புதன், 1 ஜூன், 2011

சேலைச் சண்டை

என்றைக்கும்போல,
அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது
சேலைச் சண்டை...

குளித்துத் தலைதுவட்ட
வருத்தம்வந்தால் முகம்புதைக்க,
அம்மா இல்லாத குழந்தைகளுக்கு
அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை
அந்தச் சேலைகள் மட்டுமே...

பச்சைச்சேலை எனக்குத்தானென்று
பற்றியிழுத்த இருவரின் கைகளையும்
விலக்கிவிடும் நோக்கத்தில்
வாசல்வரை வந்துவிட்டு,
உலுக்கிய குரலுக்கு
உள்ளே போனார் அப்பா...

அங்கே,
அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன
இன்னுமொரு சேலையால்.