இடுகைகள்

கவி்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாம்...அம்மாவால வந்தது!

படம்
அப்பா, உனக்கு எப்போ தொப்பை வந்திச்சு? உங்கம்மா வந்ததுக்கப்புறம்... உச்சந்தலையில வழுக்கை? அதுவும் கூட, அம்மா வந்தப்புறம்தான்... கிட்டப்பார்வைக் கண்ணாடி? எத்தனை தடவை அதையே நான் சொல்லுறது? வாசல்ல நிக்கிற வண்டி? ............ 'அதுவும் அம்மாவாலன்னு அழுத்தமாச் சொல்லுங்க' -அடுப்படியிலிருந்து வந்தது குரல்... அதெல்லாம், சொன்னாப் புரியாது சீக்கிரம்போய் தூங்கு நீ, செல்ல மகளை மெல்ல நகர்த்தினான் அவன்! படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

தூண்டில் மனிதர்கள்!

ஏனென்ற தூண்டிலும் எப்படியென்ற இரையுமாய் கிட்டவந்து உட்காரும் கேள்விக்குறி மனிதர்கள்... வெள்ளந்திப் பேச்சு விலையில்லாச் சிரிப்பு கிள்ளிவிட்டு மெள்ளமாக வருடிவிடும் நாசூக்கு... கள்ளெடுத்துத் தோய்த்துக் கொக்கியைக் களமிறக்க, உள்மனசின் வருத்தமெல்லாம் உருகி வெளிக்கிளம்ப, ஒவ்றொன்றாய்ப் பிடிபடும் உள்ளத்து மீன்கள்... இறக்கிவைத்த வேதனையால் இதயம் தெளிந்தாலும் கிடைத்துவிட்ட விஷயங்களால் கள்ளமனம் கூத்தாடும்... மாதச் சருகுகள் வருஷமாகி உதிர்ந்துபோக, மனம்விட்டுப் பேசியதே மறந்துபோன தருணத்தில், பிடிபட்ட மீன்களை வடிவமாய் அலங்கரித்து, உறவுக் கூடத்தில் ஒவ்வொன்றாய் ஏலமிடும்... கேள்வியுற்ற விஷயத்தால் கொதிப்படைந்து போனாலும், முற்றிலுமாய் நம்பாத நல்ல இதயங்கள் சுற்றிவந்து நம்மிடமே கொட்டிப் புலம்பிநிற்க, மாட்டிக்கொண்ட மர்மம் மனசுக்குப் புலப்படும்... கெட்டோம் நாமன்று கேள்விகளா லென்றஎண்ணம் புத்தியில் தைத்துப் புலப்படும் வேளையில், எல்லாமே முற்றிப் போயிருக்கும் முடிச்சிறுகி வலிகொடுக்கும்... அதனால் கிட்டவரும் தூண்டில்கள் பற்றிக்கொள்ளும் முன்பாக, எச்சரிக்கையா யிருத்தல...

மங்களூர் விமான நிலையம்

வருகிறவர்களை வரவேற்க, ஆசையும் பாசமும் வாடகை வண்டியுமாய் வாசல்பக்கம் காத்திருந்தார்கள் வந்த உறவினர்கள்... ஆனால், பாசக் கயிற்றினைப் பாதையெங்கும் விரித்தபடி, ஓடுபாதையிலேயே உறங்காமல் காத்திருந்தான் எமன்!

ஒன்றோடு ஒன்றைக்கூட்ட...

படம்
வேண்டாம்...முடியாது லீவெல்லாம் கிடைக்காது... இதுக்குப்பட்ட கஷ்டமே இன்னும் மறக்கல, புதுசா வேறயா? போதும்டா சாமீ... எதுக்குத்தான் இப்பிடி அடம்பிடிக்கிறீங்களோ? அண்ணன் தங்கை எல்லாம் இருந்தும் என்னத்தைக் கண்டீங்க? பரிதாபமா பாத்துப்பாத்தே படுத்துறீங்க நீங்க... பாத்துக்க யாரும் பாலைவனத்துக்கு வரமாட்டாங்க, சோத்துக்கு நீங்க திண்டாடிப்போவீங்க... சரி,புள்ளைகிட்ட கேட்கலாம் வேணுமா வேணாமான்னு... ஒண்ணும் வேண்டாம் பொம்மையெல்லாம் கேட்கும், அழுது அழுது அம்மாவைப் படுத்தும்... கண்ணே நீ வாடான்னு கட்டி முத்தம்வைக்க, ஒண்ணே போதுமென்று முடிவாகிப்போனது வீட்டில்!

தனிக்குடித்தனம்

படம்
இருக்கவும் முடியல இருந்து உடல்வலித்தாலும் படுக்கவும் முடியல... ஏழுமாத வயிற்றை இடையிடையே நீவிக்கொண்டு முதுகுசாய்ந்து அமர்ந்தபடி மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்... உறக்கம் தொலைந்துபோக கலக்கம்பிறந்தது மனதில்... பற்றிக்கொண்ட பதட்டத்துடன், நெற்றிக்கு இட்டுவிட்டு, மற்றென்ன செய்வதென்று மனசுக்குத் தோன்றாமல் கண்ணோடு கண்பார்த்து கைப்பிடித்து நீவிவிட்டான்... நீவிய கைகளின் நடுக்கம் புரிந்தவளாய் ஓரச்சிரிப்போடு அவன் விரல்களை இறுகப்பற்ற, அன்னையும் தந்தையுமாய் அடுத்தவரைத் தேற்றத்தேற்ற சின்னதாகிப்போனது இரவும் இயலாமையும்!

மனிதக் கூடுகள்

படம்
நெட்டையாக வளர்ந்திருக்கும் கட்டிடக் காடுகள்... ஒற்றைவீட்டு இடப்பரப்பில் கற்றையாக வீடுகட்டி பெட்டி நிறைக்கின்ற பட்டணத்து வித்தைகள்... சட்ட மடித்துவைத்த கைப்பிடிச் சுவற்றினில் கட்டிடத்துக் கிழிசல்களாய் அசைந்துகாயும் ஆடைகள்... ஒட்டிவைத்த வாசல்கோலம் தொட்டிவைத்த குறுஞ்செடிகள் தீப்பெட்டிக் குச்சிகளாய் அடுக்குகளில் மனிதர்கள்... ஊஞ்சலாடும் பால்பைகள் ஓடியாடும் பிள்ளைகள் மாடிவீட்டுச் சன்னல்களில் முகம்தேடும் இளைஞர்கள்... தோளுரசிச் சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமாய்ப் படியிறங்கும் வேலைநேர மனிதர்கள்... அடுத்தடுத்து வாசல்கள் அழுத்தமான நிஜமுகங்கள் ரசனைகளைத் தொலைத்தபடி நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

கோபங்கள் கலைகையில்...

படம்
யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே... விகடனுக்கு நன்றி! கோபங்கள் கலைகையில்... **************************** இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்கிற இடுப்புக் குழந்தையாய் அழுத்தமாயிருந்தது கோபம்... தோற்கிற அறிகுறிகள் தென்பட்ட மாத்திரத்தில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் எரிச்சல் அழுகுரலாய் வெடித்துக்கிளம்பியது கண்ணீர்... கண்ணீர் துடைத்துவிட்ட கைகளின் ஸ்பரிசத்தில் மெல்லப் புரிந்தது முழுமையான கரிசனம்... கரிசனத்தின் பிடியில் கர்வங்கள் கழன்றுவிழ, இழுத்தணைத்துக்கொண்டு தோளில் விம்மியது அன்பு!

உறவுக் கயிறு

படுமுடிச்சுப் போட்டுவிட்ட பள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி முன்னால்வந்து நீட்டுவாய்... போடீ, முடியாதென்று பொய்க்கோபம் காட்டினாலும், ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால், ஓடிவந்து அப்போதே அவிழ்த்துவிடுவேன் நான்... இன்றும் முடிச்சினால் திணறுகிற கடினமான வாழ்க்கைதான் உனக்கு... கண்தோய்ந்த கண்ணீரும் கையிலொரு பிள்ளையுமாய் அவ்வப்போது நீ எந்தன் கண்ணில் படுகிறாய்... ஆனால், முடிச்சு இறுகுதென்று நீயோ, இருக்கிறேன் அண்ணனென்று நானோ, சொல்லிக்கொள்ள முடியாதபடி என்னவோ தடுக்கிறது... ஒற்றைப் புன்னகையும் ஒருசில வார்த்தைகளுமாய் விட்டுவிலகிப்போகிறோம்... ஆனால், எட்டிச்சென்றபின் முட்டுகிறது மனசு... ஒன்றாய்ப் பிறந்த நம் உறவின் அடர்த்தியை எங்கே தொலைத்தோம் இடைப்பட்ட நாட்களில்!???

கல்யாண பாக்கியம்!

படம்
பொழுது விடியுமுன்னே நடந்தது பாக்கியத்தின் கல்யாணம்... அழகாயிருந்த ஒரு அம்மியை மிதிக்கச்சொல்லி, அருந்ததியைக் காட்டுகையில் இருட்டுத்தான் தெரிந்தது... மெட்டிபோட்ட நிமிஷத்தில், அங்கே குட்டிப் பூகம்பம்... காலில், தங்கக்கொலுசு இல்லையென்று நாத்தனார் குரலெழுப்ப, கண்ணில் நீர் சுமந்தவளின் கையைப் பிடித்துக்கொண்டு, கல்யாண மேடையைக் கரகரவென்று சுற்றிவந்தது ஒரு கூட்டம்... எட்டிநின்றவர்கள் வீசிய பூக்கள் கிட்டத்திலிருந்தவர்களின் கோபப் பார்வைபட்டுச் சுட்டதுபோலிருந்தது அவளுக்கு... மணமகன் அறைக்குள் வந்ததும் மாமியார் சொன்னார், பாக்கி நகைபோடாம பால்பழம்கூடக் கிடையாது என்று... பதைத்துத் திரும்பினாள் பாக்கியம்... பக்கத்தில், பிடித்துவைத்த பிள்ளையாராய்ப் பேசாமலிருந்தான், பத்துநிமிஷம் முன்னால் அவள் பாதம் பிடித்த மாப்பிள்ளை!

சட்டைக்குள் புகுந்துவிட்ட அட்டைகள்!

அட்டை கடித்துவிட்டால் அதிக ரத்தம் போகுமென்று தீயால் சுட்டுப் பிரிப்பார்கள்... ஆனால் இன்று, சட்டைப்பை முழுக்க அட்டைகளின் ராஜ்ஜியம்... சுட்டுப் பிரிக்கவோ எட்டிக்கடக்கவோ முடியாமல் வட்டிக்குள் புதைகிறது வாழ்க்கைப் போராட்டம்.

முகவரி

படம்
தன்னுடைய முகவரியை உலகுக்கு உணர்த்த எண்ணி ஓடிக்களைத்த அவன் திரும்பிப் பார்க்கிறான்... முகச்சுருக்க வரிகளால் அவனுடைய முகமே அவனுக்கு வித்தியாசமாய்...