செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

சாக்குப்போக்கு!


இடியுடன் மழையடிக்க
இரண்டுநாள் வரவில்லை
மேகம் திரண்டுகொள்ள
முந்தாநாளும் முடியவில்லை...

நேற்றைக்கு வந்தபோது
நேரமான காரணத்தால்,
காத்திருந்த களைப்பில் நீயும்
கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...

 இன்றைக்கும்கூட
இரண்டொரு துளிவிழவே
கண்டுவிட முடியுமோவென்று
கவலையில் நான் தவித்துப்போனேன்...

ஆனால்,
நொண்டிச் சாக்கெல்லாம்
நடைமுறைக்கு உதவாதென்று
கண்ணைக் கசக்கிக்கொண்டு
கனத்தமுகம் காட்டுகிறாய்...

என்ன நான் செய்வதடி?
என்பிழைப்பு இப்படியென்று
அப்பாவி முகத்துடன்
அல்லியிடம் சாக்குச்சொன்னது,
உப்பியும் இளைத்தும்
ஊரைச்சுற்றும் சந்திரன்!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

இந்தியனின் விதி!


அன்னாவின் உண்ணாவிரதம்
அமெரிக்க சதி,

ஊழலை எதிர்ப்பதெல்லாம்
உள்நாட்டுச் சதி,

இடையில்வரும் தடையெல்லாம்
எதிரணியின் சதி

என்று,
ஆராய்ந்து சொல்கிறது
ஆளும்கட்சியின் மதி,

இதையெல்லாம்,
அனுபவித்தே தீரவேண்டியது
அப்பாவி இந்தியனின் விதி!