இடுகைகள்

உறவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!

வந்த காலோடு வீட்டுக்குக் கிளம்புறியே, இருந்து ஒருவாய் சாப்பிட்டுப்போ அண்ணே... உரக்கச்சொல்ல நினைத்ததை உள்வாங்கிக்கொண்டு, முறைப்புக்கு அஞ்சி முனகலாய் வெளிவந்தது குரல்... மறுக்கத் தோன்றாமல் அவளை மறுபடியும் பார்த்தான் அண்ணன்... இருக்கிற போதெல்லாம் கொடுத்துப் பழக்கியவன், இல்லையென்று சொன்னபோது செல்லாக் காசாய்த் தெரிய, பிறந்தவீட்டு உறவெல்லாம் போதுமென்றானது... நெருக்கமான உறவில் நூறுபேர் இருந்தாலும், பொருத்தமானவன் இவனென்று பேசி முடித்தவனை, இன்றைக்கு உபசரிக்கக் கூடாதென்று உத்தரவும் போட்டது... மறைத்துக்கொண்ட முகத்தை மறந்தும் விலக்காமல், பத்திரிகைக்குள் புதைந்திருந்த பாசக்கார மாப்பிள்ளையிடம், பத்திரமாய்த் தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வைத்துவிட்டுப் போனான் அண்ணன் அழைப்பிதழ் ஒன்றை... உள்ளே, நல்வரவை விரும்புபவள் அவளாக இருந்தாள், அவள் உறவே அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

உறவுக் கயிறு

படுமுடிச்சுப் போட்டுவிட்ட பள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லி முன்னால்வந்து நீட்டுவாய்... போடீ, முடியாதென்று பொய்க்கோபம் காட்டினாலும், ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால், ஓடிவந்து அப்போதே அவிழ்த்துவிடுவேன் நான்... இன்றும் முடிச்சினால் திணறுகிற கடினமான வாழ்க்கைதான் உனக்கு... கண்தோய்ந்த கண்ணீரும் கையிலொரு பிள்ளையுமாய் அவ்வப்போது நீ எந்தன் கண்ணில் படுகிறாய்... ஆனால், முடிச்சு இறுகுதென்று நீயோ, இருக்கிறேன் அண்ணனென்று நானோ, சொல்லிக்கொள்ள முடியாதபடி என்னவோ தடுக்கிறது... ஒற்றைப் புன்னகையும் ஒருசில வார்த்தைகளுமாய் விட்டுவிலகிப்போகிறோம்... ஆனால், எட்டிச்சென்றபின் முட்டுகிறது மனசு... ஒன்றாய்ப் பிறந்த நம் உறவின் அடர்த்தியை எங்கே தொலைத்தோம் இடைப்பட்ட நாட்களில்!???

காகங்கள் கரைவதில்லை!

முன்னெல்லாம், காகம் கரைந்தாலே கண்கள் துடித்தாலோ இருப்புக்கொள்ளாது அம்மாவுக்கு.. வாசல் பக்கத்தைப் பார்வை அளந்திருக்க, அரைக்கால்படி அரிசி அன்றைக்கு அதிகமாகவேகும்... ஆறுமுக நேரி ஆச்சி வருவாங்க, பேயன் விளையிலிருந்து பெரியம்மா வருவாங்க... அம்மங்கொடைக்கு அழைக்க அத்தை வருவாங்க, மாடு கன்னுபோட்டுதுன்னு மாமா வருவாங்க... இப்படி, ஆசையாய்வரும் உறவுகளை அடிக்கடி எதிர்பார்த்து அன்பெனும் உயிர்ப்போடு காத்துக்கிடந்த காலம்... அவிச்ச கிழங்கும் வறுத்த கடலையும் கடம்புப் பாலும், கருப்பட்டிப் புட்டுமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் பண்டங்கள் அத்தனையும் பாசத்தின் வாசனையைத்தான் பளிச்சென்று சொல்லும்... வந்துசேரும் உறவுகள் தங்கியிருக்கிற வரைக்கும் கூத்தும் கும்மாளமும் வீட்டில், குவிந்துதான் கிடக்கும்... ஆனால்,இன்று அழைப்பு மணியைக்காட்டிலும் அதிகமாய் ஒலிப்பது தொலைபேசி மணிகள்தான்... வரவா என்று தொலைபேசிக்கேட்டு வரலாம் என்று உத்தரவுபெற்று, ஒருவேளை கைநனைத்து ஓடிப்போகிற உறவுகள்... அவசியம் வரும்போது அழைப்பெனும் போர்வைக்குள் விலையாக வாங்கப்படுகிற உறவுகளின் பாசம்... ஆக, மு...