சனி, 29 மே, 2010

இருவகை இரவுகள்குற்றாலம் கொடைக்கானல்
குமரகம் குலுமணாலி
எப்போ பார்த்தாலும்
இதே இடங்கள்தானா?

எந்தஊரும் பிடிக்கல
என்றுசொல்லிக் கதவடைத்து,
உறக்கமின்றிப் புரண்டது
'இருக்கிற' வீட்டுப்பிள்ளை...

வானத்துக்கூரை
வருடுகிற மென்காற்று
ஓலமிடும் ஆந்தைச்சத்தம்,
ஊடே ஒரு மழைத்துளி

தூரத்து இடிமுழக்கம்
ஊளையிடும் நாயின்சத்தம்
இவற்றோடு,
அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் அருகாமையும்சேர,

கனவில்,
காகிதக் கப்பலோட்டிக்
கண்டமெல்லாம் சுற்றிவந்தது
சாலையோரத் தொழிலாளியின்
சட்டையில்லாத பிள்ளை.

வியாழன், 27 மே, 2010

மங்களூர் விமான நிலையம்வருகிறவர்களை வரவேற்க,
ஆசையும் பாசமும்
வாடகை வண்டியுமாய்
வாசல்பக்கம் காத்திருந்தார்கள்
வந்த உறவினர்கள்...

ஆனால்,
பாசக் கயிற்றினைப்
பாதையெங்கும் விரித்தபடி,
ஓடுபாதையிலேயே
உறங்காமல் காத்திருந்தான் எமன்!

வியாழன், 20 மே, 2010

அந்திமழையும் அழகான காதலும்!


சட்டென்று வந்திறங்கியது
சாயங்காலத்து மழை...

சுமந்த
சட்டிமண்ணைக் கொட்டியவள்,
வேப்ப மரத்
தொட்டில் பிள்ளையையும்,
விளையாடிய பிள்ளையையும்
கிட்ட அணைத்தபடி
கூரைச் சரிவைத்தேட,

கட்டிய தலைப்பாகையை
கழற்றிப் பிடித்தபடி
மண்வெட்டியை போட்டுவிட்டுக்
கிட்டவந்தான் அவள் கணவன்...

ஒட்டுச் சேலையால்
பிள்ளைகளின் தலைதுடைத்துக்
கட்டியவன் பக்கம்
கனிவாகக் கைநீட்டித்
தொட்டவள் சொன்னாள்
துடைச்சிக்கோ என்று...

தொட்டவளை அருகழைத்துத்
துண்டாலே போர்த்திவிட்டுத்
தோற்றுப்போன தூவாணத்தைத்
துச்சமாக அவன் பார்க்க,

கொட்டுவதை நிறுத்திவிட்டுக்
கலைந்துபோயின மேகங்கள்...
நாளை,
புயலையும் கூட்டிவந்து
அந்தப்
பேரன்பை ரசிப்பதற்கு!

சனி, 15 மே, 2010

பல்லி 'விழுந்த' பலன்!


துடித்துக் கிடந்த
அறுந்தவால் அடங்குமுன்னே,
தேடிப் பிடித்து
அந்தப்
பல்லியின் தலையில்போட்டாள்...

கண்ணை மூடுமுன்
கடைசியாக நினைத்தது பல்லி...

மனிதனின்,
உச்சந்தலையில் வீழ்ந்தால்
நிச்சயம் மரணமென்று
அப்போதே சொன்னார்கள்,
அலட்சியமாய் இருந்துவிட்டேனென்று!

திங்கள், 10 மே, 2010

எடை குறைக்கும் ரகசியம்!


ஓவர்வெயிட் ஒபிஸிட்டி 
டயட்டில் இருக்கிறேன், 
ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று 
அலட்டிக் கொள்ளுவதே 
அன்றாடம் வழக்கமாச்சு... 

மனசுக்குப் பிடித்ததைச் 
சாப்பிடமுடியாமல் 
மருத்துவரும் மருந்துமாகக் 
கரைகிறது கைக்காசு... 

உலகத்துத் தொலைக்காட்சி, 
வீடெங்கும் வலைஆட்சி 
சிறைப்பட்டுக் கிடக்கிறது 
மனிதர்களின் உடலாட்சி... 

அரைக்க தரைபெருக்க 
துவைக்க துணிஉலர்த்த 
துடைக்க சமைத்துவைக்க 
சமைத்ததை சுத்தம்செய்ய,
 
அத்தனையும் செய்துவைக்க 
எந்திரங்கள் வந்திறங்க, 
ஏறிக்கொண்டு போனது 
எடையும் இயலாமையும்... 

கால்விரலைப் பார்ப்பதே 
கஷ்டமென்று சொல்லும்படி, 
மேலெழுந்து நிற்கின்ற 
மத்தள வயிற்றினால், 

இல்லாத வருத்தமெல்லாம் 
சொல்லாமல் வந்துவிட, 
கொல்லாமல் கொல்லுகிறது 
கொலஸ்ட்ராலும் நீரிழிவும்... 

வேதனையைக் குறைப்பதற்கு 
விரதத்தைக் கடைப்பிடித்து, 
சோதனை முயற்சியாகக்  
கோதுமைக்கு மாறினாலும், 

உடலைக் குறைக்கின்ற 
அவசியம் வந்துவிட்டால், 
வேலையைக்கூட்டிக் 
கொஞ்சம் 
விளையாட்டைப் பெருக்கிவிட்டால், 
உடல்சுமை கழிந்துவிடும் 
இதுவே, 
காசில்லாத எளிய வைத்தியம்.

******

ஞாயிறு, 9 மே, 2010

கவலைகளில் கரைந்தபடி...
"இருக்கிற கவலையெல்லாம்
கழிச்சுக் கட்டிவிட்டு
சிறுபிள்ளைபோல
சந்தோஷமாய் இருக்கப்பாரு"

என்
அவஸ்தைகளைப் புரிந்துகொண்டு
அம்மா சொன்னாள்
அலைபேசி வழியாக...

இருக்கிற வேலை நாளை
நிலைக்குமா எனும் கவலை,
படிக்கிறபிள்ளை நன்றாய்ப்
படிக்கலையே எனும் கவலை
மகளுக்குக் கல்யாணம்
அமையாத மனக்கவலை...

அம்மாவை அநாதரவாய்
விட்டுவந்த வலிக்கவலை
மனைவியின் எதிர்பார்ப்பைத்
தீர்க்காத பெருங்கவலை
படுத்துகிற உடல்வருத்தம்
போகாத ஒரு கவலை

வாங்குகிற மருந்தெல்லாம்
போலிதானோ எனும் கவலை
தூங்குகையில் திருடனவரக்
கூடுமென்ற பயக்கவலை
வாங்கிய கடனை நண்பன்
கொடுக்கணுமே எனும் கவலை...

எந்தக் கவலையை
எப்படிக் கழிப்பதென்று
சிந்தனை முழுவதும்
கேள்விகளாய்க் கிளம்பிவிட
இல்லாமல்போனது தூக்கம்...

இருக்கிற கவலையுடன்
இரவெல்லாம் தூங்காத
கவலையும் சேர்ந்துகொள்ள,
துக்கத்தின் கணக்கிலொன்று
மொத்தத்தில் அதிகமாச்சு!

படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

சனி, 8 மே, 2010

வளர்பிறை வாய்ப்புகள்


அழைப்புவந்த வேலைக்கு
அவசரமாய்க் கிளம்பினான்...

வளர்பிறையில் போகலாமென்றாள்
வெத்திலை வாயுடன் பாட்டி;
அமைதியாய் ஆமோதித்தாள்
அடுக்களைப்பக்கமிருந்து அம்மா...

மறைமதிக் காலம்
முழுமையாகக் காத்திருந்து,
வளர்பிறை வந்ததும்
போய்விட்டுத் திரும்பிவந்தான்...

வாசலிலேயே காத்திருந்தது பாட்டி...
வருத்தத்தோடு சொன்னான்,
அமாவாசையில பிறந்த ஒருத்தன்
அந்த வேலையில்
அமர்ந்துவிட்டானென்று...

செவ்வாய், 4 மே, 2010

ஒன்றோடு ஒன்றைக்கூட்ட...


வேண்டாம்...முடியாது
லீவெல்லாம் கிடைக்காது...

இதுக்குப்பட்ட கஷ்டமே
இன்னும் மறக்கல,
புதுசா வேறயா?
போதும்டா சாமீ...

எதுக்குத்தான் இப்பிடி
அடம்பிடிக்கிறீங்களோ?

அண்ணன் தங்கை
எல்லாம் இருந்தும்
என்னத்தைக் கண்டீங்க?

பரிதாபமா பாத்துப்பாத்தே
படுத்துறீங்க நீங்க...

பாத்துக்க யாரும்
பாலைவனத்துக்கு வரமாட்டாங்க,
சோத்துக்கு நீங்க
திண்டாடிப்போவீங்க...

சரி,புள்ளைகிட்ட கேட்கலாம்
வேணுமா வேணாமான்னு...

ஒண்ணும் வேண்டாம்
பொம்மையெல்லாம் கேட்கும்,
அழுது அழுது
அம்மாவைப் படுத்தும்...

கண்ணே நீ வாடான்னு
கட்டி முத்தம்வைக்க,
ஒண்ணே போதுமென்று
முடிவாகிப்போனது வீட்டில்!

திங்கள், 3 மே, 2010

தனிக்குடித்தனம்


இருக்கவும் முடியல
இருந்து உடல்வலித்தாலும்
படுக்கவும் முடியல...

ஏழுமாத வயிற்றை
இடையிடையே நீவிக்கொண்டு
முதுகுசாய்ந்து அமர்ந்தபடி
மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்...

உறக்கம் தொலைந்துபோக
கலக்கம்பிறந்தது மனதில்...

பற்றிக்கொண்ட பதட்டத்துடன்,
நெற்றிக்கு இட்டுவிட்டு,
மற்றென்ன செய்வதென்று
மனசுக்குத் தோன்றாமல்
கண்ணோடு கண்பார்த்து
கைப்பிடித்து நீவிவிட்டான்...

நீவிய கைகளின்
நடுக்கம் புரிந்தவளாய்
ஓரச்சிரிப்போடு அவன்
விரல்களை இறுகப்பற்ற,

அன்னையும் தந்தையுமாய்
அடுத்தவரைத் தேற்றத்தேற்ற
சின்னதாகிப்போனது
இரவும் இயலாமையும்!

சனி, 1 மே, 2010

வேலியோரத்து மரங்கள்


அந்தப்பக்கம் பூக்காதே,
அங்கெல்லாம் காய்க்காதே, 
சொந்தமாயிருந்ததெல்லாம் 
நேற்றோடு முடிஞ்சுபோச்சு...  

வேலியோர மரத்திடம் 
விளக்கிச் சொல்ல முடியாமல், 
முள்கம்பி போட்டு 
முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா... 
 
ஆனாலும், 
வாடிநின்ற தருணத்தில் 
பகிர்ந்துகொண்ட நீருக்காக, 
கண்ணுக்குத் தெரியாமல் 
உறவாடிக்கொண்டன, 
மண்ணுக்குக்கீழ் வேர்களும் 
மௌனமாய்ச் சில மனங்களும்!