச் சுமந்தவன்...கடைத்தெருவில் உந்தன்
கரம்பிடித்துக் கொண்டபடி
கண்ணில்கண்ட அத்தனையும்
கேட்டுக்கேட்டு அடம்பிடிப்பேன்...

கொஞ்சமும் தயங்காமல்
தங்கையென் முகம்பார்த்து
அண்ணன் வளர்ந்தபின்னே
அத்தனையும் தருவேனென்பாய்...

நடைநடந்து என் பாதம்
நோகுமென்று மனம்வருந்தி
உப்புமூட்டையாக எனை
வீடுவரை சுமந்துசெல்வாய்...

வறுமையுடன் போராடும்
உறவுகளைச் சுமப்பதற்காய்
சுடும்நீர் விழிநனைக்க
கடல்கடந்து பயணம்கொண்டாய்...

முதுகில் சுமந்தபாசம்
மனசில் கனத்திருக்க
விரைவில் வருவாயென்று
வருஷம்பல காத்திருந்தேன்...

தந்தைக்குப் பணமனுப்பி
தங்கையென் மணமுடித்தாய்
ஊரும்உறவும் மெச்ச
சீர்சிறப்புச் செய்யவைத்தாய்...

மாவரைத்துப் பிழைத்ததுபோய்
மாடிமனை ஆனபின்னும்
நாடுவிட்டுப் போனநீயும்
வீடுவரத் தாமதமேன்?

உன்னுடைய இடத்தை
இங்கே
பொன்பொருளால் நிரப்பிவிட்டு
என்னுடைய சோதரனே,
எங்கே நீ தவிக்கின்றாயோ?...

சனி, 14 ஜூன், 2008

அம்மாவின் அருமைமகன்...


இரவை உலுக்கிய
இடைவிடாத இருமல்
உறக்கமின்றி வருடியது
அன்னையின் விரல்கள்...

காய்ச்சிய பாலில்
கற்கண்டும் மிளகுமிட்டு
ஆற்றி இதமாக
அம்மா கொடுக்கையில்
தொண்டைக் குழிக்குள்
தோன்றியது ஆசுவாசம்...

பண்ணிரண்டாண்டுகள்
பறந்துபோன பின்னர்,
உள்ளிருக்கும் உயிரை
உருவி யெடுத்தல்போல
இன்றும் அதே இருமல்
அன்னையின் சிறுஅறையில்...

சத்தமின்றி எழுந்துசென்று
கதவினைத் தாளிட்டு
கும்மென்று ஒலியெழுப்பும்
குளிர்சாதனம் உயிர்ப்பித்து
நிம்மதியாய் உறங்கினான்
அம்மாவின் அருமைமகன்...

ஞாயிறு, 8 ஜூன், 2008

உன்னாலே...உன்னாலே...


மனசுப் பிரதேசத்தில்
ஆயிரமாயிரமாய்
வண்ணத்துப்பூச்சிகளின்
கண்கொள்ளா அணிவகுப்பு...

பள்ளிக்குச் செல்லும்
முதல்நாள் மாணவனாய்
உள்ளம் நிறைய
உருளும் பரபரப்பு...

எங்கேயோ பிறந்திருந்து
எனக்கென்று வளர்ந்திருந்து
என்னை காண்பதற்கு
இன்றுவரும் வெண்ணிலவே,

உன்னைச்
சந்திக்கப்போகும்
அந்த நிமிஷத்தில்
என்னென்ன சொல்லி
என்னைக் கொள்வாய் நீ...

அம்மாவின் பின்னால்
அடக்கமாய் ஒளிந்தபடி
கொல்லும் பார்வையால்
என்னைச் சிதைப்பாயோ...

கன்னம் சிவக்கப்
புன்னகை மலர்பூக்க
பின்னல் நுனிதிருத்தி
என்னைக் கலைப்பாயோ...

உள்ளம் நிறைய
உற்சாகம் சுமப்பதனால்
நெஞ்சம் நிறைந்து
விழிகளும் தளும்புதடி...

ஆனால்,
ஒன்றுமட்டும் இன்னும்
விளங்கிட வில்லையடி...
ஆசையின் அலைகளில்
அலைபாயும் நேரத்தில்

ஓசையே இல்லாமல்
கோபம் தொலைந்துபோய்
மென்மையே மனதினில்
முழுமையாய் நிறைகிறது...

அச்சம் என்பதையே
அறியாத நான் கூட
காதலின் மயக்கத்தில்
கோழையாகிப் போகின்றேன்

கிரகணம் கண்ட
கீழைச் சூரியனாய்
மரணம்வரை தொட்டு
மறுபடியும் உயிர்க்கின்றேன்...

இத்தனையும் நிகழ்த்திவிட்டு
எதுவுமே அறியாதவள்போல்
வெட்கம் போர்த்தி எனை
வதைப்பாயோ என் கிளியே...

புதன், 4 ஜூன், 2008

ஜனனம்


அலுத்து உடல்வலிக்க
அன்றைய உணவுக்காக
உழைத்துத் திரும்பிடும்
வறுமைச் சேலைக்காரி...

மலையளவு துயரம்
மனசினில் புதைந்திருக்க
தலைச்சுமையில் முள்விறகு
வயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...

அவள்
காயாத விறகெடுத்து
காய்ந்துபோன வயிற்றோடு
அடுப்பைக் கூட்டி
உலையேற்றும் இரவுவேளை...

கழற்றிப் போட்டுவந்த
தலைப்புச் சேலையினில்
முடிந்துவைத்த காசுக்குக்
குடித்துவந்த அவள் கணவன்...

அடுப்பில் உலைகொதிக்க
அனலாக மனம்தகிக்க
தழலாக வந்துவிழும்
சாராய வசவுச்சொற்கள்...

எடுத்துக்கொள் கடவுளே
இந்தவாழ்க்கை இனியும்வேண்டாம்
என்று மனம்குமுற
எழுந்தது வயிற்றில்வலி...

சுழித்துச் சிதறடித்த
வேதனையை விழுங்கிவிட்டு
உரக்கக் குரல்கொடுத்தாள்
கணவனை அழைப்பதற்கு...

போதையின் போர்வையில்
புலம்பிக் கிடந்தவனின்
காதில் விழாதகுரல்
அயலாரை அழைத்துவர

அடுப்பின் கணகணப்பில்
அரைகுறை இருள்விளக்கில்
சிரிப்பை மறந்தவளின்
வாழ்க்கையில் ஒளிஉதயம்...

வீறிட்டு அழுதபிள்ளை
விரல்பூவால் தொடச்சிலிர்த்து
மாறியது சோகம்
முகிழ்த்தது மென்முறுவல்...

பெற்றமகன் முகத்தைப்
பெருமையுடன் பார்த்தவேளை
அவள்
பட்டதுயரமெல்லாம்
பஞ்சாகிப் பறந்ததங்கே...