நெருப்பில் பூக்கள்
நெருப்பில் பூக்கள் அன்று, வார்த்தைகள் தடிப்பாக வழக்குமன்றமானது வீடு... பொறுப்பில்லாத ஒரு போராட்டம் அரங்கேற பார்வையாளராய் ரெண்டு பாவப்பட்ட குழந்தைகள்... தாக்குகிற வார்த்தைகள் தாறுமாறாய் வந்துவிழ நோக்கிக்கொண்டனர் குழந்தைகள் இருவரும் எப்போதோ பார்த்த ஏதோவொரு திரைப்படம்போல் அப்பாவுக்கொரு பிள்ளை அம்மாவுக்கொரு பிள்ளையென்று பக்கத்துக் கொருவராகப் பிரிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் துளிர்த்தது அழுகையின் முதல்துளி... துப்பாக்கி யிருந்திருந்தால் தோட்டாக்கள் பாயும்போல உச்சகட்டத்து வார்த்தைச்சீறல்கள்... முன்னிரவு வரை மோதல் தொடர்ந்திருக்க, பசியும் பதைப்புமாய் உறங்கிப்போன குழந்தைகளின் கனவிலும் கூட கடுமையான சண்டைதான்... அடித்து எழுப்பியதுபோல் அதிகாலை விடியலில் துடித்து எழுந்தது என்ன நடந்ததோ என்று... தாறுமாறாய்த் துடிக்கும் இதயத்தைச் சுமந்தபடி முகத்தில் அறையக் காத்திருக்கும் அதிர்ச்சியை எதிர்நோக்கி, மெள்ள அறையைவிட்டு வந்தது ஒரு பிள்ளை... வெளியே, முற்றத்துக் குழாயடியில் முகம்திருப்பி நின்றிருந்த அப்பாவுக்கு அங்கே முதுகுதேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா... அசம்பாவிதம் ஏதும் இல்லையென்ற நிம்மதியில் 'அப்பாடா...