இடுகைகள்

இயற்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைக்காலத்து மலர்கள்!

படம்
மழைக் காலத்து மலர்கள்! மெல்ல மழை விலக, வானவில் தோரணத்தை வளைத்துக் கட்டியது வானம்... அதன், வண்ணக் கலவையில் எண்ணம் மயங்கிப்போய், அதில், கொஞ்சத்தைத் திருடியது குளிர்ந்த மழைக்காற்று... கன்னமிட்ட வண்ணத்தைக் கறைபடாமல் ஒளித்துவைக்க, நல்ல இடம் தேடி நாளெல்லாம் அலைந்தது... காட்டுச் செடிகளின் கன்னத்தை வருடிவிட்டுக் கேட்டு இடம்வாங்கிக்  கிளைகளுக்குள் புகுந்தது... வாரிச் சுருட்டிய வண்ணக் கலவையை வேருக்கு வெகு அருகில் புதைத்துவிட்டு எழுந்துவர, தன்னை வருடிய காற்றின்மேல் காதலுற்று, சில்லென்று பூத்துச் சிரித்தது பூக்காடு!               ***

நான்...இயற்கை பேசுகிறேன்!

படம்
எங்கு பார்த்தாலும் புலம்பல் இப்படியா பெய்வதென்ற குமுறல்... வெள்ளம் என்கிறீர்கள் வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்... உள்ளும்புறமும் தண்ணீரென்று ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்... ஆனால், என்ன குற்றம் செய்தேன் நான்? வா வா என்று வருந்தி அழைத்தீர்கள்... வாடுது பயிரென்று வயலில் நின்று விம்மினீர்கள்... கடவுளே, உனக்குக் கண்ணில்லையா? என்று கையை நீட்டிக் கதறினீர்கள்... கடனைக் கட்ட வழியில்லாமல் கடிதம் எழுதிவிட்டுக் கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்... கோயில் கண்ட இடமெல்லாம் யாகத்தீ வளர்த்தீர்கள், மழைக்காக ஜெபித்தீர்கள், தொழுகையில் அழுதீர்கள்... கழுதைக் கெல்லாம் கல்யாணம் பண்ணிவைத்து வெய்யில் வானத்தை வெறித்து நின்றீர்கள்... மரங்களுக்குப் பதிலாக மாடிவீடாய் அடுக்கிக்கட்டி இறங்கிவந்து அனைவருமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்... ஏரிகளில் இடம்வாங்கி எடுப்பாய் வீடுகட்டி ஏசி போட்டு மாளவில்லை எப்போ வரும் மழையென்றீர்கள்... இத்தனையும் கேட்டுவிட்டு எத்தனை தவிக்கிறீர்களென்று, ஐயோ என இரங்கி ஆறுதலாய்ப் பொழிகையில், குளமாகுது ஊரென்று குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...

குளக்கரை விடியல் (ஒரு இயற்கை ஓவியம்)

படம்
இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்...  சூரியக்கதிர் வருடச்  செவ்விதழ் விரித்தது  தண்ணீர்க் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது சந்திரனைக் காதலிக்கும் அல்லி...  அல்லிக் குளத்தினில்  வெள்ளிச் சிதறல்கள்  துள்ளித் திரிகிற மீன்கள் ... மீன்களைப் பார்த்ததும்  மோகம் பெருகிவர  மோனத் தவமியற்றும் கொக்கு...  கொக்கிற்குப் போட்டியாய்  குளக்கரையில் தவமிருக்கும்  ஒற்றைக்கால் அரசமரம்...  அரசமரத்தடியில்  அசையா நெடுந்தவம்,  அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை! ********* (இது ஒரு மீள்பதிவு)

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!

படம்
படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் சருகு, நீளமான மழைநாளில் நிமிஷநேரச் சூரியன், தூரிகையில் மாயம்செய்யும் துளியளவு தண்ணீர், மனம்நிறைந்த மகிழ்ச்சியில் முகிழ்த்துவரும் கண்ணீர், இருளணிந்த மலையினில் எங்கோ தெரியும் விளக்கு... கருநீல வானத்தில் கதிர்முளைக்கும் கிழக்கு, வழிநடந்த பாதத்தை வருடிவிடும் புல்மடி, மார்கழிப் பூக்களின்  மடிதுயிலும் மென்பனி, கூடித்திளைத்த பின் கொஞ்சநேரத் தனிமை, காதலின் மொழியோடு கலந்துவரும் ஒருமை, இவையனைத்தும் ரசித்தபின்னும் எழுதுவதைக் கவிதையென்பது எந்த ஊர் நியாயம்? ***

குளக்கரை விடியல்!

படம்
  இத்தனைபேர் சுற்றிவர அத்தனை அழகா நான்!? மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... சூரியக்கதிர் வருடச் செவ்விதழ் விரித்தது தண்ணீர் குளத்துத் தாமரை... தாமரை இதழ்விரியத் தன் முகம் புதைத்தது நிலவுக்கு ஏங்கிடும் அல்லி... அல்லிக் குளத்தினில் வெள்ளிச் சிதறல்கள், துள்ளித் திரியும் மீன்கள்... மீன்களைப் பார்த்ததும் மோகம் பெருகிட மோனத் தவமியற்றும் கொக்கு... கொக்கிற்குப் போட்டியாய் குளக்கரையில் தவமிருக்கும், ஒற்றைக்கால் அரசமரம்... அரசமரத்தடியில் அசையா நெடுந்தவம், அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!