திங்கள், 7 செப்டம்பர், 2020

மழைக்காலத்து மலர்கள்!மழைக் காலத்து மலர்கள்!

மெல்ல மழை விலக,
வானவில் தோரணத்தை
வளைத்துக் கட்டியது
வானம்...

அதன்,
வண்ணக் கலவையில்
எண்ணம் மயங்கிப்போய்,
அதில்,
கொஞ்சத்தைத் திருடியது
குளிர்ந்த மழைக்காற்று...

கன்னமிட்ட வண்ணத்தைக்
கறைபடாமல் ஒளித்துவைக்க,
நல்ல இடம் தேடி
நாளெல்லாம் அலைந்தது...

காட்டுச் செடிகளின்
கன்னத்தை வருடிவிட்டுக்
கேட்டு இடம்வாங்கிக் 
கிளைகளுக்குள் புகுந்தது...

வாரிச் சுருட்டிய
வண்ணக் கலவையை
வேருக்கு வெகு அருகில்
புதைத்துவிட்டு எழுந்துவர,

தன்னை வருடிய
காற்றின்மேல் காதலுற்று,
சில்லென்று பூத்துச்
சிரித்தது பூக்காடு!

              ***ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வீதியில் ஒரு வெள்ளை நாய்!


மழையில் மூழ்கி எழுந்த
மாநகரத்துச் சாலையில்,
எதையோ தேடி
அலைந்துகொண்டிருந்தது அது...

கொஞ்சம் தரையிலும்
மீதி முகங்களிலுமாய்
இங்குமங்கும் அலைந்தன
அதன் இரு கண்களும்...

சிரிக்க முடிந்திருந்தால்
அதுவும்கூடச் சிரித்திருக்கும்,
சிரிப்பையே மறந்துபோன 
சில மனிதர்களைக் கண்டு...

நெருப்புப் பற்றிய பரபரப்போடு,
நேரச் சக்கரத்தைத்
துரத்தி நடந்தவர்களின்
காலருகில் சென்று
கூடவே நடந்தது...

உண்டு சுருட்டிய
காகிதக் குப்பையொன்றைப்
பந்தென்று நினைத்துப்
பாதையில் உருட்டியது...

அம்மாவின் கைப்பிடித்து
அழுதபடி நடந்துசென்ற
சின்னக் குழந்தையொன்றைச்
சோகமாய்ப் பார்த்தது...

வீசி எரியப்பட்ட
வெண்குழல் வத்தியொன்றைத்
தாவிக் கவ்வியது
தகிக்குமென்று அறியாமல்...

சுட்டது நெருப்பு...பட்டது காயம்...
பட்டுக்குட்டி போல
வீட்டிலே வாழ்ந்ததெல்லாம் 
சட்டென்று நினைவுவரக்
கத்தி அழுதது...

சுற்றிலும் யாருமில்லை,
அதன் 
சோகத்தைப் புரிந்துகொள்ள! 

(* வெண்குழல் வத்தி - சிகரெட்*)

- சுந்தராவெள்ளி, 17 ஜூன், 2016

அவளும் தாயானாள்!தாய்மைக் கென்றே  சில
தனித்தன்மைகள் இருக்கிறது..

வயிற்றில் சுமக்கையிலே 
ஒரு 
வரம் கிடைத்த பெருமை வரும்...
பிள்ளை
மடியிறங்கித் தவழ்கையிலோ 
மாபெரும்  மகிழ்ச்சி வரும்... 

தோளிலே பிள்ளையுடன் 
தெருவிறங்கி நடக்கையில் 
முன்னெப்போது மில்லாத  
ஒரு தன்னம்பிக்கை தானேவரும்...

தாயின் கரம்பிடித்துத் 
தான் நடந்த மகளொருத்தி 
தன்னையும் அதுபோல
உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது...

அட, என்னை விடுங்கள்...
அது 
அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில் 
ஆச்சர்யம்தான் மிஞ்சியது...

பிறந்ததிலிருந்தே அவளைப்
பார்த்துப் பரிச்சயமுண்டு,
பெற்றவளின் பின்னாலேயே 
சுற்றிச்சுற்றி வருவாள்... 

ஆனால்,
என்னவோ தெரியவில்லை...
என்னுடைய குரல் மட்டும்
ஏனோ 
அச்சுறுத்தும் அவளை...

உடன்பிறந்த இரண்டுபேரும்
வளர்ந்து இடம் பெயர்ந்தாலும்
அவளுக்கு மட்டும் 
எப்போதும் அம்மாதான்...

சட்டென்று ஒருநாள்
சன்னல் வழியே பார்க்கையில்
பிள்ளை வயிற்றுடன்
பெருமிதமாய்த் தெரிந்தாள்...
கண்களைக் கசக்கிக்கொண்டு 
மறுபடியும் பார்த்தேன்...

உண்மைதான் அது என்று
உறுதியாய்த் தெரிந்தாலும்
இதெல்லாம் எப்போது நடந்தது?
யாரவளின் துணையென்று 
இயல்பானதொரு கேள்வியும் எழுந்தது...

கடந்தது சில வாரங்கள்...

காலாண்டு விடுமுறையைக் 
கழித்துவிட்டுத் திரும்புகையில்
மறுபடியும் 
கண்ணில் பட்டாள் அவள்,
கூடவே
ரெண்டு குட்டிக் குழந்தைகள்...

அடடே...
இரட்டைப் பிள்ளையா இவளுக்கு 
என்று எட்டிப்பார்க்கையில்,  
என்னை 
எதேச்சையாய்ப் பார்த்தாள் அவளும்...

அட!
என்னை ஏறிட்டு நோக்கிய 
அந்த விழிகளில்
எப்போதும் தென்படும்
அச்சமோ கலக்கமோ 
அணுவளவும் இல்லை...

நானும் அம்மாதான் என்ற 
அலட்டல் தான் 
தெரிந்தது எனக்கு...

என்னே தாய்மையென்று 
என்னையுமறியாமல் வியக்கவைத்த 
அந்தப் 
பெண்ணவள் யாரென்று கேட்கிறீர்களா?

என் பின்னாடி வீட்டில் 
தன் சொந்தங்களோடு வசிக்கிற
ஒரு 
சின்னப் பூனைதான் அவள்!

செவ்வாய், 24 நவம்பர், 2015

நான்...இயற்கை பேசுகிறேன்!


எங்கு பார்த்தாலும் புலம்பல்
இப்படியா பெய்வதென்ற குமுறல்...

வெள்ளம் என்கிறீர்கள்
வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்...
உள்ளும்புறமும் தண்ணீரென்று
ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்...

ஆனால்,
என்ன குற்றம் செய்தேன் நான்?

வா வா என்று
வருந்தி அழைத்தீர்கள்...
வாடுது பயிரென்று
வயலில் நின்று விம்மினீர்கள்...

கடவுளே, உனக்குக்
கண்ணில்லையா? என்று
கையை நீட்டிக் கதறினீர்கள்...

கடனைக் கட்ட வழியில்லாமல்
கடிதம் எழுதிவிட்டுக்
கழுத்தில்
கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்...

கோயில் கண்ட இடமெல்லாம்
யாகத்தீ வளர்த்தீர்கள்,
மழைக்காக ஜெபித்தீர்கள்,
தொழுகையில் அழுதீர்கள்...

கழுதைக் கெல்லாம்
கல்யாணம் பண்ணிவைத்து
வெய்யில் வானத்தை
வெறித்து நின்றீர்கள்...

மரங்களுக்குப் பதிலாக
மாடிவீடாய் அடுக்கிக்கட்டி
இறங்கிவந்து அனைவருமாய்
கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்...

ஏரிகளில் இடம்வாங்கி
எடுப்பாய் வீடுகட்டி
ஏசி போட்டு மாளவில்லை
எப்போ வரும் மழையென்றீர்கள்...

இத்தனையும் கேட்டுவிட்டு
எத்தனை தவிக்கிறீர்களென்று,
ஐயோ என இரங்கி
ஆறுதலாய்ப் பொழிகையில்,
குளமாகுது ஊரென்று
குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...

ஐப்பசியில் அடைமழை
கார்த்திகையில் கனமழை என்று
அன்றே எழுதி வைத்த
ஆதித்தமிழர் நியதிப்படி
கணக்காக வந்தேன்,
சுணக்கமின்றிப் பொழிகிறேன்...

ஆனால்,
குடத்தைக் கவிழ்த்துவைத்து
நடிப்புக்காய்க் கதறினீர்களென்று
இப்போது தெரிகையில்
எரிச்சல்தான் மிஞ்சுகிறது!திங்கள், 23 நவம்பர், 2015

காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு!
ஒற்றெழுத்துக்கள்
உறவுகளில் உண்மை
சுத்தமான காற்று
கொத்தி விளையாடும் குருவிகள்

கிட்ட ஓடிய நீரோடை
கீற்றுப் பந்தலின் குளிர்ச்சி
ரெட்டைச்சடைப் பின்னலில்
வட்டத் தோரணமாய்ப் பூக்கள்

முற்றத்தில் சாணம்
முறமெடுத்துப் புடைக்கும் பெண்கள்
தொட்டி கட்டிய கிணறுகள்
வட்ட வட்டமாய் எருமுட்டை

முட்டை அடைவைத்து
இரு பத்தொருநாள் காத்திருந்து
முற்றத்தில் திரியவிடும்
கோழிக் குடும்பம்...

எட்டணாவுக்குக் கிடைக்கும்
பத்துத் தேன்மிட்டாய்
கட்டிச் சூடமிட்டாய்
கரையாத கல்கோனா

அடுப்பில் சுட்ட பனம்பழம்
அனலில் வெந்த பனங்கிழங்கு
மடிப்புவைத்துக் கட்டும்
இடுப்பைச் சுற்றிய தாவணி

பொத்திவைத்த பிரியங்களைச்
சுமந்துவரும் தபால்காரர்
பெட்டிவைத்துத் தலையில்
விற்றுவரும் வளையல்காரர்

இப்படி,
எத்தனையோ காணவில்லை,
தேடினாலும் கிடைக்கவில்லை...

கோடிப் புண்ணியமாகும்,
கொஞ்சம் கூடிக் கண்டுபிடியுங்களேன்!


**கல்கோனா** - இது தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் விற்ற ஒரு மிட்டாய். வாயில் கரையாமல் நீண்டநேரம் கல் போலக் கிடப்பதால் அந்தப் பெயர்.

புதன், 18 நவம்பர், 2015

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி
மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது...

அதற்கிடையில்
விருந்துக்கு வந்த மகள்
விழிகலங்கித் திரும்பிப் போனாள்...

விடுதியிலிருந்து வந்த மகன்
வெறுத்து
முகம் கறுத்துப்போனான்...

வந்த மருமகள்
என்னதான் செய்கிறாளென்றால்,
பெருமையாய்ப் பேசுகிறாள்,
உரிமையெடுத்துக்கொள்கிறாள்,
மாமியாரின் மளிகைக் கணக்குமுதல்
மாமனாரின் வங்கிக் கணக்குவரை...

ஆனாலும்,
மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு...

வருகிற தீபாவளிக்கு
வந்துபோங்கள் என்று
மகனையும் மகளையும்
மறுபடியும் கூப்பிட்டாள்...

திரும்ப வந்து விசனப்படத்
திராணியில்லை என்றும்,
தின்பண்டம் ஏதும் செய்தால்
கொடுத்தனுப்பு என்றும்
மகளும் மகனும்
தொலைபேசி பதிலுரைக்க,
கலங்கிப்போன கண்களுடன்
கால்நீட்டி அமர்ந்தாள்...

அதற்குள்
தலைதீபாவளிக்குப் போகிறோம்
ஆசிகொடு அம்மா என்று
பேசியபடி பாதம்தொட்டான் மகன்,
யோசித்தபடி
அருகில் நின்றாள் மருமகள்...

எழுந்து நின்ற மீனாட்சி,
ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து
அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள்,
"நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!

சனி, 1 மார்ச், 2014

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம்
பிறந்தநாள் வருதுல்ல,
 எப்பவும்போல இப்பவும்
சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று
தன்னை முன்னிலைப்படுத்தித்
தாயின் விழிகளை அளந்த
சின்னவனின் கேள்வியும்,

"டப்பாவுல இருந்த
மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி,
அப்பறமா முடிஞ்சா
வாங்கிட்டு வா தாயி..." எனும்
மாமனாரின் இறைஞ்சலும்,

தப்புத்தான்  அம்மா
நான் கணக்கில ஃபெயிலானது
எப்பம்மா எனக்கு நீ
டியூஷன் வைக்கப்போறே?
என்ற சுப்புவின் கேள்வியும்
உந்தித் தள்ள,

இடைவிடாமல் சுற்றிய
இயந்திரத்தோடு இயந்திரமாய்
இட்டிலி மாவை
அரைத்துக்கொண்டிருந்தாள்,
ஆட்டிப் படைக்கிற
விதியினைத் தோற்கடிக்க
ஆட்டி விற்கிற
தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!