திங்கள், 14 செப்டம்பர், 2009

இவள்...இல்லத்தரசி!

காலை எழுந்தவுடன்
கையில்தந்த காப்பியை
பத்திரிகை விலக்காமல்
ரசித்துக் குடித்துவிட்டு,

குளிப்பதற்கு இதமாகக்
கலந்துவைத்த சுடுநீரை
அலுக்காமல் பாட்டோடு
அனுபவித்துக் குளித்துவிட்டு,

மடிப்புக் கலையாமல்
எடுத்துவைத்த ஆடையினைக்
கலைத்துப் போட்டுவிட்டு
வேறு உடை தேர்ந்தெடுத்து,

கண்ணாடி முன்நின்று
கவனமாய்த் தலைதிருத்தி,
பின்னாலே முகம்திருப்பி
உணவுக்குக் குரல்கொடுக்க,

எல்லாமே ரெடியென்று
எடுத்துவைத்துப் பரிமாறி
கண்ணாடிக் குவளையிலே
குடிப்பதற்கு நீரூற்றி,

பின்னாலே குரல்கொடுத்த
பிள்ளையை அதட்டிவிட்டு,
காலுக்குச் செருப்பையும்
கவனமாய்த் துடைத்துவிட்டு,

மேலே நிமிர்ந்தவளின்
முகத்தையும் பார்க்காமல்
செல்பேசிச் சிணுங்கலுடன்
கணவன் வெளியில்செல்ல,

களைத்துக் கதிரையிலே
சரிந்து அமர்ந்தவளை
அழைத்தது ஒரு குரல்...
அடுத்ததொரு ஏவலுக்காய்.

புதன், 9 செப்டம்பர், 2009

நம்பிக்கை விதைகள்கரைபுரண்டு ஓடும்
காட்டாறாய் நினைவுகள்
சிறையெடுத்து மனம்
சிதைத்திட்ட சுவடுகள்

இளமையின் களிப்பினை
இயலாமை யாக்கிவிட்டு
வறுமைக்கு விலைபோன
வாழ்க்கையின் பக்கங்கள்...

உறவுகள் உருகிஓட
கனவுகள் கரைந்துபோக
கைகொடுக்க யாருமின்றிக்
கலங்கிய பொழுதுகள்...

தனிமையின் போர்வையில்
அழுகையே துணையாக
உடல்வருத்திக் கிடந்த
ஒன்றிரண்டு வருடங்கள்...

வறுமையின் தவிப்பினிலும்
வகைவகையாய்ப் பாடங்கள்
சொல்லிக் கொடுத்தசில
சோக நிகழ்வுகள்...

எள்ளி இகழ்வுசெய்து
ஏமாளி எனச்சிரித்து
தள்ளிவிட்டுச் சென்று
தூரமான உறவுகள்...

தூரமான உறவுகளைத்
துச்சமாய் எண்ணிவிட்டு
வேகமாய் முன்னேறத்
துடித்திட்ட உணர்வுகள்

முன்னேறும் பாதையில்
என்னெதிராய் வந்துதினம்
கண்ணாமூச்சி ஆடிய
கணக்கிலாத் தடைக்கற்கள்

தடைகளைக் கடக்கையிலே
வருத்திய சோகமெல்லாம்
அடையாளம் தெரியாமல்
மறைந்த மணித்துளிகள்...

கொடிகட்டிப் பறக்கவில்லை
ஆனாலும் நிறைவாக
குடிசைகட்டி வாழ்க்கற்ற
முன்னேற்றப் பதிவுகள்...

எத்தனையோ நினைவுகளின்
ஆழத்தில் அமிழ்ந்தாலும்
நித்தமும் எனைவருடும்
பழமையின் பக்கங்கள்

கரையொதுங்கும் கடல்நுரையாய்
ஆங்கங்கே தோன்றி
ஆனந்தம் விளைவிக்கும்
அன்பின் நினைவுகள்...

இத்தனைக்கு இடையிலும்
எனைவிட்டு விலகாமல்
எனக்குள் பதிந்திருந்த
நம்பிக்கை விதைகள்...

விதையெலாம் பயிராகி
விளைவுகண்ட காலத்தில்
தெளிவோடு நிமிர்ந்துநின்றேன்
வானமே வளையக் கண்டேன்.

புதன், 2 செப்டம்பர், 2009

தண்ணீர்...தண்ணீர்...

வைகையோ வறண்டுபோச்சு
காவிரியைக் காணவில்லை...

ஏரியெல்லாம் மாறிப்போச்சு
குளங்களெல்லாம் குப்பையாச்சு...

வான்மழையும் கானலாச்சு
வயல்காடும் வெடிச்சுப்போச்சு
அதற்காக,
நான் மட்டும் குளிக்காவிட்டால்
நன்மையென்ன நடந்துவிடும்?

குளிக்கவென்று குதூகலமாய்
குழாயடியில் உட்கார்ந்தால்,
அடுப்படிப் பாத்திரம்போல்
அழுக்கைமட்டும் தேய்த்துவிட்டு,
கால்வாளித் தண்ணீரில்
கழுவி என்னை அனுப்புகிறாய்...ஆனாலும் இது ரொம்ப
அநியாயக் கொடுமையம்மா...

நெய்யென்று கேட்டால்கூட
நிறையவே ஊற்றும் நீ,
குளிக்கும்
தண்ணீரைக் கேட்டால் மட்டும்
கொஞ்சமாகத் தெளிக்கிறாயே...