புதன், 18 நவம்பர், 2015

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி
மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது...

அதற்கிடையில்
விருந்துக்கு வந்த மகள்
விழிகலங்கித் திரும்பிப் போனாள்...

விடுதியிலிருந்து வந்த மகன்
வெறுத்து
முகம் கறுத்துப்போனான்...

வந்த மருமகள்
என்னதான் செய்கிறாளென்றால்,
பெருமையாய்ப் பேசுகிறாள்,
உரிமையெடுத்துக்கொள்கிறாள்,
மாமியாரின் மளிகைக் கணக்குமுதல்
மாமனாரின் வங்கிக் கணக்குவரை...

ஆனாலும்,
மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு...

வருகிற தீபாவளிக்கு
வந்துபோங்கள் என்று
மகனையும் மகளையும்
மறுபடியும் கூப்பிட்டாள்...

திரும்ப வந்து விசனப்படத்
திராணியில்லை என்றும்,
தின்பண்டம் ஏதும் செய்தால்
கொடுத்தனுப்பு என்றும்
மகளும் மகனும்
தொலைபேசி பதிலுரைக்க,
கலங்கிப்போன கண்களுடன்
கால்நீட்டி அமர்ந்தாள்...

அதற்குள்
தலைதீபாவளிக்குப் போகிறோம்
ஆசிகொடு அம்மா என்று
பேசியபடி பாதம்தொட்டான் மகன்,
யோசித்தபடி
அருகில் நின்றாள் மருமகள்...

எழுந்து நின்ற மீனாட்சி,
ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து
அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள்,
"நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!

3 கருத்துகள்:

 1. அற்புதம். அப்படியே நாம் வாழும் வீடுகளை மனதில் கொண்டு காட்டினீர்கள்

  பதிலளிநீக்கு
 2. அற்புதம்
  இறுதி வரி மிக மிக அருமை
  அனுபவித்தால்தான் அனைத்துமே புரியும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. ஆடிப்போனேன்...அற்புதமான கவிதை....தாயின் உணர்வை இதைவிட எப்படிச்சொல்ல?

  பதிலளிநீக்கு