இடுகைகள்

குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவளும் தாயானாள்!

படம்
தாய்மைக் கென்றே  சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே  ஒரு  வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ  மாபெரும்  மகிழ்ச்சி வரும்...  தோளிலே பிள்ளையுடன்  தெருவிறங்கி நடக்கையில்  முன்னெப்போது மில்லாத   ஒரு தன்னம்பிக்கை தானேவரும்... தாயின் கரம்பிடித்துத்  தான் நடந்த மகளொருத்தி  தன்னையும் அதுபோல உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது... அட, என்னை விடுங்கள்... அது  அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில்  ஆச்சர்யம்தான் மிஞ்சியது... பிறந்ததிலிருந்தே அவளைப் பார்த்துப் பரிச்சயமுண்டு, பெற்றவளின் பின்னாலேயே  சுற்றிச்சுற்றி வருவாள்...  ஆனால், என்னவோ தெரியவில்லை... என்னுடைய குரல் மட்டும் ஏனோ  அச்சுறுத்தும் அவளை... உடன்பிறந்த இரண்டுபேரும் வளர்ந்து இடம் பெயர்ந்தாலும் அவளுக்கு மட்டும்  எப்போதும் அம்மாதான்... சட்டென்று ஒருநாள் சன்னல...

சேலைச் சண்டை

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே... பச்சைச்சேலை எனக்குத்தானென்று பற்றியிழுத்த இருவரின் கைகளையும் விலக்கிவிடும் நோக்கத்தில் வாசல்வரை வந்துவிட்டு, உலுக்கிய குரலுக்கு உள்ளே போனார் அப்பா... அங்கே, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன இன்னுமொரு சேலையால்.

ஃபைவ் ஸ்டார்!!!

படம்
"அப்பா, மிச்சம் காசிருந்தா மூணு ஃபைவ் ஸ்டார்..." கத்திச்சொல்லிவிட்டுக் கதவுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டது கடைக்குட்டி... சட்டைப்பை காலியாயிருக்க, கடனுக்கு அரிசிவாங்கக் கடைக்குப் புறப்பட்டவன், "அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார், அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்... அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க, அப்புறம் எதுக்கு இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?" என்று, இடக்காய்க் கேட்டுவிட்டுத் திரும்பாமல் நடந்தான்... சுருங்கிய பிஞ்சின் முகத்தைப் பார்க்காமலும், அரும்பிய கண்ணீரை அடுத்தவர்க்குக் காட்டாமலும்...

ஈசலுக்கும் இரங்கும்!

படம்
உதிர்த்துப் போட்ட சிறகுகளுக்கு மத்தியில் உருண்டு கொண்டிருந்தது ஈசல்... வீடெல்லாம் குப்பையாக்கிட்டு விழுந்துகிடக்குது பார்... என்று, விளக்குமாறை எடுத்துவந்து வீடுகூட்டப்போனாள்  அம்மா... அதுவே, அம்மாகிட்ட போகமுடியலேன்னு அழுதுகிட்டிருக்கு, நீ  சும்மாயிரு அம்மா... கன்னத்தில் கைவைத்துக் கவலையுடன் சொன்னது குழந்தை...

தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!

படம்
தூரமா யிருக்கிறப்ப  தெருவுக்கெல்லாம் கூடாது,  ஓரமா உக்காந்து  பரமபதம் ஆடென்று  காரமாய்ச் சொல்லிவிட்டுக்  கண்ணை உருட்டியது பாட்டி...  வேறெதுவும் பிடிக்காமல்  வெற்றுத் தாளெடுத்துவைத்து,  சுற்றிக் கோடுபோட்டு  ஸ்ரீராம ஜெயம் எழுத,  கெட்டுதுபோ குடியென்று  பட்டென்று பிடுங்கிவிட்டு,  சுத்தமாகிற வரைக்கும்  சாமியெல்லாம் வேண்டாம்,  குத்தமாகிப் போகுமடி  என்று பயமுறுத்த,  தூரமாகிப்போனது  சாமியுமா என்று  பாரமாகிப்போன மனதுடன்  பாயில்போய் விழுந்தது,  பெரியவளாகிப் போன  பத்துவயசுச் சின்னப் பூ. *****

பிள்ளையெனும் பேரன்பு!

படம்
சுவற்றில், முட்டிமுட்டித் திரும்புகிற குட்டிப் பந்துடன் பேசியபடி, எட்டிஎட்டிப் பார்க்கிறாய் என்னை... தட்டிலூற்றவேண்டிய மாவைத் தரையில் ஊற்றினாலும் தடுமாற்றம் காட்டாமல் எனக்குள்ளே சிரிக்கின்றேன் நான்... ரெண்டு விரலை நீட்டி ஒன்றைத்தொடு என்று ஒன்றுமே நடக்காததுபோல் முன்வந்து முகம்பார்க்கிறாய்... கண்களைத் தவிர்த்துவிட்டுக் கடந்துபோக எத்தனிக்கையில், பின்னாலிருந்துகொண்டு புடவையை இழுக்கிறாய்... சொன்னபடி கேட்காமல் சங்கடப் படுத்திவிட்டு, இன்னும் ஏன் வதைக்கிறாய் என்றபடி திரும்புகிறேன்... உன் கண்ணாடிக் கண்கள் கருணையை யாசிக்க, முன்னாடி நிற்கின்றாய்... உருக்கிடும் பார்வையில் இறுக்கம் தொலைந்துபோக, இணக்கமாய்ச் சிரிக்கிறேன்... கையணைத்துச் சிறுஇதழால் கட்டி முத்தமிட்டு, சின்ன விரல்களால் என் முகம் தொட்டுச் சொல்கிறாய்... உன்னோடு பேசாத வருத்தத்தைக் காட்டிலும், புத்தகப் பாடமொன்றும் அத்தனை கஷ்டமில்லை... இனி, நன்றாய்ப் படிக்கிறேன் நம்பு அம்மா என்கிறாய்... என்னுயிரே இறங்கிவந்து உன்வடிவில் கெஞ்சிநிற்க, கண்கள் பனித்தபடி கனிந்து நிற்கிறேன் அன்னையாக!

கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும்!

ஊருக்கு வருகிறேனென்று உறவுகளை அழைத்துச்சொல்ல, ஆளுக்கொரு பொருள்கேட்டு அடுக்கடுக்காய் அழைப்புகள்... பவுனாக வாங்கிவந்தால் பெருமையாக இருக்குமென்று மாமியார் சொன்னபோது பணக்கணக்குப் போட்டது மனசு... அடுத்து, பேத்தியிடம் கேட்டார்கள், இந்தியா வந்ததும் உனக்கு என்னவேண்டுமென்று... சின்னமகள் சொன்னாள், கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும் என்று!!!

இருவகை இரவுகள்

படம்
குற்றாலம் கொடைக்கானல் குமரகம் குலுமணாலி எப்போ பார்த்தாலும் இதே இடங்கள்தானா? எந்தஊரும் பிடிக்கல என்றுசொல்லிக் கதவடைத்து, உறக்கமின்றிப் புரண்டது 'இருக்கிற' வீட்டுப்பிள்ளை... வானத்துக்கூரை வருடுகிற மென்காற்று ஓலமிடும் ஆந்தைச்சத்தம், ஊடே ஒரு மழைத்துளி தூரத்து இடிமுழக்கம் ஊளையிடும் நாயின்சத்தம் இவற்றோடு, அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அருகாமையும்சேர, கனவில், காகிதக் கப்பலோட்டிக் கண்டமெல்லாம் சுற்றிவந்தது சாலையோரத் தொழிலாளியின் சட்டையில்லாத பிள்ளை.

பூக்களைச் சிதைக்காதீர்கள்!

என்றைக்கும்போல் அவன் இரைந்து கொண்டிருந்தான் அவளைச், 'சண்டைக்கு வாடி' என்றழைக்கிற தோரணையில்... "இன்றைக்கும் என்னிடத்தில் தோற்பாய் நீ" என்பதுபோல், கண்டுகொள்ளாமல் கர்வமாய் அவன் மனைவி... ஒன்றுக்கும் உதவாத ஆணவத்தைக் கட்டிக்கொண்டு தினம் சண்டைக் காட்சிகளை அரங்கேற்றிப் பார்த்திருக்க, காதலும் கனிவுமாய் அமைத்துக்கொண்ட வாழ்க்கை இன்று, துடுப்புகளைத் தொலைத்துவிட்டுச் சுற்றுகிற படகாக... எந்த நேரத்தில் மூழ்குமோ என்று அஞ்சி, சொந்தங்கள் தேடிப்போய் பெற்றவர்கள் சொல்லியழ, இவை எதுவுமே புரியாமல், தாய்மடியின் வெறுமையில் துவண்டுபோன கன்றுகளாய், யார்மடியில் புதையவென்று புரியாமல் தவிக்கிற பிள்ளைகள்... இப்படியே, காசும் கர்வமும் சபலமும் சங்கடமுமாய் வீட்டுக்குள் வெடிக்கிற போராட்டச் சத்தத்தில், ஒடுங்கிப் போகின்றன ஒன்றுமறியாத சின்னப்பூக்கள்.