அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது!!??...

பத்து மாதங்கள் 
பத்தியமாய்க் காத்திருந்து 
எட்டி உதைக்கையிலே 
செல்லமாய் வருடிவிட்டுப் 
பட்டுப் பூவாகப் 
பெற்றெடுத்த என்னுயிரை 

தொட்டிலிலே போட்டாலும் 
தோள்வலிக்கும் என்றெண்ணி 
பக்குவமாய் மடியிலிட்டு 
பாட்டிசைத்துத் தூங்கவைத்து 

சின்னவிரல் பிடித்து 
சித்திரம்போல் நடைபழக்கி 
அன்னம் ஊட்டுகையில் 
அறிவையும் பிசைந்து ஊட்டி 

அம்பாரி ஆனையோடு 
உப்புமூட்டை சுமந்தலைந்து 
கண்ணுறங்கும் வேளைவரை 
கண்மணியைக் காத்திருந்து 

பள்ளிக்கு அனுப்பிடும் 
பருவம்வந்த வேளையிலே 
விடியலிலே கண்விழித்து 
உடையிட்டு அழகுபார்த்து, 

படியத் தலைவாரிப் 
பள்ளிக்கு அனுப்புகையில், 
கலைத்துச் சிறுமுடியைக் 
கண்ணாடி முன்சென்று, 

திருத்திச் சீவிவிட்டு 
சிரித்தபடி சொல்கிறது, 
"அம்மா, உனக்கு 
ஒண்ணுமே தெரியாதென்று"

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

ஜனனம்