ஈரம்

ஈரவாசனை படர்ந்திருந்தது அந்தக் கூரைக் குடிசையின் எல்லாப் பக்கமும்... கோரைப்பாயும் ஈரக்கோணியும் அதனதன் பங்குக்கு வாசனை பரப்ப, அரிசிப் பானைக்குள் அடிவரைக்கும் துழாவி, உரசிக் கிடைத்த ஒன்றிரண்டு மணிகளை, வாசல் குருவியின் வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, ஈரச் சட்டையுடன் சோகைப்பிள்ளை சிரிக்க, உள்ளே, மூத்திர ஈரத்தில் அழுதது, சேலைத் தொட்டிலில் சின்னப் பிள்ளை... மாசம் முடியுமுன்னால் முன்பணம் கேக்குதா? நாசமாய்ப் போச்சுதென்று ஓசைஉயர்த்திய எஜமானியிடம், ஈரத்தால் வெளுத்த இருகையும் பிசைந்தபடி, வாரேம்மா என்றபடி, வெளியிறங்கி நடந்தவளின் வீட்டுக்குள் அன்றைக்குக் காய்ந்து கிடந்தது, ஓரத்து விறகடுப்பும், ஒன்றிரண்டு வயிறுகளும்... ********** படம் : இணையத்திலிருந்து