இடுகைகள்

குடும்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவளும் தாயானாள்!

படம்
தாய்மைக் கென்றே  சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே  ஒரு  வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ  மாபெரும்  மகிழ்ச்சி வரும்...  தோளிலே பிள்ளையுடன்  தெருவிறங்கி நடக்கையில்  முன்னெப்போது மில்லாத   ஒரு தன்னம்பிக்கை தானேவரும்... தாயின் கரம்பிடித்துத்  தான் நடந்த மகளொருத்தி  தன்னையும் அதுபோல உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது... அட, என்னை விடுங்கள்... அது  அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில்  ஆச்சர்யம்தான் மிஞ்சியது... பிறந்ததிலிருந்தே அவளைப் பார்த்துப் பரிச்சயமுண்டு, பெற்றவளின் பின்னாலேயே  சுற்றிச்சுற்றி வருவாள்...  ஆனால், என்னவோ தெரியவில்லை... என்னுடைய குரல் மட்டும் ஏனோ  அச்சுறுத்தும் அவளை... உடன்பிறந்த இரண்டுபேரும் வளர்ந்து இடம் பெயர்ந்தாலும் அவளுக்கு மட்டும்  எப்போதும் அம்மாதான்... சட்டென்று ஒருநாள் சன்னல...

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது... அதற்கிடையில் விருந்துக்கு வந்த மகள் விழிகலங்கித் திரும்பிப் போனாள்... விடுதியிலிருந்து வந்த மகன் வெறுத்து முகம் கறுத்துப்போனான்... வந்த மருமகள் என்னதான் செய்கிறாளென்றால், பெருமையாய்ப் பேசுகிறாள், உரிமையெடுத்துக்கொள்கிறாள், மாமியாரின் மளிகைக் கணக்குமுதல் மாமனாரின் வங்கிக் கணக்குவரை... ஆனாலும், மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு... வருகிற தீபாவளிக்கு வந்துபோங்கள் என்று மகனையும் மகளையும் மறுபடியும் கூப்பிட்டாள்... திரும்ப வந்து விசனப்படத் திராணியில்லை என்றும், தின்பண்டம் ஏதும் செய்தால் கொடுத்தனுப்பு என்றும் மகளும் மகனும் தொலைபேசி பதிலுரைக்க, கலங்கிப்போன கண்களுடன் கால்நீட்டி அமர்ந்தாள்... அதற்குள் தலைதீபாவளிக்குப் போகிறோம் ஆசிகொடு அம்மா என்று பேசியபடி பாதம்தொட்டான் மகன், யோசித்தபடி அருகில் நின்றாள் மருமகள்... எழுந்து நின்ற மீனாட்சி, ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள், "நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல,  எப்பவும்போல இப்பவும் சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தாயின் விழிகளை அளந்த சின்னவனின் கேள்வியும், "டப்பாவுல இருந்த மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி, அப்பறமா முடிஞ்சா வாங்கிட்டு வா தாயி..." எனும் மாமனாரின் இறைஞ்சலும், தப்புத்தான்  அம்மா நான் கணக்கில ஃபெயிலானது எப்பம்மா எனக்கு நீ டியூஷன் வைக்கப்போறே? என்ற சுப்புவின் கேள்வியும் உந்தித் தள்ள, இடைவிடாமல் சுற்றிய இயந்திரத்தோடு இயந்திரமாய் இட்டிலி மாவை அரைத்துக்கொண்டிருந்தாள், ஆட்டிப் படைக்கிற விதியினைத் தோற்கடிக்க ஆட்டி விற்கிற தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!

கடவுள் வேலை!

என்னவேலை கொடுத்தாலும் செய்கிறேனென்று வந்தவனிடம் சின்னதொரு வேலைதான் செய்கிறாயா என்றேன்... கண்கள் மின்னக்கேட்டான் "என்ன வேலை சார்?" என்று... நிழலிலே வேலை நேரமெல்லாம் கணக்கில்லை, பிடித்ததைச் சாப்பிடலாம் நினைத்தபோது  தூங்கலாம்... ஏ சி யில் இருக்கலாம், எல்லாச் சேனலும் பார்க்கலாம், ஆசையிருந்தால் பாடலாம், பாடிக்கொண்டே ஆடலாம்... வீட்டுச் செடிகளையும் வளர்க்கிற நாய்களையும் நாட்டமாய்ப்  பராமரித்து நாள்முழுக்க ரசிக்கலாம்... காலையில் காப்பியும் கார்ன் ஃப்ளேக்ஸும் தந்துவிட்டு, மத்தியான சமையலையும் மணி எட்டரைக்குள் முடிக்கலாம்... சாப்பாட்டுக் கூடையில் சமைத்ததை எடுத்துவைத்து, ஆபீசுக்குக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் சிரமமில்லை... எப்போது விருப்பமோ அப்போது சலவைசெய்து, அழுக்கெல்லாம் பெருக்கிக்கூட்டி, அங்கணத்தைச் சுத்தம்செய்து, விருப்பமான தேநீரை நான் வீடுவருமுன் போட்டால்போதும்... இறுக்கம் குறைந்து நறுக்கென்று சுவைப்பதற்கு ரெண்டேரெண்டு மசால் வடை... மற்றபடி, உனக்கும் எனக்கும் சேர்த்து இருக்கிறதில் எளிதான இரவுசமையல் போதும்... விருப்பமென்றால் ...

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்!

அப்பா வரவுக்கும் செலவுக்குமிடையில் வட்டிக்கணக்குப் பார்த்தபடி புட்டிக் கண்ணாடி வழியாகப் பிள்ளைகளின்  எதிர்காலத்தைத் தேடுபவர்... சட்டென்று கோவப்பட்டாலும் சம்சாரத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பு... அம்மா அக்கறை காட்டுகிறேனென்று அவஸ்தைப்படுத்துபவள் அவ்வப்போது, அன்பில் கரைத்தும் அழவைப்பவள். தப்பென்று தெரிந்தாலும் தன்மையாய்ப் புரியவைப்பவள்  அப்பாவுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் எப்போதும் தவிக்கும் இருதலைக்கொள்ளி எறும்பு... அக்கா petty cash படியளப்பதில் பெரிய மனசுக்காரி, சிலசமயம், தட்டிக்கேட்பதில் தாய். தம்பி போட்டுக்கொடுக்கவென்றே வீட்டிலிருக்கிற ராட்சசன்... மூத்தவனை முட்டாளாக்க இளையவனாய்ப் பிறந்துதொலைத்த எதிரி!  *****

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சேலைச் சண்டை

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே... பச்சைச்சேலை எனக்குத்தானென்று பற்றியிழுத்த இருவரின் கைகளையும் விலக்கிவிடும் நோக்கத்தில் வாசல்வரை வந்துவிட்டு, உலுக்கிய குரலுக்கு உள்ளே போனார் அப்பா... அங்கே, அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன இன்னுமொரு சேலையால்.

நானும், அப்பாபோல...

படம்
அப்பாபோல நானும் பெரியவனாகி... என்று அக்காவிடம் ஆரம்பித்தவன், அப்பாவைப் பார்த்ததும் வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்... அருகழைத்துக் கேட்டார் அப்பா... நீயும் அப்பா போல, வாத்தியார் ஆவியா? .... புல்லட் பைக் ஓட்டுவியா? ..... வேஷ்டி சட்டை போட்டுப்பியா? .... சொல்லுடா என் செல்லமகனே... 'அம்மாவை அடிச்சு அழ வைக்கமாட்டேன் ' என்றபடி, அழுதபடி நகர்ந்துபோனான் மகன். ***** **13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!

வந்த காலோடு வீட்டுக்குக் கிளம்புறியே, இருந்து ஒருவாய் சாப்பிட்டுப்போ அண்ணே... உரக்கச்சொல்ல நினைத்ததை உள்வாங்கிக்கொண்டு, முறைப்புக்கு அஞ்சி முனகலாய் வெளிவந்தது குரல்... மறுக்கத் தோன்றாமல் அவளை மறுபடியும் பார்த்தான் அண்ணன்... இருக்கிற போதெல்லாம் கொடுத்துப் பழக்கியவன், இல்லையென்று சொன்னபோது செல்லாக் காசாய்த் தெரிய, பிறந்தவீட்டு உறவெல்லாம் போதுமென்றானது... நெருக்கமான உறவில் நூறுபேர் இருந்தாலும், பொருத்தமானவன் இவனென்று பேசி முடித்தவனை, இன்றைக்கு உபசரிக்கக் கூடாதென்று உத்தரவும் போட்டது... மறைத்துக்கொண்ட முகத்தை மறந்தும் விலக்காமல், பத்திரிகைக்குள் புதைந்திருந்த பாசக்கார மாப்பிள்ளையிடம், பத்திரமாய்த் தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வைத்துவிட்டுப் போனான் அண்ணன் அழைப்பிதழ் ஒன்றை... உள்ளே, நல்வரவை விரும்புபவள் அவளாக இருந்தாள், அவள் உறவே அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

உறுத்தலில் உருவாகி...

மனசுமுதிராத முன்னிருபதுகளில் ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மாலையிட்டவள் அவள்... காலையில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம் நிலைமாற முன்னேறி நடந்தாலும் குற்றமென்று, கண்ணால் சுட்டெரித்த கனலுக்குக் கட்டுப்பட்டுப் பெண்ணாக மண்டியிட்ட பேதைப் பிறவியவள்... எண்ணிக்கைக் கடங்காத இருட்டுக் கதைகளை, எண்ணியெண்ணி அழுதிருந்தால் இருண்டிடும் வாழ்க்கையென்று, எல்லாவற்றையும், மண்ணாகிப்போன தன் மனசுக்குள் புதைத்தவள்... எண்ணைந்து வயசுகளின் இறுதிப் பிராயத்தில், பெண்ணென்றால் இவளென்று அவள் பொறுமையைச் சிரசிலேற்றித் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தேடிவந்தன உறவுகள்... உறுத்தி உறுத்தியே ஓய்ந்துபோன உறவுக்கும்கூட, மருத்துவம் சொல்லி மனதை மாற்றுமளவுக்குப் பக்குவப்பட்டுப் போனது அவளது அப்பழுக்கில்லாத மனசு... எப்படிப் பார்த்தாலும் இவளுடைய பெருமைக்கு மொத்தக் காரணம் எப்பவும் நான்தானென்று கண்ணீரைமீறி ஓர்நாள் உண்மை கரைபுரள, அங்கே, புடமிட்ட பொன்னில்கோர்த்த வடமாக ஜொலித்தது முத்து!

தீபாவளி வேட்டு!

கோட்டுப்போட்ட கிறுக்கனொருத்தன் கத்தியோட அலையிறானாம், வீட்டைவிட்டுப் பிள்ளைகளை வெளிய அனுப்பாதே... போனஸ் பணம்கேட்டு போராட்டத்துக்குக் கிளம்பியவன், ஜாடையாய்க் கூப்பிட்டு, சத்தமாய்ச்சொன்னான் மனைவியிடம்... கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் கிலியோடு முகம்பார்க்க, கதவைப் பூட்டியவள் மெல்லமாய் மனசுக்குள் முணுமுணுத்தாள்... வீட்டுச் சுவற்றுக்குள் அடைஞ்சு கிடந்தாலும், வேட்டும் விமரிசையும் காதில் விழாமலா இருக்குமென்று...

ஒற்றை மனுஷியும் கற்றை எதிர்பார்ப்புகளும்

காலையிலிருந்து, கண்ணாடியைத் தேடுறேன், எடுத்துத் தரணும்னு யாருக்கும் தோணலை, கடுப்பாகச் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார் தாத்தா... என்னோட வீட்டுப்பாடத்தை எப்பதான் சொல்லித்தருவே? எழுதுகிற ஏட்டிலிருந்து கழுத்தைத் திருப்பி, ஏறிட்டுப் பார்த்துவிட்டு வீறிட்டான் தம்பி... சட்டையைத் துவைக்கச்சொன்னேன் அதைத்தான் செய்யவில்லை, இஸ்திரிபோட்டாவது எடுத்துவைத்திருக்கலாம் கட்டைக் குரலில் கத்திக்கொண்டிருந்தான் அண்ணன்... நாளைக்கும், இட்டிலி யென்றால் என்னை விட்டுவிடு, பட்டினியாய்க் கூடப் பள்ளிக்கூடம் போகிறேன், எட்டிப்பார்த்துவிட்டு எரிந்துவிழுந்தாள் அக்கா... ஒற்றைத் தலைவலி உலுக்கியெடுத்தாலும் தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு கருமமே கண்ணாயிருந்தாள் அம்மா... கிட்டப்போய் அருகிருந்து நெற்றியை வருடிவிட்டு, சற்றுநேரம் படு அம்மா சரியாப்போயிடும் என்றேன், கட்டிக்கொண்டாள் என்னை... என் சட்டையை நனைத்தது அவள் கண்ணீராயிருக்குமோ??? -சுந்தரா

எல்லாம்...அம்மாவால வந்தது!

படம்
அப்பா, உனக்கு எப்போ தொப்பை வந்திச்சு? உங்கம்மா வந்ததுக்கப்புறம்... உச்சந்தலையில வழுக்கை? அதுவும் கூட, அம்மா வந்தப்புறம்தான்... கிட்டப்பார்வைக் கண்ணாடி? எத்தனை தடவை அதையே நான் சொல்லுறது? வாசல்ல நிக்கிற வண்டி? ............ 'அதுவும் அம்மாவாலன்னு அழுத்தமாச் சொல்லுங்க' -அடுப்படியிலிருந்து வந்தது குரல்... அதெல்லாம், சொன்னாப் புரியாது சீக்கிரம்போய் தூங்கு நீ, செல்ல மகளை மெல்ல நகர்த்தினான் அவன்! படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

குடும்பக் கவிதை!

வழக்கம்போலவே அன்றைக்கும் வம்பில்தான் முடிந்தது வாக்குவாதம்... வந்தது போனதெல்லாம் வரிசையாய்ச் சொன்னபடி கணவனை  வசைபாடிக் கொண்டிருந்தாள்  மருமகள்... அம்மாவைப் பார்த்தபடியே அமைதியாய் நின்றார்கள் பிள்ளைகள்... "ஷிஃப்டுக்கு நேரமாச்சு, சொம்புல தண்ணிகுடும்மா" சட்டையைப் போட்டுக்கொண்டு சைக்கிளை எடுக்கப்போனான் அவன்... ரெண்டுபுள்ள பெத்தாச்சு இன்னமும் புத்தியில்ல, வெத்து வயித்தோட வேலைக்குப்போற விதியப்பாரு... என்னதான் படிச்சியோ என்று முனகிக்கொண்டு, தண்ணீர் எடுக்கப்போனாள் அவனைப் பெற்ற அம்மா... இப்ப, என்ன பண்ணிட்டாருன்னு எரிஞ்சு விழுறீங்க? தண்ணிமட்டும் கேட்டதுக்கே இந்த ஆர்ப்பாட்டமா? கொண்டையை முடிந்துகொண்டு கோபத்தைத் திசைமாற்றினாள் அவள்... எடுத்த ஆயுதம் ஜெயித்த சந்தோஷத்தில், வெற்றிலைப் பையோடு வாசலில் உட்கார்ந்தாள் அம்மா... அங்கே, தட்டில்வைத்த சோற்றை உண்ணத் தொடங்குமுன் எட்டி வெளியில்பார்த்தான் அவன்... கற்றை வெளிச்சம் விழக் கன்னங்களின் அசைவினில், கொஞ்சமாய்த் தெரிந்தது அம்மாவின் புன்னகை!

பிள்ளையெனும் பேரன்பு!

படம்
சுவற்றில், முட்டிமுட்டித் திரும்புகிற குட்டிப் பந்துடன் பேசியபடி, எட்டிஎட்டிப் பார்க்கிறாய் என்னை... தட்டிலூற்றவேண்டிய மாவைத் தரையில் ஊற்றினாலும் தடுமாற்றம் காட்டாமல் எனக்குள்ளே சிரிக்கின்றேன் நான்... ரெண்டு விரலை நீட்டி ஒன்றைத்தொடு என்று ஒன்றுமே நடக்காததுபோல் முன்வந்து முகம்பார்க்கிறாய்... கண்களைத் தவிர்த்துவிட்டுக் கடந்துபோக எத்தனிக்கையில், பின்னாலிருந்துகொண்டு புடவையை இழுக்கிறாய்... சொன்னபடி கேட்காமல் சங்கடப் படுத்திவிட்டு, இன்னும் ஏன் வதைக்கிறாய் என்றபடி திரும்புகிறேன்... உன் கண்ணாடிக் கண்கள் கருணையை யாசிக்க, முன்னாடி நிற்கின்றாய்... உருக்கிடும் பார்வையில் இறுக்கம் தொலைந்துபோக, இணக்கமாய்ச் சிரிக்கிறேன்... கையணைத்துச் சிறுஇதழால் கட்டி முத்தமிட்டு, சின்ன விரல்களால் என் முகம் தொட்டுச் சொல்கிறாய்... உன்னோடு பேசாத வருத்தத்தைக் காட்டிலும், புத்தகப் பாடமொன்றும் அத்தனை கஷ்டமில்லை... இனி, நன்றாய்ப் படிக்கிறேன் நம்பு அம்மா என்கிறாய்... என்னுயிரே இறங்கிவந்து உன்வடிவில் கெஞ்சிநிற்க, கண்கள் பனித்தபடி கனிந்து நிற்கிறேன் அன்னையாக!

ஆணவத்தின் கரைகளில் அகதிகளாய்ப் பெண்கள்!

படம்
சண்டையின் வாசனை கவிந்து கிடந்தது வீட்டில்... என்ன செலவுசெய்தீர்களென்று இயல்பாய் எழுந்த கேள்விக்கு, 'என்னசெய்தால் உனக்கென்ன' என்ற ஆணவம் பதிலாக, ரெண்டு வருஷ வாழ்க்கையின் அர்த்தம் விளங்காமல், துண்டுதுண்டாகிப்போனது துணையானவளின் மனசு.. வீசப்பட்ட வார்த்தைகளை வலைபோட்டுத் தேடி, ஆத்திரம் கூட்டிக்கூட்டி அனலேற்றியது நினைவு... எட்டத்தில் இருக்கும் உறவுகளைத் தொலைபேசி, குற்றப் பத்திரிகை வாசிக்க விருப்பமின்றி, கிட்டப்போய் மறுபடியும் கேள்விகளால் நியாயம்கேட்க, சட்டையேதும் செய்யாமல் சம்பாதிப்பவன் வெளியேற, கண்ணீராய்ப் பெருகிக் கடலானது தன்னிரக்கம்... கேட்டாலும் குற்றம் கேட்க விருப்பமின்றி, கேள்விகளாய் மனதில் புதைத்தாலும் கஷ்டம்... வேலைக்குப் போகாத படித்தவளாய்க் கேட்டுவிட்டு, இன்று, வீட்டோடு இருப்பவளைத் துச்சமாகப் பார்க்கக்கண்டு கூசித்தான்போனது மனசு... பெண்ணாகச் சார்ந்திருத்தல் பெருமையில்லை என்றுணர்ந்து, கண்ணீரில் மனத்தையும் தண்ணீரில் முகத்தையும் நன்றாகக் கழுவிவிட்டு நிறைய யோசித்தாள்... ...

கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும்!

ஊருக்கு வருகிறேனென்று உறவுகளை அழைத்துச்சொல்ல, ஆளுக்கொரு பொருள்கேட்டு அடுக்கடுக்காய் அழைப்புகள்... பவுனாக வாங்கிவந்தால் பெருமையாக இருக்குமென்று மாமியார் சொன்னபோது பணக்கணக்குப் போட்டது மனசு... அடுத்து, பேத்தியிடம் கேட்டார்கள், இந்தியா வந்ததும் உனக்கு என்னவேண்டுமென்று... சின்னமகள் சொன்னாள், கோபால் பல்பொடியும் கொஞ்சம் காரப்பொரியும் என்று!!!

இருவகை இரவுகள்

படம்
குற்றாலம் கொடைக்கானல் குமரகம் குலுமணாலி எப்போ பார்த்தாலும் இதே இடங்கள்தானா? எந்தஊரும் பிடிக்கல என்றுசொல்லிக் கதவடைத்து, உறக்கமின்றிப் புரண்டது 'இருக்கிற' வீட்டுப்பிள்ளை... வானத்துக்கூரை வருடுகிற மென்காற்று ஓலமிடும் ஆந்தைச்சத்தம், ஊடே ஒரு மழைத்துளி தூரத்து இடிமுழக்கம் ஊளையிடும் நாயின்சத்தம் இவற்றோடு, அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அருகாமையும்சேர, கனவில், காகிதக் கப்பலோட்டிக் கண்டமெல்லாம் சுற்றிவந்தது சாலையோரத் தொழிலாளியின் சட்டையில்லாத பிள்ளை.

அந்திமழையும் அழகான காதலும்!

படம்
சட்டென்று வந்திறங்கியது சாயங்காலத்து மழை... சுமந்த சட்டிமண்ணைக் கொட்டியவள், வேப்ப மரத் தொட்டில் பிள்ளையையும், விளையாடிய பிள்ளையையும் கிட்ட அணைத்தபடி கூரைச் சரிவைத்தேட, கட்டிய தலைப்பாகையை கழற்றிப் பிடித்தபடி மண்வெட்டியை போட்டுவிட்டுக் கிட்டவந்தான் அவள் கணவன்... ஒட்டுச் சேலையால் பிள்ளைகளின் தலைதுடைத்துக் கட்டியவன் பக்கம் கனிவாகக் கைநீட்டித் தொட்டவள் சொன்னாள் துடைச்சிக்கோ என்று... தொட்டவளை அருகழைத்துத் துண்டாலே போர்த்திவிட்டுத் தோற்றுப்போன தூவாணத்தைத் துச்சமாக அவன் பார்க்க, கொட்டுவதை நிறுத்திவிட்டுக் கலைந்துபோயின மேகங்கள்... நாளை, புயலையும் கூட்டிவந்து அந்தப் பேரன்பை ரசிப்பதற்கு!

வேலியோரத்து மரங்கள்

படம்
அந்தப்பக்கம் பூக்காதே, அங்கெல்லாம் காய்க்காதே,  சொந்தமாயிருந்ததெல்லாம்  நேற்றோடு முடிஞ்சுபோச்சு...   வேலியோர மரத்திடம்  விளக்கிச் சொல்ல முடியாமல்,  முள்கம்பி போட்டு  முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா...    ஆனாலும்,  வாடிநின்ற தருணத்தில்  பகிர்ந்துகொண்ட நீருக்காக,  கண்ணுக்குத் தெரியாமல்  உறவாடிக்கொண்டன,  மண்ணுக்குக்கீழ் வேர்களும்  மௌனமாய்ச் சில மனங்களும்!