இடுகைகள்

பெண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாயாகக் கடவது!

மகனுக்குத் திருமணமாகி மாதம் ஒன்றுதான் முடிந்திருந்தது... அதற்கிடையில் விருந்துக்கு வந்த மகள் விழிகலங்கித் திரும்பிப் போனாள்... விடுதியிலிருந்து வந்த மகன் வெறுத்து முகம் கறுத்துப்போனான்... வந்த மருமகள் என்னதான் செய்கிறாளென்றால், பெருமையாய்ப் பேசுகிறாள், உரிமையெடுத்துக்கொள்கிறாள், மாமியாரின் மளிகைக் கணக்குமுதல் மாமனாரின் வங்கிக் கணக்குவரை... ஆனாலும், மனசு கேட்கவில்லை மீனாட்சிக்கு... வருகிற தீபாவளிக்கு வந்துபோங்கள் என்று மகனையும் மகளையும் மறுபடியும் கூப்பிட்டாள்... திரும்ப வந்து விசனப்படத் திராணியில்லை என்றும், தின்பண்டம் ஏதும் செய்தால் கொடுத்தனுப்பு என்றும் மகளும் மகனும் தொலைபேசி பதிலுரைக்க, கலங்கிப்போன கண்களுடன் கால்நீட்டி அமர்ந்தாள்... அதற்குள் தலைதீபாவளிக்குப் போகிறோம் ஆசிகொடு அம்மா என்று பேசியபடி பாதம்தொட்டான் மகன், யோசித்தபடி அருகில் நின்றாள் மருமகள்... எழுந்து நின்ற மீனாட்சி, ஆசிகேட்ட மகனின் விழிதவிர்த்து அருகில் நின்ற மருமகளிடம் சொன்னாள், "நீயும், சீக்கிரம் தாயாகக் கடவது" என்று!

ஆட்டி வைக்கிற அன்னபூரணி!

"அப்புவுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வருதுல்ல,  எப்பவும்போல இப்பவும் சாக்குச்சொல்லுவியா அம்மா?" என்று தன்னை முன்னிலைப்படுத்தித் தாயின் விழிகளை அளந்த சின்னவனின் கேள்வியும், "டப்பாவுல இருந்த மருந்தெல்லாம் முடிஞ்சிருச்சி, அப்பறமா முடிஞ்சா வாங்கிட்டு வா தாயி..." எனும் மாமனாரின் இறைஞ்சலும், தப்புத்தான்  அம்மா நான் கணக்கில ஃபெயிலானது எப்பம்மா எனக்கு நீ டியூஷன் வைக்கப்போறே? என்ற சுப்புவின் கேள்வியும் உந்தித் தள்ள, இடைவிடாமல் சுற்றிய இயந்திரத்தோடு இயந்திரமாய் இட்டிலி மாவை அரைத்துக்கொண்டிருந்தாள், ஆட்டிப் படைக்கிற விதியினைத் தோற்கடிக்க ஆட்டி விற்கிற தொழிலைத் தேர்ந்தெடுத்த அன்னபூரணி!

உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!

வந்த காலோடு வீட்டுக்குக் கிளம்புறியே, இருந்து ஒருவாய் சாப்பிட்டுப்போ அண்ணே... உரக்கச்சொல்ல நினைத்ததை உள்வாங்கிக்கொண்டு, முறைப்புக்கு அஞ்சி முனகலாய் வெளிவந்தது குரல்... மறுக்கத் தோன்றாமல் அவளை மறுபடியும் பார்த்தான் அண்ணன்... இருக்கிற போதெல்லாம் கொடுத்துப் பழக்கியவன், இல்லையென்று சொன்னபோது செல்லாக் காசாய்த் தெரிய, பிறந்தவீட்டு உறவெல்லாம் போதுமென்றானது... நெருக்கமான உறவில் நூறுபேர் இருந்தாலும், பொருத்தமானவன் இவனென்று பேசி முடித்தவனை, இன்றைக்கு உபசரிக்கக் கூடாதென்று உத்தரவும் போட்டது... மறைத்துக்கொண்ட முகத்தை மறந்தும் விலக்காமல், பத்திரிகைக்குள் புதைந்திருந்த பாசக்கார மாப்பிள்ளையிடம், பத்திரமாய்த் தங்கையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வைத்துவிட்டுப் போனான் அண்ணன் அழைப்பிதழ் ஒன்றை... உள்ளே, நல்வரவை விரும்புபவள் அவளாக இருந்தாள், அவள் உறவே அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

முடியாத துயரம்

படம்
இவை, எல்லாம் கடந்துபோகும், இயல்பாயிரு  என்றார்கள்... இருந்து பார்த்தாள், இயலவில்லை... ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும் படியவைக்கலா மென்றார்கள்... முயன்று பார்த்தாள், முடியவில்லை... வேதனையாயிருந்தால் கொஞ்சம்  விலகியிரு... விலக விலகத்தான் விருப்பம் வருமென்றார்கள்... விலகியும் பார்த்தாள், ஆனால், வெறுப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை... இறுதியில் விட்டு விலகி வெளியில் வந்தபின்தான் விபரம் புரிந்தது, அது வெந்த புண்ணில்  வேலைப் பாய்ச்சுகிற சொந்தம் மட்டுமல்ல, எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற எந்திரமும் தானென்று!!!

நிறம் மாறிய தீபாவளி!

படம்
அதிகாலை விடியலில் ஐந்தாறுநிறப் பொடிகளுடன் அகல்விளக்குக் கோலமிட ஆசைவந்தது அவளுக்கு... பதினெட்டில் மணமுடித்து பத்தொன்பதில் நிறமிழந்து, பத்து வருடங்களாய்ப் பாரம் சுமந்தவள், கறுப்பு நெற்றிப்பொட்டோடு கலர்க்கோலம் இடப்போனாள்... முதல்வருஷத் தீபாவளியுடன் முடிந்துபோன நினைவுகள், முறுக்கிப் பிழிவதுபோல் மனதை அழுத்திநிற்க, பெருக்கி நீர்தெளித்துப் பெருமூச்சை இறைத்தவளை, அங்கே எட்டிப்பார்த்துச் சிரித்தது எதிர்வீட்டுக் குழந்தையொன்று... கற்பனையில் தொட்டில்கட்டிக் கனவுகளில் பெற்றெடுத்த சுட்டிக்குழந்தையின் நினைவுவந்து மனம்வருத்த, கைக்குவந்த கோலத்தைப் காலடியில் போட்டுவிட்டுக் கண்கள் கலங்கிவிட உள்ளே திரும்பினாள்... வெளியே, எட்டு எட்டாய் அடிவைத்து வாசலுடன் முடிந்திருந்தது, குட்டிக்கண்ணனின் பாதச்சுவடுகள்!

தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!

படம்
தூரமா யிருக்கிறப்ப  தெருவுக்கெல்லாம் கூடாது,  ஓரமா உக்காந்து  பரமபதம் ஆடென்று  காரமாய்ச் சொல்லிவிட்டுக்  கண்ணை உருட்டியது பாட்டி...  வேறெதுவும் பிடிக்காமல்  வெற்றுத் தாளெடுத்துவைத்து,  சுற்றிக் கோடுபோட்டு  ஸ்ரீராம ஜெயம் எழுத,  கெட்டுதுபோ குடியென்று  பட்டென்று பிடுங்கிவிட்டு,  சுத்தமாகிற வரைக்கும்  சாமியெல்லாம் வேண்டாம்,  குத்தமாகிப் போகுமடி  என்று பயமுறுத்த,  தூரமாகிப்போனது  சாமியுமா என்று  பாரமாகிப்போன மனதுடன்  பாயில்போய் விழுந்தது,  பெரியவளாகிப் போன  பத்துவயசுச் சின்னப் பூ. *****

பெண்மையின் மென்மையில் இல்லை பலவீனம்!

அலுவலகப் பணிமுடித்து  ஆறுமணிக்கு வந்தாலும்,  ஆறுதலாய் உட்கார  அவளுக்கு விதியில்லை...  குளிக்கின்ற சமயத்தில்  குழாயடியில் நீர்பிடித்து,  சமைக்கிற தருணத்தில்  சமையலறை சுத்தம்செய்வாள்...  படிக்கவைக்கும் நேரத்தில்  பத்திரிகை பார்த்துவிட்டு,  மாவரைக்கும் நேரத்தில்  மடித்ததுணி எடுத்துவைப்பாள்...  நடைப்பயிற்சி என்றுசொல்லிக்  கடைக்கெல்லாம் போய்வந்து,  கணக்கெழுதும் நேரத்தில்  கவிதையொன்றும் எழுதிவைப்பாள்...  அடுத்த நாள் சமையலுக்கு  ஆயத்தம் செய்தபடி,  படிக்கின்ற பிள்ளைக்கு  உணவூட்டி உறங்கவைப்பாள்...  படுத்தபின்னும் உறக்கமின்றிப்  பால்கணக்கு என்னவென்று,  மனக்கணக்குப் போட்டு  அதை  மறக்காமல் குறித்துவைப்பாள்...    சுற்றுகிற பூமிபோலப்  பொறுமையுடன் பணிமுடித்துச்,  சுற்றிவரும் பெண்ணிவளைப்  போற்றிட முடியாமல்,  பெட்டைக் கோழிகூவி  பொழுதொன்றும் விடியாதென்று  நக்கலாய்ப் பேசி  நையாண்டி செய்துவிட்டு,  கணினித் திரையினுள்  கண்புதைத்துக் கொண...

முன்னே வா பெண்ணே!

முன்னே வா முன்னே வா என்று மும்முரமாய் அழைத்தார்கள்... பின்னிருந்து தள்ளுகிற தைரியத்தின் துணையோடு முன்னேறிச் சென்று சில அடிகள் வைத்தேன்... ஆனால், சுற்றிலும் தெரிந்ததோ முட்டுச்சுவர்கள் மட்டுமே... ஆனாலும், முன்வைத்த காலைப் பின்வைக்கத் தோன்றாமல் அங்கேயே நிற்கிறேன், அனைத்தையும் கடக்கலாம் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்! *************************************

அஸ்தமித்தாய் ஜோதியே...

கதவாய் ஜன்னலாய் வாசல் கடந்துசெல்லா ஜடப்பொருளாய் பாயாய்த் தலையணையாய் நாளும் படுக்கையிலே துணைப்பொருளாய் தாயாய்த் தாதியுமாய் வாட்டும் நோவினிலே கைமருந்தாய் யாவுமாகி நிறைந்தும் வீட்டில் எள்ளளவும் புரிதலில்லை... மனமிருக்கும் ஜீவனென்று யாரும் மதிப்பளிக்க மறந்ததனால் பொத்திவைத்த சோகமெல்லாம் உடலில் புற்றாகி உயிர்குடிக்க, அஸ்தமித்தாய் ஜோதியே, இன்று அழும்குழந்தை துவளுதடி!