முடிச்சவிழ்த்தான் முகுந்தனவன்!!!
துடித்த உதடுகள் அடக்கிய வார்த்தையை எடுத்து மறுபடியும் சொல்லுகின்றாள் சுசீலையவள்... அடுத்துவரும் வார்த்தை என்னவாய் இருக்குமென்று நடுக்கமாய்க் கணவனின் முகக்குறிப்பைப் பார்த்துநின்றாள்... எத்தனை வருஷமாச்சு, என்நிலையும் வறுமையாச்சு இத்தனைநாள் இல்லாமல் இல்லாமை தகித்தவுடன், அட்டமியில் அவதரித்த கிருஷ்ணனைப்போய் பார்ப்பதற்கும் வெட்கமா யிருக்குதடி, வேதனையும் தோன்றுதடி... என்று பதிலுரைத்தான் இயலாமை எடுத்துரைத்தான் வழி யொன்றுமறியாமல் வாய்மூடி நின்றவளைக் கண்டு மனம்வருந்திக் கண்விழிநீர் துளிர்த்தவனாய் நின்றான் குசேலன் நெடிதுயிர்த்தான் வார்த்தையின்றி... பண்டு குருகுலத்தில் பழகிய கண்ணனவன் இன்று துவாரகையின் மன்னனாய்த் திகழ்கின்றான் கொண்டுபோய் அவனிடத்தில் அன்போடு கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை என்னிடத்தில் என்றவனும் மருகிநிற்க, ஒன்றும் எதிருரைக்க இயலாமல் தளர்ந்தவளாய்ச் சென்று சிறிதவலைக் கொண்டுவந்த மாதரசி, நன்றாய் அவலதனைத் துண்டினில் முடித்துக்கட்டி, தந்தாள் கணவனிடம் செல்லுங்கள் என்றுரைத்தாள்... சென்றான் குசேலனவன் சோர்வுற்ற நடையுடனே கண்டான் கண்ணவன் தாவிவந்து ...