புதிதாய்ப் பிறந்தவன்

மருத்துவமனைப் படுக்கையில்
அவள்
வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்...

அடுக்களையில் தவறிவீழ்ந்து
அடிபட்டுக் கிடந்தவளை
அடுத்தவீட்டார் ஓடிவந்து
மருத்துவ மனையில் சேர்க்க,
குடித்துவிட்டு நள்ளிரவில்
வீடுவந்தான் கணவன் அவன்...

துணையாரு மில்லாமல்
நிறைமாதம் சுமந்த அவள்
வலிகொண்டு வேதனையில்
நிலைகுலைந்து போயிருந்தாள்...

அவள்
நிலைகண்ட அதிர்ச்சியில்
அவனுக்கு
மனசைவிடச் சட்டென்று
தெளிந்தது போதை...

வெளிர்த்த முகமும்
துளிர்த்த கண் நீருமாய்
அவளைப் பார்க்கையில்
என்னவோ செய்தது அவனுக்கு...

ஆனால் அவள்,
துடிக்கவைத்த வலியையும்
பொருட் படுத்தாதவளாய்,
அடுத்து ஒரு பிறவி வந்தால்
அதிலும்
உங்களோடு வாழவே விருப்பமென்றாள்...

"பைத்தியக்காரி...
நேற்றுவரை நான்
நிறையப் படுத்தினாலும்
கேட்கிறாள் பார்" என்று அவன்
தனக்குள் வியந்தபோது
கேட்காமலே துளிர்த்தது கண்ணீர்...

"பிதற்றாமலிரு"
என்று அவளை அதட்டிவிட்டு
மருத்துவரை அழைக்கிறேன்
என்று அவன் எழுந்தபோது,

"இதை மட்டும் கேளுங்கள்"
என்று கரம்பிடித்து
நிறுத்தினாள் அவனை,
நின்று திரும்பினான்...

அடுத்துவரும் பிறவியில்
ஆணாக நானும்,
நானாக நீங்களும்
பிறப்பெடுக்க வேண்டும்...

மனைவியின் ஏக்கங்கள்
அனைத்தையும் பூர்த்திசெய்யும்
நல்லகணவனாய் நானிருந்து
காட்ட வேண்டும்...

என்று வார்த்தைகளால்
அவனை அறைந்தகணம்,
வலியின் வேதனையில்
வீறிட்டாள் அவள்...
கிலியின் பாதிப்பில்
வியர்த்தான் கணவனவன்...

விதிர்த்து வெளியில் சென்று
மருத்துவரை அனுப்பிவிட்டு,
கைபிசைந்து கதறலுடன்
தனித்து அழுத அவன்,
தப்பான அனைத்தையும்
விட்டுவிட முடிவெடுத்தான்...

ஓங்கிய குரலொன்று
உலுக்கிட நிமிர்ந்தவனை,
"உள்ளே அழைக்கிறார்கள்"
என்றாள் செவிலிப்பெண்.
கலக்கமா யிருந்தது அவனுக்கு,
நலக்குறைவாய் ஏதும்
நடந்திருக்குமோ என்று...

உள்ளே,
ஆடிய தொட்டிலில்
அழகிய பூவாய்க் குழந்தை...
அருகே,
வாடிய வெளிர்கொடியாய்த்
துவண்டுகிடந்தாள் அவள்.

"பாட்டில் வாங்கப்போகலையா?"
செவிலியின் குரல்வரவே
அதிர்ச்சியுடன் சொன்னான் அவன்,
"அதெல்லாம்,
நேற்றோடு விட்டாச்சு" என்று...

"குளூக்கோஸ் பாட்டிலைச்
சொன்னேன் நான்" என்றுவிட்டுக்
குதர்க்கமாய்ச் சிரித்தாள் செவிலிப் பெண்...

பதற்றம் குறைந்தவனாய்
பித்தமெல்லாம் தெளிந்தவனாய்,
தலைகுலுக்கிச் சிரித்தான் அவன்...
கண்கள்
கசியச் சிரித்தாள் அவன் மனைவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!