வியாழன், 29 ஏப்ரல், 2010

மனிதக் கூடுகள்நெட்டையாக வளர்ந்திருக்கும்
கட்டிடக் காடுகள்...

ஒற்றைவீட்டு இடப்பரப்பில்
கற்றையாக வீடுகட்டி
பெட்டி நிறைக்கின்ற
பட்டணத்து வித்தைகள்...

சட்ட மடித்துவைத்த
கைப்பிடிச் சுவற்றினில்
கட்டிடத்துக் கிழிசல்களாய்
அசைந்துகாயும் ஆடைகள்...

ஒட்டிவைத்த வாசல்கோலம்
தொட்டிவைத்த குறுஞ்செடிகள்
தீப்பெட்டிக் குச்சிகளாய்
அடுக்குகளில் மனிதர்கள்...

ஊஞ்சலாடும் பால்பைகள்
ஓடியாடும் பிள்ளைகள்
மாடிவீட்டுச் சன்னல்களில்
முகம்தேடும் இளைஞர்கள்...

தோளுரசிச் சென்றாலும்
ஏறெடுத்துப் பார்க்காமல்
வேகமாய்ப் படியிறங்கும்
வேலைநேர மனிதர்கள்...

அடுத்தடுத்து வாசல்கள்
அழுத்தமான நிஜமுகங்கள்
ரசனைகளைத் தொலைத்தபடி
நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

புதன், 28 ஏப்ரல், 2010

பால்சோறும் பழஞ்சோறும்

பிசைந்த பால்சோற்றில்
பசுநெய்யும்போட்டு
பிள்ளைக்குக் கொண்டுவந்து
கிண்ணத்தில் கொடுத்தாள்...

"இன்னைக்கும் பால்சோறா?
எனக்கு வேண்டாம் போ"
கிண்ணத்தைத் தள்ளியது
செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...

தள்ளிவிட்ட பிள்ளையின்
கன்னத்தைக் கிள்ளியவள்
கிண்ணத்தை வீசினாள்
தென்னை மரத்தடியில்...

முகத்தில்
பட்டுத்தெறித்த பால்சோற்றை
ஒற்றைக்கையால் துடைத்தபடி,
அங்கே,
முந்தாநாள் சோற்றை
வெங்காயம் கூட்டித்
தின்றுகொண்டிருந்தது
பாத்திரம் தேய்க்கிற
பொன்னம்மாவின் பிள்ளை.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

காலாவதி மனிதம்!படம் : நன்றி யூத்ஃபுல் விகடன்


காசுக்கும் பணத்துக்கும்
விலைபோகும் மனிதர்களால்
நாளாக நாளாக
நாடிதளருகிற நம்பிக்கை...

தொட்டுத் துடைத்தாலும்
ஒட்டியதை எடுத்தாலும்
கெட்டுப்போனதெல்லாம்
பணமாகும் புதுவித்தை...

தப்பைச் செய்தவரின்
தலைகாக்கும் பினாமியாய்
கெட்டுப்போய்க் கிடக்கிற
குப்பை மேடுகள்...

காசு கொடுத்து
நம்பிக்கை வாங்கினாலும்
காவு கொள்ளப்படும்
மனித உயிர்கள்...

உயிரைக் கொடுத்தேனும்
நீதிகாத்த நாட்டினில்
உயிரை எடுத்தேனும்
பணம்சேர்க்கும் மனிதர்கள்...

வணிகமயமாகிவிட்ட
வாழ்க்கையின் போக்கினில்
காலாவதியாகிப்போனது
மனிதமும்கூடத்தான்...