செவ்வாய், 24 நவம்பர், 2009

என்னோட கதையும் சோகம்தான்!


வெள்ளி செவ்வாய் தவிர
மத்தநாளில் விரதம்
அதுவும்,
வெள்ளை வெறுஞ்சோறு
வெஞ்சனமெல்லாம் இல்ல...

அள்ளிவச்ச சோறும்
ஆடுகோழி தின்னுபோக
எஞ்சிய மிச்சம்தான்,
என் வயிறும் நிறையுதில்ல...

நல்லநாள் பெரியநாளில்
நாலுகுடம் தண்ணி,
வெல்லமிட்ட சோறு
வேகவச்ச கடலை...

பிள்ளைகள் பந்தடிக்கப்
பேசாத நடுவர்,
பெண்களின் சண்டையிலோ
கண்ணவிஞ்ச கடவுள்...

இன்னுமென்ன சொல்ல,
என்னுடைய பெருமையின்னு?
பிள்ளையாரா யிருப்பதற்குப்
பெருச்சாளியே தேவலாம்தான்...

**************************************
 
 
இந்தக் கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க,
 
இங்கே  அழுத்துங்க...

திங்கள், 23 நவம்பர், 2009

தரிசு

தரிசாக் கிடக்கிற
மேக்காட்டு பூமிய
வெறுசா வச்சிருந்து
ஒண்ணும் பலனில்ல...

வெரசா அத வித்து
வேற காணி வாங்கிப்போட்டா
மகசூலும் ஆகும்
மனசுக்கும் நிறைவுபாரு....

அம்மா உரக்கச்சொன்னாள்
அறைக்குள் மனமுடைந்து
அழுதாள் அவன் மனைவி...

சும்மா அவளைப்
பழியேற்கவைத்துவிட்டு
அம்மா, சரியென்றான் அவன்...

வெள்ளி, 13 நவம்பர், 2009

முகவரி
தன்னுடைய முகவரியை
உலகுக்கு உணர்த்த எண்ணி
ஓடிக்களைத்த அவன்
திரும்பிப் பார்க்கிறான்...

முகச்சுருக்க வரிகளால்
அவனுடைய முகமே
அவனுக்கு வித்தியாசமாய்...

புதன், 11 நவம்பர், 2009

நெருப்பிலே பிறந்த சாதி

மேல்சாதிப் பெண்ணும்
கீழ்ச்சாதிப் பையனும்
உறவுகளை உதறிவிட்டு
ஊரெல்லைக் கோயிலிலே
மாலைமாற்றிக் கொண்டார்கள்...

அடியும் தடியுமாக
விடிந்தது அன்றைய பொழுது...

கீழ்ச்சாதித் தெருவெங்கும்
மேல்சாதித் தலைகள்
மோதலில் உடைந்ததோ
இருசாதிச் சிலைகள்...

ஊர்மத்தி ஆலமரம்
உட்கார்ந்த பெரிசுகள்
வேரணைத்து உட்கார்ந்த
வேடிக்கை மனிதர்கள்...

சாதிவிட்டுச் சாதிமாறிக்
கல்யாணம் செய்தவரை
ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க
ஓலமிட்ட உறவுகள்...

கோலமிட்ட தெருக்களெல்லாம்
ஆளரவ மற்றுப்போய்
ஆலமரத் தடியிருந்து
ரசித்ததோ வசவுகள்...

அடுப்பில்
சோறுவைத்ததை மறந்து
கூரைவீட்டு மீனாட்சி
ஊர்வாயைப் பார்த்தபடி
கதைகேட்டு நின்றிருக்க,

ஆளெதுவும் பார்க்காமல்
அந்தஸ்தும் அறியாமல்
கீழ்ச்சாதித் தீ பரவி
மேல்சாதித் தெருவணைக்க
ஊரெல்லாம் ஒன்றாகி
ஓடி யணைத்தது தீயை...

அதற்குள்,
காற்றுக்கும் நெருப்புக்கும்
இரையானது ஒருபகுதி...

சாதி,சாதியென்று
சத்தமிட்ட சனமெல்லாம்
வீதிவேலை முடிந்ததென்று
வீட்டுவேலை பார்க்கச் செல்ல,

ஈரமான விழிகளும்
எரிந்துபோன உடமையுமாய்
அங்கே,
வீடிழந்த சாதியொன்று
வீதியிலே உதயமாச்சு...

இந்தக்கவிதை, யூத்ஃபுல் விகடனின் கவிதைகள் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.

சனி, 7 நவம்பர், 2009

இன்னுமொரு அன்னையாக...

அவள்,
வந்து வளைகுலுங்க
நின்ற தருணத்தில் கவனித்தேன்...

முன்பைவிட,
இன்னும் தளர்ந்திருந்தாள்
கண்கள் சோர்ந்திருந்தாள்...

இடுப்பினில் கைவைத்து
இடையிடையே நீவிவிட்டு
நிறைமாதப் பூரிப்பில்
நின்ற அவளிடம்,

என்ன சொல்வதென்று
யோசித்த அக்கணத்தில்,
புன்னகையைப் பரிசாக்கி
தன் புடவைத் தலைப்பினால்
என்முகம் துடைத்துவிட்டாள்...

என்னவென்று கேட்டபடி
என்னை வருடியது
அவள் பார்வை...

என்னவோ தெரியவில்லை...
எதுவும் சொல்லத்தோன்றாமல்
கண்கள் கலங்கியது எனக்கு.

புதன், 4 நவம்பர், 2009

நிழல்படமும் நினைவுகளும்


அன்று,
புத்தக அடுக்கினைப்
புரட்டிப்பார்த்தபோது
சிக்கியது அந்தச்
சிறுவயதுப் புகைப்படம்...

மரத்தடி நிழலில்
முகம்கொள்ளாச் சிரிப்புடன் நான்...
அருகில்,
தோளில் கைபோட்டுத்
தோழியொருத்தி...

பொய் சொல்லி
என்னைவிட்டுப்
பிரிந்துசென்ற பூரணி...

பை நிறையப் பொரியோடு
பள்ளிவரும் பார்வதி,
கையெழுத்தால் அனைவரையும்
கவர்ந்துவிடும் கலைவாணி...

அழகழகாய்க் கோலமிடச்
சொல்லித்தந்த அலமேலு,
விசிலடிச்சுப் படம்பார்த்த
விஷயம் சொன்ன வானதி...

பசிவேளை உணவையும்
பேசித்தீர்த்த கதைகளையும்
பேசாமல் எங்களுடன்
பகிர்ந்துகொண்ட  ஆலமரம்...

எத்தனை நினைவுகள்!
எத்தனை சுவடுகள்!!
பொக்கிஷமாய் இளமையின்
நினைவுகளைச் சுமந்திருந்த
சித்திரத்தை வருடினேன்...

புத்தகப்பை நிறையப்
பூரிப்பைச் சுமந்திருந்த
பள்ளி வயதின்
அத்தனை மகிழ்ச்சியையும்
அப்போதும் தந்தது
அந்தப் புகைப்படம்!