செவ்வாய், 24 நவம்பர், 2015

நான்...இயற்கை பேசுகிறேன்!


எங்கு பார்த்தாலும் புலம்பல்
இப்படியா பெய்வதென்ற குமுறல்...

வெள்ளம் என்கிறீர்கள்
வெறுப்பைக்கொட்டி எழுதுகிறீர்கள்...
உள்ளும்புறமும் தண்ணீரென்று
ஊரெல்லாம் அங்கலாய்க்கிறீர்கள்...

ஆனால்,
என்ன குற்றம் செய்தேன் நான்?

வா வா என்று
வருந்தி அழைத்தீர்கள்...
வாடுது பயிரென்று
வயலில் நின்று விம்மினீர்கள்...

கடவுளே, உனக்குக்
கண்ணில்லையா? என்று
கையை நீட்டிக் கதறினீர்கள்...

கடனைக் கட்ட வழியில்லாமல்
கடிதம் எழுதிவிட்டுக்
கழுத்தில்
கயிற்றை மாட்டிக்கொண்டீர்கள்...

கோயில் கண்ட இடமெல்லாம்
யாகத்தீ வளர்த்தீர்கள்,
மழைக்காக ஜெபித்தீர்கள்,
தொழுகையில் அழுதீர்கள்...

கழுதைக் கெல்லாம்
கல்யாணம் பண்ணிவைத்து
வெய்யில் வானத்தை
வெறித்து நின்றீர்கள்...

மரங்களுக்குப் பதிலாக
மாடிவீடாய் அடுக்கிக்கட்டி
இறங்கிவந்து அனைவருமாய்
கூட்டுப் பிரார்த்தனை செய்தீர்கள்...

ஏரிகளில் இடம்வாங்கி
எடுப்பாய் வீடுகட்டி
ஏசி போட்டு மாளவில்லை
எப்போ வரும் மழையென்றீர்கள்...

இத்தனையும் கேட்டுவிட்டு
எத்தனை தவிக்கிறீர்களென்று,
ஐயோ என இரங்கி
ஆறுதலாய்ப் பொழிகையில்,
குளமாகுது ஊரென்று
குமுறிக்குமுறி அழுகிறீர்கள்...

ஐப்பசியில் அடைமழை
கார்த்திகையில் கனமழை என்று
அன்றே எழுதி வைத்த
ஆதித்தமிழர் நியதிப்படி
கணக்காக வந்தேன்,
சுணக்கமின்றிப் பொழிகிறேன்...

ஆனால்,
குடத்தைக் கவிழ்த்துவைத்து
நடிப்புக்காய்க் கதறினீர்களென்று
இப்போது தெரிகையில்
எரிச்சல்தான் மிஞ்சுகிறது!14 கருத்துகள்:

 1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  நாம்தான் கூடுதலாகக் கிடைக்கிற
  எதையும் தாங்கக் கூடிய சக்தியற்றவர்கலாகிப் போனோம்
  அதுதான் இந்த அவதி
  (அலம்பல் என்னும் ஒரு வார்த்தைக்குப் பதில்
  மட்டும் வேறு ஒரு வார்த்தை இருந்தால்
  கவிதை இன்னும் சிறப்பாக இருக்குமோ )

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  இயற்கையை விஞ்சி எதும் இல்லை... அற்புதமாக வரிவடிவம் கொடுத்துள்ளீர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. இயற்கையின் கேள்விக்கு என்ன பதிலுண்டு நம்மிடம்...

  அருமை, சுந்தரா.

  பதிலளிநீக்கு
 4. பலரும் மழையை திட்டித் தீர்க்க நீங்கள் தான் அதன் உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அருமை !!

  வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 5. மாற்றியது கவிதைக்கு கூடுதல்
  அழகு சேர்க்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. மழைசொல்லும் கவிதை
  பிழையெல்லாம்
  நம்மீது வைத்து
  கேட்கும் கேள்விகளுக்கு
  பதில் யார்
  சொல்வது....

  சுந்தரமான கவிதை....
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. மனிதச் சுயநலம்... மழையை நோவதேன்..!

  நெஞ்சு தொடும் வரிகள்.

  தொடர்கிறேன் சகோ.

  நன்றி

  பதிலளிநீக்கு
 8. //J P Josephine Baba said...
  அருமை. அர்த்தமுள்ள வரிகள்//

  நன்றிகள் ஜோஸபின்!

  பதிலளிநீக்கு
 9. //Nagendra Bharathi said...
  கவிதை அருமை//

  நன்றிகள் நாகேந்திர பாரதி!

  பதிலளிநீக்கு
 10. ??Ramani S said...
  மாற்றியது கவிதைக்கு கூடுதல்
  அழகு சேர்க்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ரமணி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. //ரூபன் said...
  வணக்கம்
  இயற்கையை விஞ்சி எதும் இல்லை... அற்புதமாக வரிவடிவம் கொடுத்துள்ளீர்கள்
  -நன்றி-//

  நன்றிகள் ரூபன்!

  பதிலளிநீக்கு