இடுகைகள்

நெருப்பில் பூக்கள்

படம்
நெருப்பில் பூக்கள் அன்று, வார்த்தைகள் தடிப்பாக வழக்குமன்றமானது வீடு... பொறுப்பில்லாத ஒரு போராட்டம் அரங்கேற பார்வையாளராய் ரெண்டு பாவப்பட்ட குழந்தைகள்... தாக்குகிற வார்த்தைகள் தாறுமாறாய் வந்துவிழ நோக்கிக்கொண்டனர் குழந்தைகள் இருவரும் எப்போதோ பார்த்த ஏதோவொரு திரைப்படம்போல் அப்பாவுக்கொரு பிள்ளை அம்மாவுக்கொரு பிள்ளையென்று பக்கத்துக் கொருவராகப் பிரிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் துளிர்த்தது அழுகையின் முதல்துளி... துப்பாக்கி யிருந்திருந்தால் தோட்டாக்கள் பாயும்போல உச்சகட்டத்து வார்த்தைச்சீறல்கள்... முன்னிரவு வரை மோதல் தொடர்ந்திருக்க, பசியும் பதைப்புமாய் உறங்கிப்போன குழந்தைகளின் கனவிலும் கூட கடுமையான சண்டைதான்... அடித்து எழுப்பியதுபோல் அதிகாலை விடியலில் துடித்து எழுந்தது என்ன நடந்ததோ என்று... தாறுமாறாய்த் துடிக்கும் இதயத்தைச் சுமந்தபடி முகத்தில் அறையக் காத்திருக்கும் அதிர்ச்சியை எதிர்நோக்கி, மெள்ள அறையைவிட்டு வந்தது ஒரு பிள்ளை... வெளியே, முற்றத்துக் குழாயடியில் முகம்திருப்பி நின்றிருந்த அப்பாவுக்கு அங்கே முதுகுதேய்த்துக் கொண்டிருந்தாள் அம்மா... அசம்பாவிதம் ஏதும் இல்லையென்ற நிம்மதியில் 'அப்பாடா...

பார்த்துப் போடுங்க...

கார்த்தாலே யிருந்து கால்கடுக்க நிக்கிறேன் எடையைப் பார்த்துப் போடுதம்பி, உலையரிசி வீட்டில்இல்லை... சேர்த்துவச்ச காசுக்கு ரேஷன்வாங்க ஓடிவந்தேன் அடுத்து, வாங்கிவச்ச அரிசிவேக விறகுதேடிப் போகவேணும்... உண்ணாமல் இங்கே வயிறுகள் காய்ந்திருக்க, உண்ணாவிரத மென்றால் பொன்னாடை போர்த்திவிட்டு, நீர்த்துப் போகின்ற நம்பிக்கை நிலையாக, தோற்றுப் போகின்ற உண்மைகள் புலனாக, ஓட்டுப் போடென்று நேற்றிரவு சொல்லிச்சென்றார்... பசியடைத்த காதும் பஞ்சடைந்த கண்ணும் ரசிக்கவில்லை அந்தத் தேர்தல்நேர வார்த்தைகளை... ருசியை மறந்துவிட்டு பசிக்குப் பழகிவிட்டோம் வசிக்கும் ஊருக்குள் வன்முறைகள் பார்த்துவிட்டோம்... கூட்டாட்சிக் கொடுமையும் வீட்டாட்சி வீம்புகளும் காட்டாட்சி நடத்திடும் காலக் கொடுமையிலே, ஓட்டுப் போட்டுவிட்டு வந்துவிட்டால் ஒருவிரலில் மைவைப்பார் போடாமல் இருந்தாலோ கள்ளஓட்டில் கைவைப்பார்... இருக்கின்ற தேசத்தில் இல்லாமல் போகாமல் இல்லாமை எப்பொழுது இல்லாமல் போகுமென்று, சொல்லாமல் மனமழுத்தும் சோகங்கள் தீர்த்துவைக்க எல்லாக் கடவுளையும் வேண்டி அழுத்தமாக, ஓட்டுப்போடுங்க, அதையும் பார்த்துப் போடுங்க...

தேர்தலும் ஒரு காலநிலை!

ஒற்றை இரவினில் உருவான தார்ச்சாலை கட்சிக்கொடி நிறத்தில் இலவசமாய் நூல்சேலை எதிர்க்கட்சி வந்தால் என்ன கிடைக்குமென்று கதிரறுக்க மறந்தபடி கதைபேசும் வீண்வேலை நேற்றுவரை இங்கே காற்றுவந்த குழாய்களிலே ஆற்று வெள்ளமெனப் பெருகிவரும் நீரின்அலை கட்சி வேட்டிகள் சகதியிலே கரைபுரள சாதிகளின் பெயர்சொல்லிப் பெருந்தலைகள் பேசும்விலை முந்தைய ஆட்சியிலே மறைந்திருந்த ஊழலெல்லாம் சந்தியிலே கிழித்துக் கடைவிரிக்கும் மாயவலை பற்றவைத்த குடிசைகளின் தணல்சூடு தணியுமுன்னே சட்டெனவே தயாராகும் ஏழைகட்கு வீட்டுமனை வேனில் வசந்தமென்று வந்துபோகும் பருவமென இந்திய நாட்டினிலே தேர்தலும் ஒரு காலநிலை!!!

அஸ்தமித்தாய் ஜோதியே...

கதவாய் ஜன்னலாய் வாசல் கடந்துசெல்லா ஜடப்பொருளாய் பாயாய்த் தலையணையாய் நாளும் படுக்கையிலே துணைப்பொருளாய் தாயாய்த் தாதியுமாய் வாட்டும் நோவினிலே கைமருந்தாய் யாவுமாகி நிறைந்தும் வீட்டில் எள்ளளவும் புரிதலில்லை... மனமிருக்கும் ஜீவனென்று யாரும் மதிப்பளிக்க மறந்ததனால் பொத்திவைத்த சோகமெல்லாம் உடலில் புற்றாகி உயிர்குடிக்க, அஸ்தமித்தாய் ஜோதியே, இன்று அழும்குழந்தை துவளுதடி!

காதல் பூப்பூக்கட்டும்...

மாடி வீட்டில், கோடி வீட்டில், ஏழை வீட்டில், எதிர்த்த வீட்டில், எங்கே வேண்டுமானாலும் காதல் பூப்பூக்கட்டும்... என்வீட்டுச் சுவற்றுக்குள் எப்போதும் வேண்டாம் சாமீ... கண்மூடி வேண்டினார் காதலித்து மணந்த தந்தை!!!

விடுதலை நாள்!!!

குண்டு துளைக்காத கண்ணாடி மேடை கண்கொத்திப் பாம்பாய் நாற்புறமும் காவலர்கள் குண்டுகள் முழங்கி அதிரும் ஒலியெழும்ப, எந்த நிமிடத்தில் எறிகணை விழுமோஎன்று அச்சத்தில் விரல்நடுங்க விடுதலைக் கொடியேற்ற, உச்சத்தில் படபடக்கும் கொடியுடன் இதயம்கூட!!!

** வண்ணத்துப்பூச்சி விருது **

படம்
என்னுடைய கிறுக்கல்களுக்கும் மதிப்பளித்து இந்த விருதினை எனக்கு வழங்கிய தமிழ்ப் பிரியரான திகழ்மிளிருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இவரது வலைத்தளத்தின் அமைப்பும், அதில் இடும் படங்களும் என்னை மிகவும் ரசிக்கவைத்த விஷயங்கள். எனக்குக் கிடைத்த இந்த மகிழ்ச்சியை நான் தேடிப்படிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்கு வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கிருத்திகா , அனுபவங்களாகட்டும் கவிதைகளாகட்டும் சொல்லவந்ததைச் சிறப்பாகச்சொல்லும் இவரது பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். துளசி கோபால் , டீச்சர் என அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் இவருடைய பதிவுகள், நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் பள்ளிக்குழந்தைகளுப் பொறுமையுடன் சொல்லித்தருவதுபோலவே படங்களும் விளக்கங்களுமாய் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நாவிஷ் செந்தில்குமார் , முத்தமிழ்மன்றத்திலிருந்தே இவரது கவிதைகள் பரிச்சயம் எனக்கு. கதைசொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.அருமையாக எழுதுகிறார். அருமையான இந்த வாய்ப்பினை வழங்கிய திகழ்மிளிருக்கு மீண்டும் என் நன்றிகள்!