வியாழன், 12 பிப்ரவரி, 2009

காதல் பூப்பூக்கட்டும்...

மாடி வீட்டில்,
கோடி வீட்டில்,
ஏழை வீட்டில்,
எதிர்த்த வீட்டில்,

எங்கே வேண்டுமானாலும்
காதல் பூப்பூக்கட்டும்...

என்வீட்டுச் சுவற்றுக்குள்
எப்போதும் வேண்டாம் சாமீ...

கண்மூடி வேண்டினார்
காதலித்து மணந்த தந்தை!!!

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

விடுதலை நாள்!!!

குண்டு துளைக்காத
கண்ணாடி மேடை
கண்கொத்திப் பாம்பாய்
நாற்புறமும் காவலர்கள்

குண்டுகள் முழங்கி
அதிரும் ஒலியெழும்ப,
எந்த நிமிடத்தில்
எறிகணை விழுமோஎன்று

அச்சத்தில் விரல்நடுங்க
விடுதலைக் கொடியேற்ற,
உச்சத்தில் படபடக்கும்
கொடியுடன் இதயம்கூட!!!

திங்கள், 9 பிப்ரவரி, 2009

** வண்ணத்துப்பூச்சி விருது **என்னுடைய கிறுக்கல்களுக்கும் மதிப்பளித்து இந்த விருதினை எனக்கு வழங்கிய தமிழ்ப் பிரியரான திகழ்மிளிருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இவரது வலைத்தளத்தின் அமைப்பும், அதில் இடும் படங்களும் என்னை மிகவும் ரசிக்கவைத்த விஷயங்கள்.

எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியை நான் தேடிப்படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

கிருத்திகா, அனுபவங்களாகட்டும் கவிதைகளாகட்டும் சொல்லவந்ததைச் சிறப்பாகச்சொல்லும் இவரது பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.

துளசி கோபால், டீச்சர் என அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் இவருடைய பதிவுகள், நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் பள்ளிக்குழந்தைகளுப் பொறுமையுடன் சொல்லித்தருவதுபோலவே படங்களும் விளக்கங்களுமாய் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.

நாவிஷ் செந்தில்குமார், முத்தமிழ்மன்றத்திலிருந்தே இவரது கவிதைகள் பரிச்சயம் எனக்கு. கதைசொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.அருமையாக எழுதுகிறார்.

அருமையான இந்த வாய்ப்பினை வழங்கிய திகழ்மிளிருக்கு மீண்டும் என் நன்றிகள்!