காத்திருக்குமோ காதல்?

எத்தனையோ மலர்கள் தினம்
இத்தரையில் உதிர்ந்தாலும்
உன்
கூந்தல் மலர்கள் மட்டும்
காய்ந்தாலும் மணக்கிறது...

பத்தியக்காரன் முன்னே
பால்சோறு கண்டதுபோல்
உன்னில்
வைத்தவிழி விலக்க
வழியின்றித் தவிக்கிறேன் நான்...

புத்தனவன் அன்று
போதியின்கீழ் துறந்ததெல்லாம்
மொத்தமாய் வந்து
எனைப்
பற்றிப் படருதடி...

பித்தனென்று சொல்வாயோ
பேதை இளங்கொடியே!
நான்
சித்தனைப்போல் இன்று
தத்துவங்கள் பேசுகின்றேன்...

பெத்த மகன் எனக்கு
என்னவோ ஆனதென்று
அன்னை
முத்தாரம்மன் கோயிலிலே
மாவிளக்குப் போடுகின்றாள்...

மொத்தமாகத் திருடியெனை
மோகத்தில் புதைத்தவளே!
என்
அக்காவின் திருமணம்
முடியும்வரை பொறுப்பாயோ???...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!