மனிதக் கூடுகள்

நெட்டையாக வளர்ந்திருக்கும் கட்டிடக் காடுகள்... ஒற்றைவீட்டு இடப்பரப்பில் கற்றையாக வீடுகட்டி பெட்டி நிறைக்கின்ற பட்டணத்து வித்தைகள்... சட்ட மடித்துவைத்த கைப்பிடிச் சுவற்றினில் கட்டிடத்துக் கிழிசல்களாய் அசைந்துகாயும் ஆடைகள்... ஒட்டிவைத்த வாசல்கோலம் தொட்டிவைத்த குறுஞ்செடிகள் தீப்பெட்டிக் குச்சிகளாய் அடுக்குகளில் மனிதர்கள்... ஊஞ்சலாடும் பால்பைகள் ஓடியாடும் பிள்ளைகள் மாடிவீட்டுச் சன்னல்களில் முகம்தேடும் இளைஞர்கள்... தோளுரசிச் சென்றாலும் ஏறெடுத்துப் பார்க்காமல் வேகமாய்ப் படியிறங்கும் வேலைநேர மனிதர்கள்... அடுத்தடுத்து வாசல்கள் அழுத்தமான நிஜமுகங்கள் ரசனைகளைத் தொலைத்தபடி நகர்ந்துபோகிறது நகரவாழ்க்கை.