பிள்ளையெனும் பேரன்பு!


சுவற்றில்,
முட்டிமுட்டித் திரும்புகிற
குட்டிப் பந்துடன் பேசியபடி,
எட்டிஎட்டிப் பார்க்கிறாய் என்னை...

தட்டிலூற்றவேண்டிய மாவைத்
தரையில் ஊற்றினாலும்
தடுமாற்றம் காட்டாமல்
எனக்குள்ளே சிரிக்கின்றேன் நான்...

ரெண்டு விரலை நீட்டி
ஒன்றைத்தொடு என்று
ஒன்றுமே நடக்காததுபோல்
முன்வந்து முகம்பார்க்கிறாய்...

கண்களைத் தவிர்த்துவிட்டுக்
கடந்துபோக எத்தனிக்கையில்,
பின்னாலிருந்துகொண்டு
புடவையை இழுக்கிறாய்...

சொன்னபடி கேட்காமல்
சங்கடப் படுத்திவிட்டு,
இன்னும் ஏன் வதைக்கிறாய்
என்றபடி திரும்புகிறேன்...

உன்
கண்ணாடிக் கண்கள்
கருணையை யாசிக்க,
முன்னாடி நிற்கின்றாய்...

உருக்கிடும் பார்வையில்
இறுக்கம் தொலைந்துபோக,
இணக்கமாய்ச் சிரிக்கிறேன்...

கையணைத்துச் சிறுஇதழால்
கட்டி முத்தமிட்டு,
சின்ன விரல்களால்
என்
முகம் தொட்டுச் சொல்கிறாய்...

உன்னோடு பேசாத
வருத்தத்தைக் காட்டிலும்,
புத்தகப் பாடமொன்றும்
அத்தனை கஷ்டமில்லை...
இனி,
நன்றாய்ப் படிக்கிறேன்
நம்பு அம்மா என்கிறாய்...

என்னுயிரே இறங்கிவந்து
உன்வடிவில் கெஞ்சிநிற்க,
கண்கள் பனித்தபடி
கனிந்து நிற்கிறேன் அன்னையாக!


கருத்துகள்

  1. //கனிந்து நிற்கிறேன் அன்னையாக!//

    நாங்களோ கரைந்து நிற்கிறோம் உங்கள் கவி வரிகளிலே.

    பதிலளிநீக்கு
  2. //கனிந்து நிற்கிறேன் அன்னையாக!//
    அருமையான கவிதை சுந்தரா.

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //கனிந்து நிற்கிறேன் அன்னையாக!//
    அருமையான கவிதை சுந்தரா.

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி அக்கா!

    நன்றி அம்பிகா,அழைப்புக்கும் சேர்த்து :)

    பதிலளிநீக்கு
  5. ரெம்ப அழகா இருக்குங்க... அனுபவிச்சு எழுதினதுன்னு தோணுது... அழகு

    பதிலளிநீக்கு
  6. //உன்னோடு பேசாத
    வருத்தத்தைக் காட்டிலும்,
    புத்தகப் பாடமொன்றும்
    அத்தனை கஷ்டமில்லை...
    இனி,
    நன்றாய்ப் படிக்கிறேன்
    நம்பு அம்மா என்கிறாய்...//

    அருமை

    பதிலளிநீக்கு
  7. அன்னையின் உணர்வுகளைக் கொட்டும் அருமையான வரிகள் ..பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  8. பேசாத அம்மாவின் கோபத்தினை உணர்ந்த மகனின் அன்பை வெளிப்படுத்தி அன்னையின் அரவணைப்பை அருமையாக வெளிப்படுத்தியிருக்கின்றீங்க அக்கா! நமக்கெல்லாம் படிக்காட்டி பூவரசம் கம்புதான் :) நீங்க நல்ல அக்கா & நல்ல அம்மா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

நான் 'மூத்த' பிள்ளை!