இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல,  எப்பவும்போல இப்பவும் சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தாயின் விழிகளை அளந்த சின்னவனின் கேள்வியும், "டப்பாவுல இருந்த மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி, அப்பறமா முடிஞ்சா வாங்கிட்டு வா தாயி..." எனும் மாமனாரின் இறைஞ்சலும், தப்புத்தான்  அம்மா நான் கணக்கில ஃபெயிலானது எப்பம்மா எனக்கு நீ டியூஷன் வைக்கப்போறே? என்ற சுப்புவின் கேள்வியும் உந்தித் தள்ள, இடைவிடாமல் சுற்றிய இயந்திரத்தோடு இயந்திரமாய் இட்டிலி மாவை அரைத்துக்கொண்டிருந்தாள், ஆட்டிப் படைக்கிற விதியினைத் தோற்கடிக்க ஆட்டி விற்கிற தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!

கடலோரத்து இருக்கை

படம்
உப்புக் கடல்நீரில் இரவெல்லாம் மிதந்துவிட்டு, பட்டுக்கரை மண்ணில் பகலினில் இளைப்பாறும் படகுகளின் தூக்கத்தைப் பதுங்குகிற ஜோடிகள் கெடுக்கும்... படுக்க வீடின்றிப் பாதையில் கிடந்துவிட்டு வெயிலிலே படுத்து விட்ட தூக்கத்தைத் தேடுகிற நடைபாதைப் பிச்சைக்காரனை நாய்குரைத்து எழுப்பும்... தூக்குச்சட்டியில் கடலையும் தோளை அழுத்தும் கவலையுமாய்க் கடந்துபோகிற கந்தசாமியின் ஒவ்வொரு பார்வையும் ஓய்வெடுக்க நினைக்கிற அவன் ஏக்கத்தைப் பகிரும்... பலூன்பொம்மை விற்கிற பாலுவின் விரல்கள் பற்றி யிருக்கிற இழைகளைக் காட்டிலும் சிக்கலான தாயிருக்கும் அவன் சொல்லாத துயரம்... எப்படி விலக்கினாலும் விலகாத  வறுமைதீர, வார்த்தை மூலதனத்தோடு வாழ்க்கை தேடுகிற செண்பகத்துக்குக் கைத்தொழிலாய்க் கிடைத்ததோ கைரேகை ஜோசியம்... வண்டியில் ஐஸ் இருக்கும் வயிற்றினில் பசியிருக்கும் விற்றபின் வீடுபோகக் கத்திக்கொண்டிருக்கிற கார்மேகம், பசிக்கு உணவுண்ணப் பகலழிந்து இரவாகும்... அத்தனை பேரின் துயரங்கள் அறிந்தாலும், ஆறுதல்சொல்ல ஆசைப்பட்டும் முடியாமல், அனாதையாய் நிற்கிற அந்த இருக்கையின் கவலை அதற்கு மட்டும். * 7/3/2011 அன்று, கீற்றில் வெளியிடப்பட...

உறுத்தலில் உருவாகி...

மனசுமுதிராத முன்னிருபதுகளில் ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மாலையிட்டவள் அவள்... காலையில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம் நிலைமாற முன்னேறி நடந்தாலும் குற்றமென்று, கண்ணால் சுட்டெரித்த கனலுக்குக் கட்டுப்பட்டுப் பெண்ணாக மண்டியிட்ட பேதைப் பிறவியவள்... எண்ணிக்கைக் கடங்காத இருட்டுக் கதைகளை, எண்ணியெண்ணி அழுதிருந்தால் இருண்டிடும் வாழ்க்கையென்று, எல்லாவற்றையும், மண்ணாகிப்போன தன் மனசுக்குள் புதைத்தவள்... எண்ணைந்து வயசுகளின் இறுதிப் பிராயத்தில், பெண்ணென்றால் இவளென்று அவள் பொறுமையைச் சிரசிலேற்றித் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தேடிவந்தன உறவுகள்... உறுத்தி உறுத்தியே ஓய்ந்துபோன உறவுக்கும்கூட, மருத்துவம் சொல்லி மனதை மாற்றுமளவுக்குப் பக்குவப்பட்டுப் போனது அவளது அப்பழுக்கில்லாத மனசு... எப்படிப் பார்த்தாலும் இவளுடைய பெருமைக்கு மொத்தக் காரணம் எப்பவும் நான்தானென்று கண்ணீரைமீறி ஓர்நாள் உண்மை கரைபுரள, அங்கே, புடமிட்ட பொன்னில்கோர்த்த வடமாக ஜொலித்தது முத்து!

ஒற்றை மரம்!

படம்
                        விழுதிருந்தா ஆலமரம், கன்றிருந்தா வாழைமரம், பாளையிருந்தா பனைமரம், தோகையிருந்தா தென்னைமரம்... இது எதுவுமே இல்லாம இருந்தா...? பக்கத்திலிருந்த ஆயாவிடம், பாடத்தில் சந்தேகம் கேட்டது குழந்தை... "வாழ்ந்துகெட்ட தனிமரம்" விரக்தியாய்ச் சொல்லிவிட்டு, விழிகளைத் துடைத்துக்கொண்டது, வீடுகூட்டி வயிற்றைக் கழுவுகிற அறுபது வயசு ஆயா... ********

மனிதக் கூடுகள்

படம்
நெட்டையாக வளர்ந்திருக்கும் கட்டிடக் காடுகள்... ஒற்றைவீட்டு இடப்பரப்பில் கற்றையாக வீடுகட்டி பெட்டி நிறைக்கின்ற பட்டணத்து வித்தைகள்... சட்ட மடித்துவைத்த கைப்பிடிச் சுவற்றினில் கட்டிடத்துக் கிழிசல்களாய் அசைந்துகாயும் ஆடைகள்... ஒட்டிவைத்த வாசல்கோலம் தொட்டிவைத்த குறுஞ்செடிகள் தீப்பெட்டிக் குச்சிகளாய் அடுக்குகளில் மனிதர்கள்... ஊஞ்சலாடும் பால்பைகள் ஓடியாடும் பிள்ளைகள் மாடிவீட்டுச் சன்னல்களில் முகம்தேடும் இளைஞர்கள்... தோளுரசிச் சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமாய்ப் படியிறங்கும் வேலைநேர மனிதர்கள்... அடுத்தடுத்து வாசல்கள் அழுத்தமான நிஜமுகங்கள் ரசனைகளைத் தொலைத்தபடி நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.

நாடகம்!

ஓடுகிற வாழ்க்கையில் உயிர்கள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது... காணுகிற கனவுகளைக் கண்ணில் சுமந்தபடி... மூடுகிற கதவுகளை முட்டித் திறந்தபடி... ஆளுகிற ஆசைகளை அடையத் துடித்தபடி... நாடுகிற பொருள்களைத் தேடிச் சலித்தபடி... கூடுகிற உறவுகளில் குற்றம் கண்டபடி... வாடுகிற நிகழ்வுகளில் வருந்தித் தோய்ந்தபடி... வீழுகிற தருணத்தில் வெறுப்பை உமிழ்ந்தபடி... ஆட்டுகிற கயிற்றின் அசைவுக் கேற்றபடி ஆடி நடிக்கிறது, நூல் அறுகிற நாள்வரைக்கும்!