சனி, 1 மார்ச், 2014

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம்
பிறந்தநாள் வருதுல்ல,
 எப்பவும்போல இப்பவும்
சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று
தன்னை முன்னிலைப்படுத்தித்
தாயின் விழிகளை அளந்த
சின்னவனின் கேள்வியும்,

"டப்பாவுல இருந்த
மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி,
அப்பறமா முடிஞ்சா
வாங்கிட்டு வா தாயி..." எனும்
மாமனாரின் இறைஞ்சலும்,

தப்புத்தான்  அம்மா
நான் கணக்கில ஃபெயிலானது
எப்பம்மா எனக்கு நீ
டியூஷன் வைக்கப்போறே?
என்ற சுப்புவின் கேள்வியும்
உந்தித் தள்ள,

இடைவிடாமல் சுற்றிய
இயந்திரத்தோடு இயந்திரமாய்
இட்டிலி மாவை
அரைத்துக்கொண்டிருந்தாள்,
ஆட்டிப் படைக்கிற
விதியினைத் தோற்கடிக்க
ஆட்டி விற்கிற
தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!


செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஆங்கில வாத்தியாரும் அகப்பட்ட பெயரும்!

"எத்தனை எளிதாய்ச்
சொல்லிவிட்டாய் அம்மா,
பாட்டனின் பெயரமைதல் 
பாக்கியம் என்று...

நோட்டுப் புத்தகத்தில் எழுதிய 
'சின்னத் துரை'யை
ஆசிரியர்
மாற்றி வாசிக்கின்றார் 
சைனா துரை என்று...

வகுப்பில்
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும்
கேலி செய்கிறார்கள்..." என்று
வாட்டத்துடன் சொன்ன மகனிடம்,

"முதலில் 
வாசிக்கக் கற்றுக்கொள்ளச்சொல் 
உன் வாத்தியாரை..." என்றவள்
ஓசையின்றிச் சிரித்தாள்,
"என் பிள்ளை 
சைனாவுக்கே துரையாம்ல..." என்று.

                            *********

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

குளக்கரை விடியல் (ஒரு இயற்கை ஓவியம்)இத்தனைபேர் சுற்றிவர
அத்தனை அழகா நான்!?
மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... 


சூரியக்கதிர் வருடச் 
செவ்விதழ் விரித்தது 
தண்ணீர்க் குளத்துத் தாமரை...

தாமரை இதழ்விரியத்
தன் முகம் புதைத்தது
சந்திரனைக் காதலிக்கும் அல்லி... 

அல்லிக் குளத்தினில் 
வெள்ளிச் சிதறல்கள் 
துள்ளித் திரிகிற மீன்கள் ...

மீன்களைப் பார்த்ததும் 
மோகம் பெருகிவர 
மோனத் தவமியற்றும் கொக்கு... 

கொக்கிற்குப் போட்டியாய் 
குளக்கரையில் தவமிருக்கும் 
ஒற்றைக்கால் அரசமரம்... 

அரசமரத்தடியில் 
அசையா நெடுந்தவம், 
அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!


*********
(இது ஒரு மீள்பதிவு)

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும்
செய்கிறேனென்று வந்தவனிடம்
சின்னதொரு வேலைதான்
செய்கிறாயா என்றேன்...

கண்கள் மின்னக்கேட்டான்
"என்ன வேலை சார்?" என்று...

நிழலிலே வேலை
நேரமெல்லாம் கணக்கில்லை,
பிடித்ததைச் சாப்பிடலாம்
நினைத்தபோது  தூங்கலாம்...

ஏ சி யில் இருக்கலாம்,
எல்லாச் சேனலும் பார்க்கலாம்,
ஆசையிருந்தால் பாடலாம்,
பாடிக்கொண்டே ஆடலாம்...

வீட்டுச் செடிகளையும்
வளர்க்கிற நாய்களையும்
நாட்டமாய்ப்  பராமரித்து
நாள்முழுக்க ரசிக்கலாம்...

காலையில் காப்பியும்
கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு,
மத்தியான சமையலையும்
மணி எட்டரைக்குள் முடிக்கலாம்...

சாப்பாட்டுக் கூடையில்
சமைத்ததை எடுத்துவைத்து,
ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால்
அப்புறம் சிரமமில்லை...

எப்போது விருப்பமோ
அப்போது சலவைசெய்து,
அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி,
அங்கணத்தைச் சுத்தம்செய்து,
விருப்பமான தேநீரை
நான்
வீடுவருமுன் போட்டால்போதும்...

இறுக்கம் குறைந்து
நறுக்கென்று சுவைப்பதற்கு
ரெண்டேரெண்டு மசால் வடை...

மற்றபடி,
உனக்கும் எனக்கும் சேர்த்து
இருக்கிறதில் எளிதான
இரவுசமையல் போதும்...

விருப்பமென்றால் சொல்,
வீட்டுமுகவரி தருகிறேனென்றேன்...

'சுருக்'கென்று சொன்னான் அவன்...

"ஆக்குதல் காத்தல்
அழித்தலென்று அத்தனையும்
நேக்காகச் செய்கிற
கடவுள் வேலைசார் இது,
காசுக்கெல்லாம் கிடைக்காது...

பொருத்தமான
பெண்ணைப் பார்த்து
இறுக்கமாய்
மூணு முடிச்சுப்போடுங்க" என்று,
சிரித்தபடி சொல்லிப்போனான்...

எனக்குத்தான் சிரிப்பே வரவில்லை!