இவள்...இல்லத்தரசி!

காலை எழுந்தவுடன்
கையில்தந்த காப்பியை
பத்திரிகை விலக்காமல்
ரசித்துக் குடித்துவிட்டு,

குளிப்பதற்கு இதமாகக்
கலந்துவைத்த சுடுநீரை
அலுக்காமல் பாட்டோடு
அனுபவித்துக் குளித்துவிட்டு,

மடிப்புக் கலையாமல்
எடுத்துவைத்த ஆடையினைக்
கலைத்துப் போட்டுவிட்டு
வேறு உடை தேர்ந்தெடுத்து,

கண்ணாடி முன்நின்று
கவனமாய்த் தலைதிருத்தி,
பின்னாலே முகம்திருப்பி
உணவுக்குக் குரல்கொடுக்க,

எல்லாமே ரெடியென்று
எடுத்துவைத்துப் பரிமாறி
கண்ணாடிக் குவளையிலே
குடிப்பதற்கு நீரூற்றி,

பின்னாலே குரல்கொடுத்த
பிள்ளையை அதட்டிவிட்டு,
காலுக்குச் செருப்பையும்
கவனமாய்த் துடைத்துவிட்டு,

மேலே நிமிர்ந்தவளின்
முகத்தையும் பார்க்காமல்
செல்பேசிச் சிணுங்கலுடன்
கணவன் வெளியில்செல்ல,

களைத்துக் கதிரையிலே
சரிந்து அமர்ந்தவளை
அழைத்தது ஒரு குரல்...
அடுத்ததொரு ஏவலுக்காய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!