இடுகைகள்

காதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்வையொன்றே போதும்!

படம்
நல்லபெண்கள் நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை அருகில் சென்று உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம் முகங்கனிந்து பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ பெண் மூச்சுக் காற்றாலே உயிர்த்திடும் உலகம்... நீ,  நேற்றுவரை நிராகரித்த காதல் பார்வைகளை என் தோட்டத்தில் பதியனிட்டேன்... அவையும் நாற்றுகளாகி நாலு இலை விட்டதோடு தோற்றுப்போய் நிற்கின்றன... அதற்காகவாவது பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே, பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்! டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.

காட்சிப் பிழை!

படம்
புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமாய் நாகலச்சுமி ஆச்சி... புகைப்படத்தை உற்றுப்பார்க்கிற எல்லாரும் சட்டென்று சொல்லுவார்கள், காசித்தாத்தாவின் கண்களில் கடுங்கோபம் தெரிகிறதென்று... ஆனால், கண்ணைத் துடைத்துக்கொள்ளுகிற ஆச்சியின் கண்களில் மின்னலாய் விரியும்... புகைப்படக்காரனுக்குப் புரியாத தினுசில், சின்ன ஸ்பரிசமும் கண்ணிறையக் கனிவுமாக இன்னும் கொஞ்சம் பக்கத்தில் நிற்கச்சொல்லி, அவர் பார்வையால் பேசியது!

சாக்குப்போக்கு!

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்...  இன்றைக்கும்கூட இரண்டொரு துளிவிழவே கண்டுவிட முடியுமோவென்று கவலையில் நான் தவித்துப்போனேன்... ஆனால், நொண்டிச் சாக்கெல்லாம் நடைமுறைக்கு உதவாதென்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கனத்தமுகம் காட்டுகிறாய்... என்ன நான் செய்வதடி? என்பிழைப்பு இப்படியென்று அப்பாவி முகத்துடன் அல்லியிடம் சாக்குச்சொன்னது, உப்பியும் இளைத்தும் ஊரைச்சுற்றும் சந்திரன்!

கலப்பதிகாரம்!

படம்
  படபடக்கிற மனசு பார்வையின் கோணங்கள் புதுசு சிறைப்படத் துடிக்கிற தவிப்பு சின்னச்சின்னதாய்ச் சிலிர்ப்பு... கண்கள் நிறையக் கனவு காலம் மறந்த நினைவு எழுதஎழுதக் கவிதை எல்லாப்பக்கமும் இனிமை... சும்மாயிருந்த மனசில் நீ தென்றலாய்த்தான் கலந்தாய், ஆனாலும், எழுந்ததென்னவோ ஏகப்பட்ட அதிர்வலைகள்... பார்க்கும் போதெல்லாம் பிரியத்தின் துளிகளை வீசிவிட்டுச் செல்கிறாய்... அவையெல்லாம் என் முற்றத்துத் தோட்டத்தின் முல்லைக்கொடியினில், மொட்டுக்களும் பூக்களுமாய் மலர்ந்து கிடக்கின்றன... அதைக் கோர்த்துக் கொடுத்திட வார்த்தைகளைத் தேடித்தேடி, செம்மொழியின் எல்லைகளைச் சுற்றிவந்து தோற்றபின்னர், வாய்திறந்து சொல்லிவிட்டால் வார்த்தைகள் சிதறுமோவென்று, காகிதத்தில் கோர்த்துக் கடிதமாய் அனுப்பிவைத்தேன்... அதைச் சத்தமிட்டு வாசித்தால் காற்றுக்கும் காதல்வந்து உன்னை முத்தமிடக்கூடுமடி... அதனால் பூக்களோடு அனுப்பியுள்ள பொத்திவைத்த காதலைப் பார்வையால்மட்டும் படி! விடையினையும், உன் விழிகளால்மட்டும் சொல்! ***