வெள்ளி, 28 ஜனவரி, 2011

எதுவரை மதிப்பு?


இரவுக்கு மதிப்பு...
விடியும் வரை.
விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை.

கணவுக்கு மதிப்பு...
களையும் வரை.
களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை.

மழைக்கு மதிப்பு...
மண்ணை சேறும் வரை.
மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை.

காதலுக்கு மதிப்பு...
மணவரை வரை.
மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை.

வயதுக்கு மதிப்பு...
ஐம்பதை தொடும் வரை.
காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை.

வாழ்க்கைக்கு மதிப்பு...
வாழ்வை இரசிக்கும் வரை.
வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை.

உடலுக்கு மதிப்பு...
உயிர் உள்ள வரை.
உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை.

தமிழனுக்கு மதிப்பு...
தமிழ் உள்ள வரை.
தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை.

                                                                ************

 இது, சுவரன் என்னும் பெயருடைய இலங்கைத் தமிழ்க்கவிஞரொருவர் எழுதியதாக, மின்னஞ்சலில் நான் படித்த, ரசித்த கவிதை. எந்த மாற்றமுமில்லாமல் அந்தக்கவிதை உங்களின் பார்வைக்காகவும்...

அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் சுவரன்!

செவ்வாய், 25 ஜனவரி, 2011

காய்த்திருக்கும் கனிமரம்!


கல்லடி,சொல்லடி
கனலுகிற பகையடியென்று
எல்லாத் திசையிருந்தும்
அடிக்கத் துடித்தாலும்,
துணிந்து மட்டுமல்ல
தலைநிமிர்ந்தும் நிற்கிற 
திறமைசாலி நீ...

மொழியென்றும் மதமென்றும்
மோதிக்கொள்ளும் மக்களுக்கு,
மதியால் ஒன்றிணையும்
மகத்துவமும் தெரிந்திருப்பதால்,
கண்ணடியும் உனக்குக்
கொஞ்சம் அதிகம்தான்...

புல்லுருவிகளாய் ஒருசிலர்
பகையுடன் பார்த்தாலும்,
எல்லாரும் விரும்பும்படியான
இணையற்ற அழகிதான் நீ...

சுரண்டிச்சுரண்டியே உன்
செல்வத்தைத் திருடினாலும்
குறையாமல் நிறைவதே
உன் குலச்சிறப்பாய்ச் சொல்கிறார்கள்...

இணையாகச் சொல்லப்படுகிற
இன்னுமொரு சிறப்பு,
உலகெங்கும் புகழ்சேர்க்கும்
உன்குலத் தோன்றல்கள்...


கிட்ட இருக்கையில்
உன்னைக்
கேலிசெய்த வர்கள்கூட,
எட்டிப்போனபின் உனக்காக
ஏங்கத்தான் செய்கிறார்கள்...

ஊழல் அரசியலும்
உள்வீட்டுச் சண்டைகளும்
வீழத் தள்ளிவிடும்
வெறியோடு எழுந்தாலும்,
தாயாகி அத்தனையும்
தாங்கி நிமிர்கிறாய்,
தாயே, திருநாடே,
உனக்கு என் வணக்கங்கள்!

செவ்வாய், 11 ஜனவரி, 2011

வாடகை வயிறுகள்!

நீ,
பத்துமாசம் மட்டும்
பல்லைக் கடிச்சிக்கிட்டா,
நம்ம
மொத்தப் பிரச்சனையும் 
இல்லாமல் போய்விடும்...

சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்...
உள்ளே,
செத்ததுபோல் உணர்ந்தாள் அவள்...

கருவறையைப் பணயம்வைத்துக்
காசுபார்க்கும் மும்முரத்தில்,
கட்டளைகள் வேறு பிறந்தது
அவள் கணவனிடமிருந்து...

பெத்தெடுத்துக் கொடுத்தமா
பணத்தை வாங்கினமான்னு 
கச்சிதமா இருக்கணும்,
மத்தபடி ஏதும் மனசு பிசகக்கூடாது...

பணக்கணக்குப் போட்டவன்
பக்குவம் சொல்லிக்கொண்டிருக்க,
அங்கே,
கண்ணீர்த் துளிகளுக்குக் 
கணக்கெழுதிக்கொண்டிருந்தாள் அவள்...

வாடகைக்குப் பெத்தெடுத்தா
வலியே இருக்காதோ?
கூடவே நெஞ்சினிலே 
பாலும் சுரக்காதோ?

கோடிகோடியாய்க் கொட்டிக்கொடுத்தாலும்
கொடுத்துவிட்டுவந்த
அந்தக் குழந்தைமுகம் மறக்குமா?
என்று,
அழுதவளின் வார்த்தைகளெல்லாம்,
அவசியத்தேவைகளைச் சொல்லி
அலட்சியப் படுத்தப்பட்டது...

உயிரூட்டிய கருவினை 
உள்ளே பதியமிட,
விதியை நொந்தவளுக்குள்,
வேகவேகமாய் வளர்ந்தது
குழந்தையும் கூடவே குமுறல்களும்...

வயிற்றுக் குழந்தைக்கு
வளையல்சத்தம் பிடிக்குமென்று,
வளைகாப்புப் போட்டுவிட்டார்கள்
வாரிசுக்குச் சொந்தக்காரர்கள்...

அவளது
வருத்தத்தைச் சொல்லி,
வளையல்கள் அரற்றிக்கொண்டிருக்க,
அவளோ,
அங்கே ஊமையாகிப் போயிருந்தாள்...

 காசுதர வந்தபிள்ளை
காலுதைத்துப் புரளுகையில்
உச்சிவரைக்கும் ஓடியது மின்னல்,
ஆனால்,
சிக்கலாகி இறுகியது 
வாழ்க்கையின் பின்னல்...

வலிக்கிற மனசோடு 
வருடியவளின் ஸ்பரிசத்தில், 
உள்ளே
கிறங்கித்தான்போனது பிள்ளை,
ஆனால்
உறங்காமல் தவித்திருந்தாள் அன்னை...

கடைசி தவணைக் காசுக்காகக்
கைபேசியில் அழைத்தான் கணவன்...

பெறப்போகிற பிள்ளையைத்
தரப்போகிற பயம்வரவே,
ஆத்திரம்மீறிட 
அவனிடம் சொன்னாள் அவள்...

வாங்கிய காசுக்கும் 
வயிற்றிலிருக்கிற பிள்ளைக்கும்,
பிறக்கிற வரைக்குமாவது 
உண்மையாய் இருக்கச்சொல்லி
உறுத்துகிறது மனசு...

அதனால்,
உறவென்று ஒன்றிருந்தால்,
பிறகு பேசலாமென்று
அலைபேசியை அணைத்தாள் அவள்,
அங்கே,
அதிர்ச்சியில் திகைத்தான் அவன்!