கல்லியல் ஆதி...

இந்திரனும் சந்திரனும் இணைந்தே சதிசெய்ய அந்தநாள் பூவுலகில் நிகழ்ந்ததோர் அவலமிது... சுந்தரமாய்த் தேயும் சுடர்மிகு நிலவினுக்கு வந்ததோர் களங்கமும் நிரந்தரமாய் நிலைத்ததன்று... சேவலாய் நள்ளிரவில் சந்திரன் குரலெழுப்ப ஆவலாய் நதியாடப் புறப்பட்ட கௌதமனும் ஆற்றங்கரை நோக்கி அகன்ற அவ்வேளை, அகலாத இரவுகண்டு ஐயம் மிகக்கொண்டான் கேட்ட குரலெண்ணிக் குழப்பம் மிகுந்திடவே மதியினில் கேள்வியைப் பதியமிட்டு வந்தவேளை, இந்திரனின் சதிவலையில் இறுகப் பிணைந்தபடி சுந்தரனாம் அன்னவனைச் சேர்ந்திருந்தாள் அகலிகையும்... வந்தவன் பிறனென்று புத்திக்குப் புரிந்தபின்னும் மந்திரம் போலவளும் மனமிசைந்து மயங்கிநின்றாள் கண்டான் கௌதமனும் கண்ணெதிரே களவதனைக் கொண்டான் பெருங்கோபம் எரிதழலாய் மாறிநின்றான் தன்னிலை மறந்தாள்தன் துணைவியென்ற றிந்தவனாய் இல்லுறை மனைவியைக் கல்லியல் ஆதியென்றான் விதியங்கு ஜெயித்தது வேதனை பெருகிடவே பதியினை நோக்கிக் கதறினாள் அகலிகையும்... இழிந்தனை நீயும் இதயத்தில் என்றுரைத்து, கழிந்திடும் உன் துயர் காத்திருப்பாய் என்றுசொல்லி, பழியுற்ற பெண்ணவளின் பாவத் துயர்துடைக்க வழியினில் ராமனும் வருவான் என்றுரைத்தார் ஆயிரம் ஆண்டுகள் ...