இடுகைகள்

family லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்பக் கவிதை!

வழக்கம்போலவே அன்றைக்கும் வம்பில்தான் முடிந்தது வாக்குவாதம்... வந்தது போனதெல்லாம் வரிசையாய்ச் சொன்னபடி கணவனை  வசைபாடிக் கொண்டிருந்தாள்  மருமகள்... அம்மாவைப் பார்த்தபடியே அமைதியாய் நின்றார்கள் பிள்ளைகள்... "ஷிஃப்டுக்கு நேரமாச்சு, சொம்புல தண்ணிகுடும்மா" சட்டையைப் போட்டுக்கொண்டு சைக்கிளை எடுக்கப்போனான் அவன்... ரெண்டுபுள்ள பெத்தாச்சு இன்னமும் புத்தியில்ல, வெத்து வயித்தோட வேலைக்குப்போற விதியப்பாரு... என்னதான் படிச்சியோ என்று முனகிக்கொண்டு, தண்ணீர் எடுக்கப்போனாள் அவனைப் பெற்ற அம்மா... இப்ப, என்ன பண்ணிட்டாருன்னு எரிஞ்சு விழுறீங்க? தண்ணிமட்டும் கேட்டதுக்கே இந்த ஆர்ப்பாட்டமா? கொண்டையை முடிந்துகொண்டு கோபத்தைத் திசைமாற்றினாள் அவள்... எடுத்த ஆயுதம் ஜெயித்த சந்தோஷத்தில், வெற்றிலைப் பையோடு வாசலில் உட்கார்ந்தாள் அம்மா... அங்கே, தட்டில்வைத்த சோற்றை உண்ணத் தொடங்குமுன் எட்டி வெளியில்பார்த்தான் அவன்... கற்றை வெளிச்சம் விழக் கன்னங்களின் அசைவினில், கொஞ்சமாய்த் தெரிந்தது அம்மாவின் புன்னகை!

ஆணவத்தின் கரைகளில் அகதிகளாய்ப் பெண்கள்!

படம்
சண்டையின் வாசனை கவிந்து கிடந்தது வீட்டில்... என்ன செலவுசெய்தீர்களென்று இயல்பாய் எழுந்த கேள்விக்கு, 'என்னசெய்தால் உனக்கென்ன' என்ற ஆணவம் பதிலாக, ரெண்டு வருஷ வாழ்க்கையின் அர்த்தம் விளங்காமல், துண்டுதுண்டாகிப்போனது துணையானவளின் மனசு.. வீசப்பட்ட வார்த்தைகளை வலைபோட்டுத் தேடி, ஆத்திரம் கூட்டிக்கூட்டி அனலேற்றியது நினைவு... எட்டத்தில் இருக்கும் உறவுகளைத் தொலைபேசி, குற்றப் பத்திரிகை வாசிக்க விருப்பமின்றி, கிட்டப்போய் மறுபடியும் கேள்விகளால் நியாயம்கேட்க, சட்டையேதும் செய்யாமல் சம்பாதிப்பவன் வெளியேற, கண்ணீராய்ப் பெருகிக் கடலானது தன்னிரக்கம்... கேட்டாலும் குற்றம் கேட்க விருப்பமின்றி, கேள்விகளாய் மனதில் புதைத்தாலும் கஷ்டம்... வேலைக்குப் போகாத படித்தவளாய்க் கேட்டுவிட்டு, இன்று, வீட்டோடு இருப்பவளைத் துச்சமாகப் பார்க்கக்கண்டு கூசித்தான்போனது மனசு... பெண்ணாகச் சார்ந்திருத்தல் பெருமையில்லை என்றுணர்ந்து, கண்ணீரில் மனத்தையும் தண்ணீரில் முகத்தையும் நன்றாகக் கழுவிவிட்டு நிறைய யோசித்தாள்... ...

இருவகை இரவுகள்

படம்
குற்றாலம் கொடைக்கானல் குமரகம் குலுமணாலி எப்போ பார்த்தாலும் இதே இடங்கள்தானா? எந்தஊரும் பிடிக்கல என்றுசொல்லிக் கதவடைத்து, உறக்கமின்றிப் புரண்டது 'இருக்கிற' வீட்டுப்பிள்ளை... வானத்துக்கூரை வருடுகிற மென்காற்று ஓலமிடும் ஆந்தைச்சத்தம், ஊடே ஒரு மழைத்துளி தூரத்து இடிமுழக்கம் ஊளையிடும் நாயின்சத்தம் இவற்றோடு, அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அருகாமையும்சேர, கனவில், காகிதக் கப்பலோட்டிக் கண்டமெல்லாம் சுற்றிவந்தது சாலையோரத் தொழிலாளியின் சட்டையில்லாத பிள்ளை.

கவலைகளில் கரைந்தபடி...

படம்
"இருக்கிற கவலையெல்லாம் கழிச்சுக் கட்டிவிட்டு சிறுபிள்ளைபோல சந்தோஷமாய் இருக்கப்பாரு" என் அவஸ்தைகளைப் புரிந்துகொண்டு அம்மா சொன்னாள் அலைபேசி வழியாக... இருக்கிற வேலை நாளை நிலைக்குமா எனும் கவலை, படிக்கிறபிள்ளை நன்றாய்ப் படிக்கலையே எனும் கவலை மகளுக்குக் கல்யாணம் அமையாத மனக்கவலை... அம்மாவை அநாதரவாய் விட்டுவந்த வலிக்கவலை மனைவியின் எதிர்பார்ப்பைத் தீர்க்காத பெருங்கவலை படுத்துகிற உடல்வருத்தம் போகாத ஒரு கவலை வாங்குகிற மருந்தெல்லாம் போலிதானோ எனும் கவலை தூங்குகையில் திருடனவரக் கூடுமென்ற பயக்கவலை வாங்கிய கடனை நண்பன் கொடுக்கணுமே எனும் கவலை... எந்தக் கவலையை எப்படிக் கழிப்பதென்று சிந்தனை முழுவதும் கேள்விகளாய்க் கிளம்பிவிட இல்லாமல்போனது தூக்கம்... இருக்கிற கவலையுடன் இரவெல்லாம் தூங்காத கவலையும் சேர்ந்துகொள்ள, துக்கத்தின் கணக்கிலொன்று மொத்தத்தில் அதிகமாச்சு! படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

ஒன்றோடு ஒன்றைக்கூட்ட...

படம்
வேண்டாம்...முடியாது லீவெல்லாம் கிடைக்காது... இதுக்குப்பட்ட கஷ்டமே இன்னும் மறக்கல, புதுசா வேறயா? போதும்டா சாமீ... எதுக்குத்தான் இப்பிடி அடம்பிடிக்கிறீங்களோ? அண்ணன் தங்கை எல்லாம் இருந்தும் என்னத்தைக் கண்டீங்க? பரிதாபமா பாத்துப்பாத்தே படுத்துறீங்க நீங்க... பாத்துக்க யாரும் பாலைவனத்துக்கு வரமாட்டாங்க, சோத்துக்கு நீங்க திண்டாடிப்போவீங்க... சரி,புள்ளைகிட்ட கேட்கலாம் வேணுமா வேணாமான்னு... ஒண்ணும் வேண்டாம் பொம்மையெல்லாம் கேட்கும், அழுது அழுது அம்மாவைப் படுத்தும்... கண்ணே நீ வாடான்னு கட்டி முத்தம்வைக்க, ஒண்ணே போதுமென்று முடிவாகிப்போனது வீட்டில்!

தனிக்குடித்தனம்

படம்
இருக்கவும் முடியல இருந்து உடல்வலித்தாலும் படுக்கவும் முடியல... ஏழுமாத வயிற்றை இடையிடையே நீவிக்கொண்டு முதுகுசாய்ந்து அமர்ந்தபடி மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள்... உறக்கம் தொலைந்துபோக கலக்கம்பிறந்தது மனதில்... பற்றிக்கொண்ட பதட்டத்துடன், நெற்றிக்கு இட்டுவிட்டு, மற்றென்ன செய்வதென்று மனசுக்குத் தோன்றாமல் கண்ணோடு கண்பார்த்து கைப்பிடித்து நீவிவிட்டான்... நீவிய கைகளின் நடுக்கம் புரிந்தவளாய் ஓரச்சிரிப்போடு அவன் விரல்களை இறுகப்பற்ற, அன்னையும் தந்தையுமாய் அடுத்தவரைத் தேற்றத்தேற்ற சின்னதாகிப்போனது இரவும் இயலாமையும்!

வேலியோரத்து மரங்கள்

படம்
அந்தப்பக்கம் பூக்காதே, அங்கெல்லாம் காய்க்காதே,  சொந்தமாயிருந்ததெல்லாம்  நேற்றோடு முடிஞ்சுபோச்சு...   வேலியோர மரத்திடம்  விளக்கிச் சொல்ல முடியாமல்,  முள்கம்பி போட்டு  முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா...    ஆனாலும்,  வாடிநின்ற தருணத்தில்  பகிர்ந்துகொண்ட நீருக்காக,  கண்ணுக்குத் தெரியாமல்  உறவாடிக்கொண்டன,  மண்ணுக்குக்கீழ் வேர்களும்  மௌனமாய்ச் சில மனங்களும்!