தாய்மைக் கென்றே சில
தனித்தன்மைகள் இருக்கிறது..
வயிற்றில் சுமக்கையிலே
ஒரு
வரம் கிடைத்த பெருமை வரும்...
பிள்ளை
மடியிறங்கித் தவழ்கையிலோ
மாபெரும் மகிழ்ச்சி வரும்...
தோளிலே பிள்ளையுடன்
தெருவிறங்கி நடக்கையில்
முன்னெப்போது மில்லாத
ஒரு தன்னம்பிக்கை தானேவரும்...
தாயின் கரம்பிடித்துத்
தான் நடந்த மகளொருத்தி
தன்னையும் அதுபோல
உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது...
அட, என்னை விடுங்கள்...
அது
அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில்
ஆச்சர்யம்தான் மிஞ்சியது...
பிறந்ததிலிருந்தே அவளைப்
பார்த்துப் பரிச்சயமுண்டு,
பெற்றவளின் பின்னாலேயே
சுற்றிச்சுற்றி வருவாள்...
ஆனால்,
என்னவோ தெரியவில்லை...
என்னுடைய குரல் மட்டும்
ஏனோ
அச்சுறுத்தும் அவளை...
உடன்பிறந்த இரண்டுபேரும்
வளர்ந்து இடம் பெயர்ந்தாலும்
அவளுக்கு மட்டும்
எப்போதும் அம்மாதான்...
சட்டென்று ஒருநாள்
சன்னல் வழியே பார்க்கையில்
பிள்ளை வயிற்றுடன்
பெருமிதமாய்த் தெரிந்தாள்...
கண்களைக் கசக்கிக்கொண்டு
மறுபடியும் பார்த்தேன்...
உண்மைதான் அது என்று
உறுதியாய்த் தெரிந்தாலும்
இதெல்லாம் எப்போது நடந்தது?
யாரவளின் துணையென்று
இயல்பானதொரு கேள்வியும் எழுந்தது...
கடந்தது சில வாரங்கள்...
காலாண்டு விடுமுறையைக்
கழித்துவிட்டுத் திரும்புகையில்
மறுபடியும்
கண்ணில் பட்டாள் அவள்,
கூடவே
ரெண்டு குட்டிக் குழந்தைகள்...
அடடே...
இரட்டைப் பிள்ளையா இவளுக்கு
என்று எட்டிப்பார்க்கையில்,
என்னை
எதேச்சையாய்ப் பார்த்தாள் அவளும்...
அட!
என்னை ஏறிட்டு நோக்கிய
அந்த விழிகளில்
எப்போதும் தென்படும்
அச்சமோ கலக்கமோ
அணுவளவும் இல்லை...
நானும் அம்மாதான் என்ற
அலட்டல் தான்
தெரிந்தது எனக்கு...
என்னே தாய்மையென்று
என்னையுமறியாமல் வியக்கவைத்த
அந்தப்
பெண்ணவள் யாரென்று கேட்கிறீர்களா?
என் பின்னாடி வீட்டில்
தன் சொந்தங்களோடு வசிக்கிற
ஒரு
சின்னப் பூனைதான் அவள்!