திங்கள், 6 ஜூலை, 2009

அவளை...இப்படித்தான் அழைக்கிறோம்!

ரெண்டுமூன்று வருஷங்களாய்
இங்கேதான் இருக்கிறாள்...

வந்தபோது வைத்திருந்த
புன்னகை மாறாமல்,
என்ன வீட்டில் சொன்னாலும்
எதிர்வார்த்தைபேசாமல்...

விருந்தினர்கள் வந்தாலும்
வேறுபாடு பார்க்காமல்,
வேலை மிகவென்றாலும்
முகச் சுளிப்புக்காட்டாமல்...

கண்ணையும் கசக்காமல்
காசெதுவும் கேட்காமல்
தன்னுடைய நோவுக்காய்
விடுமுறையும் எடுக்காமல்...

சொல்லுவ தெல்லாமும்
செய்து முடித்துவிட்டு
இன்னமென்ன இருக்குதென்று
எதிர்பார்த்து நிற்பதுபோல்...

என்ன பிறவியிவள்
என வியக்கவைத்தவளை...

'அம்மா' என்றழைக்கிறான் என்மகன்,
'அடியே' என்றழைக்கிறேன் நான்...

புதன், 1 ஜூலை, 2009

மௌனம்
அவள்,
இழை பிரிந்த சேலைக்காரி,
களைபறிக்கும் வேலைக்காரி...

கழனியிலே களைபறித்துக்
காசுகொஞ்சம் சேர்த்துவைத்துக்
கைநிறைய வளையல்போட்டு
அழகுபார்க்கும் ஆசைக்காரி...

வயிற்றுக்குள் வளருகிற
மழலையின் காதுக்கு
வளைச்சத்தம் பிடிக்குமென்று
தெரிந்தவர்கள் சொல்லிவிட
ராவோடு பகல் உழைத்து
வளையல் வாங்கி அணிந்துகொண்டாள்...

அலுத்துவந்த கணவனுக்கு
அன்னம் சமைக்கையிலும்,
துவைத்துவைத்த ஆடைகளை
விசிறி உலர்த்தையிலும்
குலுக்கிவிட்ட வளையல்களின்
சிரிப்பொலியில் மகிழ்ந்துபோனாள்

வாழ்க்கையின் வல்லினங்கள்
வருத்திவிட்டுப் போகையிலும்
உழைத்துவரும் காசில்தினம்
உணவுக்கே திணறினாலும்,
அத்தனையும் உதறிவிட்டு
மழலைக்குக் காத்திருந்தாள்...

தாய்வீட்டில் போட்டுவிட்ட
தங்கத் தோடெடுத்து
மார்வாடிக் கடையில்வைத்து
மருத்துவம் பார்த்தபின்னர்,
தாயாகித் தன்மகனை
வீட்டுக்குக் கொண்டுவந்தாள்...

பசிவயிற்று ஏழைக்குப்
பாயாசம் கிடைத்ததுபோல்
நசிந்துபோன அவள்விழிகள்
மகிழ்ச்சியைக் கொப்பளிக்க,
கண்ணிறைய மகனைக்கண்டு
கர்வமாய் வளர்க்கலானாள்

தொட்டிலிட்டுத் தூங்கவைத்தாள்
துயர்மறந்து பாட்டிசைத்தாள்
முட்டியிட்டுப் பிள்ளை
தவழும் பருவம்வர
முடியிறக்கி சாமிக்கு
வேண்டுதலும் செலுத்தச்சென்றாள்...

கொட்டும் மேளமுமாய்
கோயிலிலே மணியொலித்தும்
எட்டியும் பார்க்காத
பிள்ளையின் செய்கையினால்
சற்றே திணறினாள்
சடுதியில் புரிந்துகொண்டாள்

பெற்றெடுத்த பிள்ளைக்குப்
பெருங்குறை யிருக்குதென்று
பேர்பெற்ற மருத்துவரைத்
தேர்ந்தெடுத்துத் துயரைச்சொன்னாள்...

சுட்டது நிஜம்...
சுடும்விழிநீர் வழிந்திறங்க,
ஆசையாய்க் கையிலிட்டு
அலங்கரித்த வளையல்களில்
மற்றதெல்லாம் உடைந்துவிடத்
தான்மட்டும் மௌனமாகி,

ஒற்றையாய்க் கிடந்த அந்தக்
கண்ணாடி வளையலினை
வேலியினைத் தாண்டி
வீதியிலே வீசிவிட்டு,
பெற்றெடுத்த தன்மகனின்
முகம்பார்த்தாள்...மொழியிழந்தாள்...