Tuesday, May 17, 2011

புட்டிப்பால் குழந்தைகள்!


ஆயா வந்து கொடுக்கும்
ஆவின்பால் பாட்டிலை
வாயருகில் பிடித்தபடி
தாயவளின் முகம் தேடும்...

வாயருகில் வைத்தாலும்
வயிற்றை நிறைக்காமல்,
காலையிலே காய்ச்சிய பால்
கழுத்திறங்கி உடைநனைக்கும்...

அணைத்துவைத்த தலையணையை
அப்புறம் தள்ளிவிட்டு,
அடுத்தவீட்டுக் குரலுக்கும்
ஆர்வமாய் நிமிர்ந்து பார்க்கும்...

ஆயாவுக்குப் பிடித்த
அழுகாச்சித் தொடரில்
வந்துபோகும் அனைவரையும்
சொந்தமென்று நினைத்துக்கொள்ளும்...

கண்ணுறங்கும் நேரத்தில்,
கனவுபோல வந்தணைக்கும்
அன்னையின் அணைப்புக்காய்
இரவுவரை காத்திருக்கும்.

Monday, May 2, 2011

நான் 'மூத்த' பிள்ளை!




விறகுக் கட்டை
விளக்குமாறு
கரண்டிக் காம்பு
கழற்றிப்போட்ட செருப்பு
பள்ளிக்கூட பெல்ட் 
பட்டை அடி ஸ்கேல்
இவையெல்லாம்,
'அடி'க்கடி பேசும் என்னிடம்...

அப்பாவும் சித்தியும்,
அவசியமென்றால் மட்டும்...

******

படம் : இணையத்திலிருந்து


LinkWithin

Related Posts with Thumbnails