இடுகைகள்

வறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல,  எப்பவும்போல இப்பவும் சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தாயின் விழிகளை அளந்த சின்னவனின் கேள்வியும், "டப்பாவுல இருந்த மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி, அப்பறமா முடிஞ்சா வாங்கிட்டு வா தாயி..." எனும் மாமனாரின் இறைஞ்சலும், தப்புத்தான்  அம்மா நான் கணக்கில ஃபெயிலானது எப்பம்மா எனக்கு நீ டியூஷன் வைக்கப்போறே? என்ற சுப்புவின் கேள்வியும் உந்தித் தள்ள, இடைவிடாமல் சுற்றிய இயந்திரத்தோடு இயந்திரமாய் இட்டிலி மாவை அரைத்துக்கொண்டிருந்தாள், ஆட்டிப் படைக்கிற விதியினைத் தோற்கடிக்க ஆட்டி விற்கிற தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!

ஈரம்

படம்
ஈரவாசனை படர்ந்திருந்தது அந்தக் கூரைக் குடிசையின் எல்லாப் பக்கமும்... கோரைப்பாயும் ஈரக்கோணியும் அதனதன் பங்குக்கு வாசனை பரப்ப, அரிசிப் பானைக்குள் அடிவரைக்கும் துழாவி, உரசிக் கிடைத்த ஒன்றிரண்டு மணிகளை, வாசல் குருவியின் வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, ஈரச் சட்டையுடன் சோகைப்பிள்ளை சிரிக்க, உள்ளே, மூத்திர   ஈரத்தில் அழுதது, சேலைத் தொட்டிலில் சின்னப் பிள்ளை... மாசம் முடியுமுன்னால் முன்பணம் கேக்குதா? நாசமாய்ப் போச்சுதென்று ஓசைஉயர்த்திய எஜமானியிடம், ஈரத்தால் வெளுத்த இருகையும் பிசைந்தபடி, வாரேம்மா என்றபடி, வெளியிறங்கி நடந்தவளின் வீட்டுக்குள் அன்றைக்குக் காய்ந்து கிடந்தது, ஓரத்து விறகடுப்பும், ஒன்றிரண்டு வயிறுகளும்... ********** படம் : இணையத்திலிருந்து

ஃபைவ் ஸ்டார்!!!

படம்
"அப்பா, மிச்சம் காசிருந்தா மூணு ஃபைவ் ஸ்டார்..." கத்திச்சொல்லிவிட்டுக் கதவுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டது கடைக்குட்டி... சட்டைப்பை காலியாயிருக்க, கடனுக்கு அரிசிவாங்கக் கடைக்குப் புறப்பட்டவன், "அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார், அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்... அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க, அப்புறம் எதுக்கு இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?" என்று, இடக்காய்க் கேட்டுவிட்டுத் திரும்பாமல் நடந்தான்... சுருங்கிய பிஞ்சின் முகத்தைப் பார்க்காமலும், அரும்பிய கண்ணீரை அடுத்தவர்க்குக் காட்டாமலும்...

பாரபட்சம்

படம்
அன்று, அழைத்த திரௌபதிக்கு ஆடைகொடுத்துக் காத்தவன், இன்று, அழைப்பதறியாமல் அனாதையாய்த் திரியும், அந்த ஊமைக் கோமளத்துக்கும் கொஞ்சம் உவந்து கொடுத்திருக்கலாம்... அங்காடித் தெருக்களில் ஆள்துளைக்கும் பார்வைகளில், அன்றாடம், தொட்டும் தொடாமலும் கெட்டுப்போகிறாள் அவள்...