இடுகைகள்

கவிதைக் கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிதாய்ப் பிறந்தவன்

மருத்துவமனைப் படுக்கையில் அவள் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்... அடுக்களையில் தவறிவீழ்ந்து அடிபட்டுக் கிடந்தவளை அடுத்தவீட்டார் ஓடிவந்து மருத்துவ மனையில் சேர்க்க, குடித்துவிட்டு நள்ளிரவில் வீடுவந்தான் கணவன் அவன்... துணையாரு மில்லாமல் நிறைமாதம் சுமந்த அவள் வலிகொண்டு வேதனையில் நிலைகுலைந்து போயிருந்தாள்... அவள் நிலைகண்ட அதிர்ச்சியில் அவனுக்கு மனசைவிடச் சட்டென்று தெளிந்தது போதை... வெளிர்த்த முகமும் துளிர்த்த கண் நீருமாய் அவளைப் பார்க்கையில் என்னவோ செய்தது அவனுக்கு... ஆனால் அவள், துடிக்கவைத்த வலியையும் பொருட் படுத்தாதவளாய், அடுத்து ஒரு பிறவி வந்தால் அதிலும் உங்களோடு வாழவே விருப்பமென்றாள்... "பைத்தியக்காரி... நேற்றுவரை நான் நிறையப் படுத்தினாலும் கேட்கிறாள் பார்" என்று அவன் தனக்குள் வியந்தபோது கேட்காமலே துளிர்த்தது கண்ணீர்... "பிதற்றாமலிரு" என்று அவளை அதட்டிவிட்டு மருத்துவரை அழைக்கிறேன் என்று அவன் எழுந்தபோது, "இதை மட்டும் கேளுங்கள்" என்று கரம்பிடித்து நிறுத்தினாள் அவனை, நின்று திரும்பினான்... அடுத்துவரும் பிறவியில் ஆணாக நானும், நானாக நீங்களும் பிறப்பெடுக்க வேண்ட...

என்னத்தைச் செய்தீங்க... (9)

என்னத்தைச் செய்தீங்க...(ஒன்பதாவது பகுதி) தொய்வுற்ற நடையுடன் தந்தை வெளியில்செல்ல ஐயுற்ற பிள்ளைகள் அமைதியை அணிந்தபடி, வெய்யிலில் வாடிய கொடியாய் முகம்கறுத்து பையவே போயங்கே வாசலில் அமர்ந்தனர்... உறையிட்ட வாகனம் ஒய்யாரமாய் நிற்க, உடைவாங்கப் பணமின்றி நிற்கும் மனத்தவிப்பில் முறையற்ற ஆசையால் மனவருத்தம் வந்ததென்று மருகினாள் சிவகாமி மௌனமாய் மனதுக்குள்... பக்கத்து வீட்டில் வெடித்த வெடியிலொன்று முற்றத்தில் வந்து சத்தமாய் வெடித்ததிர எட்டிப்போய்ப் பார்த்த பிள்ளைகள் இருவரும் பட்டாசும் பையுமாக அப்பாவைப் பார்த்தார்கள்... பைநிறைய வெடிவகைகள் பளபளக்கும் புது உடைகள் நெய்யிலே செய்த நெஞ்சினிக்கும் சுவையினங்கள் என்று யாவையும் எடுத்துவைத்த கணவனிடம் கையிலே மோதிரம் இல்லையே எங்கேயென்றாள்...

என்னத்தைச் செய்தீங்க... (8)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை- எட்டாவது பகுதி) மட்டைப் பந்தாடிய மதுரையின் சிறுவர்கள் ஒற்றைப்புற விளக்கை உடைத்துவிட்ட காரணத்தால் பொன்போல மதுரைக்குப் போன வாகனம் புண்பட்டுத் திரும்பியதைக் கண்டார் செல்வமணி... சேமித்த காசெல்லாம் செலவாகிப் போய்விடவே சாமிக்கு நேர்ந்துவைத்த உண்டியலைத் திறந்தெடுத்து வாகன விளக்கினைச் சரிசெய்து வந்தவரை வாய்மூடி மௌனமாய்ப் பார்த்திருந்தாள் சிவகாமி. திருவிழாக் காலமாய் தீபாவளி வந்தது... பள்ளிக்குச் சென்று திரும்பிய தந்தையிடம் பிள்ளைகள் உடைவாங்கப் போகலாம் என்றுரைக்க, முள்ளிலே மிதித்தவராய் முகம்கறுத்தார் செல்வமணி... செல்லமகள் சொன்னது செவியிலே கேட்கலையோ? நல்லநாள் வருமுன்னே நாலும் வாங்கவேண்டாமோ? என்றுதானும் மக்களுக்கு இசைவாகக் குரல்கொடுத்து இன்றுபோய் அனைவருக்கும் ஆடைவாங்கலாம் என்றாள்... இன்றுசெல்ல இயலாது இன்னொருநாள் வாங்கிடலாம் என்று முகம்திருப்பி மெதுவாகச் சொன்னபடி, சென்றுதான் கழற்றிய சட்டையை அணிந்தபடி பையைத் தடவிப்பார்த்தார் பெருமூச்சைப் படரவிட்டார்...

என்னத்தைச் செய்தீங்க...( 7)

பள்ளிசென்ற நாட்களிலே பயணம்செய்ய இயலாமல் முற்றத்தில் வாகனம் முழுவெயிலில் நிற்கக்கண்டு, மூவாயிரம் ரூபாய் முழுசாய்ச் செலவுவைத்து ஆடைவாங்கிச் சூட்டிவிட்டாள் அழகாகச் சிவகாமி... வார இறுதிநாட்கள் வந்தது மறுபடியும்... சக்கரத்தில் எலுமிச்சை குங்குமம் தடவிவைத்து பத்திரமாய்ப் புறப்பட்டு பழனிக்கு நேர்ந்துகொண்டு அக்காவின் வீட்டுக்கு அழையாமல் சென்றபோதும், ஆரத்தழுவிக் கொண்டு அன்போடு வரவேற்று காரக் கறிவறுவல் செய்துவைத்து விருந்தளித்து, மதுரைக்குச் சென்று மகள்வீட்டைப் பார்த்துவர மறுநாள் ஒருநாளும் வாகனம் கேட்டாள் அக்கா... அக்கா கேட்ட கணம் 'திக்'கென்று அதிர்ந்தாலும் அக்கா நீ கேட்டும் மறுப்பேனா என்றுசொல்லி, பக்குவமாய்த் தன்பெருமை காப்பாற்றும் வண்ணமாக மதுரைக்கு வந்துநானும் மகளைப்பார்க்க வேணுமென்றாள்... அக்காவும் தங்கையும் அருமை மக்களுடன் மதுரைக்கு மகிழ்வுடன் செல்லும் வழியிலே மறுநாள் வேலைக்காய் ஊர்செல்லும் கணவரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டாள் சிவகாமி மத்தியான வெயில் மண்டையைப் பிளந்தாலும் மகிழ்வுந்தைப் பார்த்து இகழ்நகையைச் சிந்திவிட்டு, கரையோர இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தபடி பணிக்காகப் ப...

என்னத்தைச் செய்தீங்க...(6)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை-ஆறாவது பகுதி) ஆரத்தி யெடுத்து அழகாய்ப் பொட்டிட்டு காருக்குச் செய்த மரியாதை எதனையும் கணவன் எனக்குக்கூடச் செய்ததில்லை என்றபடி தனக்குள் புலம்பியே நெடிதுயிர்த்தார் செல்வமணி வாகனம் வாங்கினால் போதுமா என்ன, வாகான ஓட்டுனரைத் தேடுங்கள் என்றுசொல்ல நாளுக்கு நூறென்று நறுவிசாய்ப் பேசியே காருக்கு ஓட்டுனரைக் கொண்டுவந்தார் ஆசிரியர். வந்த ஓட்டுனரைக் கொஞ்சமும் விட்டிடாமல் செந்தூர்க் குமரனையும் சீர் குலசை அம்மனையையும் கன்னியா குமரியையும் கடற்கரை மாதாவையும் ரெண்டுநாள் விடுமுறையில் கண்டுவரத் திட்டமிட்டு, வண்டியில் புறப்பட்டு வழியில் இளைப்பாறிவிட்டு சென்று கிளம்புகையில் சக்கரம் பழுதாக, உண்டுவரக் கொண்டுசென்ற உணவுவகை அத்தனையும் வழியோர மரநிழலில் உண்ணும் நிலைவரவே, உள்ளுக்குள் எழுந்துவந்த உக்கிரம் புதைத்தபடி, ஊரோட கண்ணெல்லாம் மொத்தமாய் ஒன்றுபட்டு, காரோட சக்கரத்தைப் பாதித்த தென்றுசொல்லி பழுதினை நீக்கிப்பின்னர் வீட்டுக்கே திரும்பச்சொன்னாள்...

என்னத்தைச் செய்தீங்க...(5)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை - ஐந்தாவது பகுதி) கடந்தது சிலநாட்கள் கனத்த மௌனத்துடன் நகர்ந்தது சிலபொழுது நேர்கொள்ளாப் பார்வையுடன் நிலவிட்ட மன இறுக்கம் சங்கடம் கொடுத்தாலும் துலங்கிட்ட ஒருவழியைக் கண்டுகொண்டார் செல்வமணி. புலர்ந்திட்ட அன்று புதியதோர் காலையில் மலர்ந்திட்ட விழிகள் மகிழ்ச்சியில் அகன்றிட கோலமிட்ட வாயிலில் கொள்ளை அழகுடன் வந்து இறங்கியது வாகனம் ஒன்று... வாகனம் கண்டதும் விழிகளில் வியப்புடன் தாயிடம் சொல்லிடச் சென்றனர் பிள்ளைகள் கல்லிலே தோசையைக் காயவே விட்டுவிட்டு நல்லநாள் வந்ததென வாசல்வந்தாள் சிவகாமி... என்னதான் என்மீது கோபம் கொண்டாலும் என்னவருக்கு என்மேல் பாசம் அதிகம்தான் என்று மனமகிழ்ந்து "என்னங்க" என்றவாறு சென்று கணவனை எழுப்பினாள் சிவகாமி... மக்களும் மனைவியும் மகிழ்ந்ததைக் கண்டாலும் மனதின் ஓரத்தில் மருட்சியும் தென்பட போவது வரைக்கும் போகட்டு மென்றெண்ணி வாகனம் நோக்கிச் சென்றார் செல்வமணி.

என்னத்தைச் செய்தீங்க...(4)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை- நான்காவது பகுதி) என்று பதிலுரைத்தார் எண்ணத்தை எடுத்துரைத்தார் கொன்று விடுவதுபோல் கோபம்கொண்டு நின்றவளை சொல்லித் திருத்திடவோர் வழியேதும் அறியாமல் மெல்லக் கரம்பிடித்தார் மின்னல் பாய்ந்த மரமானார்... கன்னல் கரும்பே கனியமுதே என்றுசொல்லி கல்யாணம் கழிந்தபோது காதலுடன் கைப்பிடிக்க மெல்லத் தலைகுனிந்து உள்ளம்சிதைத்த பெண்ணை எங்கே தொலைத்தேனென்று ஏங்கினார் செல்வமணி... கணவனின் மனப்போக்கை அறியாத மடமையுடன் நினைத்ததை நடத்திடும் பிடிவாதம் பிடித்திழுக்க அடுத்த அம்பினை ஆத்திரம் தோய்த்தபடி எடுத்து எறியலானாள் சினத்துடன் சிவகாமி... "என்னத்தைச் செய்தீங்க? எதை வாங்கித் தந்தீங்க? ஒண்ணுக்கு ரெண்டுபெற்று ஓடாகத் தேய்ந்தாலும் நாய்பட்ட பாட்டில் ஒரு நானோ வாங்கத் துப்பில்லை, என்ன இது அநியாயம்? என்று குரலுயர்த்த, மானம் போகுதென்று மனவருத்தம் கொண்டவராய் "போ நீ உள்ளே"யென்று புகைச்சலுடன் சொல்லிவிட்டுத் தானெழுந்து சென்றார் தன் நடையில் தளர்ச்சியுற்றார் தாயுடன் கைகோர்த்த மக்கள்கண்டு மனமுடைந்தார்.

என்னத்தைச் செய்தீங்க...(3)

என்னத்தைச் செய்தீங்க...(மூன்றாவது பகுதி) "அச்சச்சோ சிவகாமி, அழாதே நீ" என்றபடி, நிச்சயமாய் இன்றைக்குக் கலவரம்தான் என்றெண்ணி உச்சிமுதல் ஓடியதோர் அச்சத்தை மறைத்தவராய் "பச்சைப் பிள்ளைபோல் அழுதிடாமல் சொல்" என்றார். போகும் இடத்தினிலே பெருமையான வாழ்வுவரும் வீடும் வாகனமும் விருத்தியும் கூடுமென்று கரட்டுப்பட்டி ஜோசியர் சொன்ன கணக்கெல்லாம் கண்மூடும் முன்னாலே பார்ப்பேனோ மாட்டேனோ... என்று சலிப்பாகச் சொன்ன நிமிடத்தில் விளக்குப் போட்டதுபோல் துலங்கியது அந்நினைவு... "நீர்செழித்து நெல்விளையும் வயல்நிலத்தை விற்றுவிட்டு வாகனம் வாங்குவோம்" என்றது நினைவில்வர, ஆனாலும் சிவகாமி, அது அப்பாவின் குலச்சொத்து கோடையிலும் வாடையிலும் குறையாத நீர்வரத்து... சோறுதரும் மண்ணைவிற்றுக் காரை வாங்கி நிறுத்திவிட்டால் விலையரிசி வாங்கிஉண்ணும் நிலைவருமே கவனியென்றார்...

என்னத்தைச் செய்தீங்க -( 2)

என்னத்தைச் செய்தீங்க...(இரண்டாவது பகுதி) "என்னங்க, இதைப்பிடிங்க... என்றகுரல் கேட்டவுடன் கன்னத்தில் அறைந்ததுபோல் கனவொதுங்கி நிஜம்திரும்ப முன்நெற்றி வியர்வையினைப் பின்கையால் துடைத்தபடி கிண்ணத்துக் காப்பியினைத் தன்கையில் வாங்கிக்கொண்டார். ஆற்றிக் குடிப்பதற்கு அவசியம் இல்லெனினும் ஊற்றி மெதுவாக ஓசையின்றிக் குடித்துவிட்டு காற்றில்லாப் புழுக்கத்தால் கைத்துண்டால் விசிறிக்கொள்ள, "நேற்றைக்குக் கேட்டேனே, அது என்னாச்சு" என்றுகேட்டாள். என்னத்தைக் கேட்டாள்? என்று மனசுக்குள் முன்னுக்கும் பின்னுக்கும் துழாவித் தோற்றவராய், "எத்தனையோ கேட்டிருப்பாய் எதையென்று நான்நினைக்க?" சத்தம் தேய்ந்துவர முனகினார் செல்வமணி... "ஓ... அத்தனை அலட்சியமோ? என்று குரலுயர்த்தி, இத்தனை வருஷம் மாடாய் உழைச்சிருக்கேன் மக்களைப் பெத்து பத்திரமா வளர்த்திருக்கேன் எத்தனைதான் செய்தாலும் என் பேச்சுக்கு மதிப்பில்லை... என்று விழிகசக்கி கண்ணீரைப் பிழிந்தெடுத்து என்றோ நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து " அப்பாவின் வீட்டில் அரசியாய் வாழ்ந்திருந்தேன், இப்படி வந்து இங்கே வருந்துகிறேன் என்றழுதாள்.

என்னத்தைச் செய்தீங்க... (1)

படம்
என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை - முதல்பகுதி) தெள்ளியதோர் மாலைநேரம் புள்ளினமோ கூடுதேடும்... பள்ளிவிட்டு இல்லம்வந்து ஓய்ந்தமர்ந்தார் செல்வமணி. அவர், பிள்ளைகள் இருவரும் முற்றத்தில் பாண்டியாட, கள்ளமில்லா அவர்கள் புன்னகையைப் பார்த்தபடி, அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் சுமந்ததனால் முன்நெற்றி முடியெல்லாம் பின்னோக்கிப் படையெடுக்க, சுயேச்சையாய்ப் போட்டியிட்டுச் சுருண்ட வேட்பாளர்போல அயர்ச்சியாய் வாசலிலே அமர்ந்திருந்தார் ஆசிரியர்... அங்கே, கைநிறையப் பொன்வளையல் கழுத்திழுக்கும் பொன்வடங்கள் மின்னலெனக் கண்சிமிட்டி முகம்காட்டும் மூக்குத்தி, கன்னத்துச் சதையெழுந்து காதிரண்டை மறைத்துநிற்க கிண்ணத்தில் காப்பியுடன் வந்தமர்ந்தாள் அவர் மனைவி...

வாழை - கவிதையில் பொதிந்த கதை

படம்
1. வெறுமையாய் ஒரு தனிமை மெல்லநடை போட்டு மேலெழும்பும் வெண்ணிலா அல்லைப் பகலாக்கி அழகு செய்யும் விண்மீன்கள் சொல்லத்தெரியாத ஓர் சோகத்தின் பிடியினில் செல்லத்துரை தாத்தா சிக்கியது போலிருந்தார்... மெல்லவும் வழியில்லை விழுங்கவும் வகையில்லை எல்லையில்லாச் சுமையை உள்ளுக்குள் புதைத்திருந்தார்... கல்யாணிப் பாட்டி கடவுளிடம் போனபின்பு நல்வார்த்தை சொல்லி நலம்கேட்க ஆளில்லை பிள்ளைகள் மூவரைப் பெற்றிருந்த போதினிலும் தள்ளாத தந்தையிடம் வந்தமர்ந்து பேசவில்லை ஊருக்கே ராஜாவாய் உயர்ந்துநின்ற பெரியவர் வேரில்லா மரமாக வாட்டமுற்று வாழலானார்... 2. மனப்புழுக்கம் முற்றத்துத் திண்ணையின் மேல்புறத்து மூலையினில் சற்றே சரிந்த ஒரு கயிற்றுக் கட்டிலுண்டு அதில், இற்றுப்போனதுபோல் இதயம் படபடக்க ஒற்றையாய்த் தான்மட்டும் சரிந்திருந்தார் நம் தாத்தா முற்றத்துக் குழல்விளக்கும் நிலவொளியும் சேர்ந்துகொள்ள சுற்றியுள்ள மரக்கிளைகள் சாய்ந்தபடி நிழல் பரப்ப வாசலில் நிழல்கோலம் பார்த்தபடி படுத்திருந்தார் கன்னத்தில் நீர்க்கோலம் வந்தவிதம் தானுணர்ந்தார் கல்யாணிப் பாட்டி கால்மாட்டில் அமர்ந்திருக்க கதைகதையாய் பேசிய நினைவுகளில் மூழ்கிப்போனார் பிள்ளைக...