திங்கள், 7 செப்டம்பர், 2020

மழைக்காலத்து மலர்கள்!மழைக் காலத்து மலர்கள்!

மெல்ல மழை விலக,
வானவில் தோரணத்தை
வளைத்துக் கட்டியது
வானம்...

அதன்,
வண்ணக் கலவையில்
எண்ணம் மயங்கிப்போய்,
அதில்,
கொஞ்சத்தைத் திருடியது
குளிர்ந்த மழைக்காற்று...

கன்னமிட்ட வண்ணத்தைக்
கறைபடாமல் ஒளித்துவைக்க,
நல்ல இடம் தேடி
நாளெல்லாம் அலைந்தது...

காட்டுச் செடிகளின்
கன்னத்தை வருடிவிட்டுக்
கேட்டு இடம்வாங்கிக் 
கிளைகளுக்குள் புகுந்தது...

வாரிச் சுருட்டிய
வண்ணக் கலவையை
வேருக்கு வெகு அருகில்
புதைத்துவிட்டு எழுந்துவர,

தன்னை வருடிய
காற்றின்மேல் காதலுற்று,
சில்லென்று பூத்துச்
சிரித்தது பூக்காடு!

              ***ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வீதியில் ஒரு வெள்ளை நாய்!


மழையில் மூழ்கி எழுந்த
மாநகரத்துச் சாலையில்,
எதையோ தேடி
அலைந்துகொண்டிருந்தது அது...

கொஞ்சம் தரையிலும்
மீதி முகங்களிலுமாய்
இங்குமங்கும் அலைந்தன
அதன் இரு கண்களும்...

சிரிக்க முடிந்திருந்தால்
அதுவும்கூடச் சிரித்திருக்கும்,
சிரிப்பையே மறந்துபோன 
சில மனிதர்களைக் கண்டு...

நெருப்புப் பற்றிய பரபரப்போடு,
நேரச் சக்கரத்தைத்
துரத்தி நடந்தவர்களின்
காலருகில் சென்று
கூடவே நடந்தது...

உண்டு சுருட்டிய
காகிதக் குப்பையொன்றைப்
பந்தென்று நினைத்துப்
பாதையில் உருட்டியது...

அம்மாவின் கைப்பிடித்து
அழுதபடி நடந்துசென்ற
சின்னக் குழந்தையொன்றைச்
சோகமாய்ப் பார்த்தது...

வீசி எரியப்பட்ட
வெண்குழல் வத்தியொன்றைத்
தாவிக் கவ்வியது
தகிக்குமென்று அறியாமல்...

சுட்டது நெருப்பு...பட்டது காயம்...
பட்டுக்குட்டி போல
வீட்டிலே வாழ்ந்ததெல்லாம் 
சட்டென்று நினைவுவரக்
கத்தி அழுதது...

சுற்றிலும் யாருமில்லை,
அதன் 
சோகத்தைப் புரிந்துகொள்ள! 

(* வெண்குழல் வத்தி - சிகரெட்*)

- சுந்தரா