திங்கள், 12 செப்டம்பர், 2011

காட்சிப் பிழை!


புகைப்படம் : இணையத்திலிருந்து.


கனத்த முகம் கருக்கு மீசை
நெரித்த புருவமும்
எரிக்கிற பார்வையுமாய்க்
கைவைத்த நாற்காலியில்
காசித் தாத்தா...

நாற்காலிச் சரிவில்
நளினமாய்க் கைவைத்து,
நாணமும் அச்சமுமாய்
நாகலச்சுமி ஆச்சி...

புகைப்படத்தை
உற்றுப்பார்க்கிற எல்லாரும்
சட்டென்று சொல்லுவார்கள்,
காசித்தாத்தாவின் கண்களில்
கடுங்கோபம் தெரிகிறதென்று...

ஆனால்,
கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற
ஆச்சியின் கண்களில்
மின்னலாய் விரியும்...

புகைப்படக்காரனுக்குப்
புரியாத தினுசில்,
சின்ன ஸ்பரிசமும்
கண்ணிறையக் கனிவுமாக
இன்னும் கொஞ்சம்
பக்கத்தில் நிற்கச்சொல்லி,
அவர் பார்வையால் பேசியது!