நடுகல்லும் நாளை கதைசொல்லும்!
அங்கே, மனித வாசனையைக் காட்டிலும் இயற்கையின் வாசனை கொஞ்சம் தூக்கலாய்த்தான் தெரியும்... காற்றுவாங்க வந்துவிட்டுக் கவிதைபாடிச் செல்லுகிற குயில்களின் நடமாட்டம் கூடுதலாய் இருக்கும்... வேலைக்கு வருகின்ற காலைக் கதிர்கூட அங்கே உத்தரவு கேட்டுத்தான் உள்ளே தலைகாட்டும்... வாலைப் பெண்களெல்லாம் வரப்புகளில் விளையாடி, சோலைப் குளிர்நீரில் மஞ்சள்பூசிக் குளித்துவிட்டு, பானை குடமெல்லாம் பளபளக்கச் சுத்தம்செய்து கோகுலத்துப் பெண்களைப்போல் நீர்சுமந்து நடந்துசெல்வர்... அருகில், வெள்ளாமைக் காட்டுக்கு விரைந்தோடும் வாய்க்கால்கள் செல்லமாய்க் கதைபேசித் துள்ளலாய்க் கடந்துபோகும்... கிள்ளைகள் உதிர்த்துவிடும் பூக்கள் அதில் விழுந்து, வயல்காட்டுப் பயிருக்கு வாசனையைக் கொண்டுசெல்லும்... ஆனால், நாளைமுதல் இவையெல்லாம் நடக்காது என்றுசொல்லி, ஆலை கட்டப்போவதாக ஆங்காங்கே அறிவிப்பு... இனி, சோலை மரங்களெல்லாம் அறுபட்டு விறகாகும், பாடும் குயில்களெல்லாம் கூடுவிட்டுப் பறந்துபோகும்... காற்றுக்கூட இனி இங்கே கற்பிழந்துதான் போகும் ஆற்றில்ஓடும் நீர்கூட அமிலமாக நிலைமாறும்... ஆட்சிசெய்யும்...