ராட்சசியோ நீ ???...

நாலு வருஷங்களாய்
நடக்கவிடாமல் எனைத்
தோளில்சுமந்த தந்தை
கீழே இறக்கிவிட்டு,
ஆனை அம்பாரியென
உனைச் சுமந்து ரசித்திருக்க,
பாலோடு அன்னமிட்டு
பாசமாய்க் கொடுத்தஅன்னை
நாலு வயசாச்சு
நல்லா வளர்ந்தாச்சு
வேலையிருக் கெனக்கு
நீயாகச் சாப்பிடென,
எனக்கான உறவுகளை
உனதாக்கிப் பகிர்ந்துகொண்டு
கணப்பொழுது நகர்ந்தாலும்
கணக்குப் புத்தகத்தைக்
கிறுக்கிக் கிழிக்கின்றாய்
சிரிக்கின்றார் அதை ரசித்து...
என்
பின்னாலே நடந்துவந்து
பள்ளியிலே சேர்ந்த நீயும்,
மதிப்பெண்
முன்னாலே பெற்று
எனைப்
பின்னாலே தள்ளிவிட்டாய்...
அண்ணா என்றழைத்தபடி
என்வகுப்பில் நுழைந்து நீயும்
கண்ணாலே நோட்டமிட்டு
கடைசி இருக்கையென்று
வீட்டில்,
சொல்லாத பெருமையெல்லாம்
சொல்லி அழவைத்தாய்...
பாட்டு வகுப்போடு
பரத நாட்டியமும்
பள்ளிப் படிப்போடு
பதவிசாய்ப் படித்துவிட்டுப்
பதக்கங்கள் வாங்கினாய் நீ,
பாட்டு வாங்கினேன் நான்...
கல்லூரி வயசினில் நான்
காதலுடன் கவியெழுத,
நான்
இல்லாத பொழுதிலதை
எடுத்து கொடுத்துவிட்டு,
நல்லவளாய்ப் பேரெடுத்தாய்
நந்தியாயென் வழியில்நின்றாய்...
கல்யாணச் சந்தையிலே
கனக்க நகைபோட்டு
ஆட்டுக்கல் அம்மியோடு
அனைத்துவகைச் சீரும்செய்ய,
தோட்டம் துரவென்று
அத்தனையும் அபகரித்தாய்...
புகுந்த
வீட்டுப் படியேறி நீ
வாழச் சென்றபின்னும்
சீட்டுக்கட்டிய என்
சேமிப்பெல்லாம் கரைய,
மாமா என்றழைக்கவொரு
மருமகனைக் கொண்டுவந்தாய்...
காதலித்த பெண்ணை நான்
கைப்பிடிக்க எண்ணுகையில்
வாதித்து வீட்டினிலே
வழக்காடி வெற்றிபெற்று,
உன்
நாத்தியைக் கொண்டுவந்து
மணப்பெண்ணாய் நிறுத்திவிட்டாய்...
பின்னால் பிறந்துவந்தென்
பெருமைகளைச் சிதைத்தவளே,
என்வீட்டில் பிறந்துவிட்டு
எதிரியாய் ஆனவளே,
என்வாழ்க்கை திருடிவிட்டாய்
என்றும் என் சுமையானாய்...
"காதலித்த பெண்ணை நான்
பதிலளிநீக்குகைப்பிடிக்க எண்ணுகையில்
வாதித்து வீட்டினிலே
வழக்காடி வெற்றிபெற்று,
உன்
நாத்தியைக் கொண்டுவந்து
மணப்பெண்ணாய் நிறுத்திவிட்டாய்..."
கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.. இதுக்கப்புறமும்... ராட்சசியோ தேவதையோன்னு கேக்கிற அண்ணன் ஒரு தேவன் தான்.
:) நன்றி கிருத்திகா!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும்...