இடுகைகள்

எதுவரை மதிப்பு?

இரவுக்கு மதிப்பு... விடியும் வரை. விடிந்து விட்டால்,,,வானில் தங்காது பிறை. கணவுக்கு மதிப்பு... களையும் வரை. களைந்து விட்டால்,,, வெளுத்திருப்பது வெள்ளை திரை. மழைக்கு மதிப்பு... மண்ணை சேறும் வரை. மண்ணை வந்தடைந்து விட்டால்,,,வெரும் சேற்று கறை. காதலுக்கு மதிப்பு... மணவரை வரை. மணவாழ்க்கையில் சேர்ந்து விட்டால்,,,தொட்டதெல்லாம் குறை. வயதுக்கு மதிப்பு... ஐம்பதை தொடும் வரை. காலம் கடந்து பொனால்,,,மிஞ்சியிருப்பது நரை. வாழ்க்கைக்கு மதிப்பு... வாழ்வை இரசிக்கும் வரை. வாழ்ந்து பார்க்கலாம்,,,ஒரே ஒரு முறை. உடலுக்கு மதிப்பு... உயிர் உள்ள வரை. உயிர் விட்டுச் சென்றால்,,,உடல் மண்னுக்கு இரை. தமிழனுக்கு மதிப்பு... தமிழ் உள்ள வரை. தாய் மொழி மறந்தவன்,,,எச்சில் கறை.                                                                 ************  இது, சுவரன் என்னும் பெயருடைய இலங்கைத் தமிழ்க்கவிஞரொருவர் எழுதியதாக, மின்னஞ்...

காய்த்திருக்கும் கனிமரம்!

படம்
கல்லடி,சொல்லடி கனலுகிற பகையடியென்று எல்லாத் திசையிருந்தும் அடிக்கத் துடித்தாலும், துணிந்து மட்டுமல்ல தலைநிமிர்ந்தும் நிற்கிற  திறமைசாலி நீ... மொழியென்றும் மதமென்றும் மோதிக்கொள்ளும் மக்களுக்கு, மதியால் ஒன்றிணையும் மகத்துவமும் தெரிந்திருப்பதால், கண்ணடியும் உனக்குக் கொஞ்சம் அதிகம்தான்... புல்லுருவிகளாய் ஒருசிலர் பகையுடன் பார்த்தாலும், எல்லாரும் விரும்பும்படியான இணையற்ற அழகிதான் நீ... சுரண்டிச்சுரண்டியே உன் செல்வத்தைத் திருடினாலும் குறையாமல் நிறைவதே உன் குலச்சிறப்பாய்ச் சொல்கிறார்கள்.. . இணையாகச் சொல்லப்படுகிற இன்னுமொரு சிறப்பு, உலகெங்கும் புகழ்சேர்க்கும் உன்குலத் தோன்றல்கள்... கிட்ட இருக்கையில் உன்னைக் கேலிசெய்த வர்கள்கூட, எட்டிப்போனபின் உனக்காக ஏங்கத்தான் செய்கிறார்கள்... ஊழல் அரசியலும் உள்வீட்டுச் சண்டைகளும் வீழத் தள்ளிவிடும் வெறியோடு எழுந்தாலும், தாயாகி அத்தனையும் தாங்கி நிமிர்கிறாய், தாயே, திருநாடே, உனக்கு என் வணக்கங்கள்!

வாடகை வயிறுகள்!

படம்
நீ, பத்துமாசம் மட்டும் பல்லைக் கடிச்சிக்கிட்டா, நம்ம மொத்தப் பிரச்சனையும்  இல்லாமல் போய்விடும்... சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்... உள்ளே, செத்ததுபோல் உணர்ந்தாள் அவள்... கருவறையைப் பணயம்வைத்துக் காசுபார்க்கும் மும்முரத்தில், கட்டளைகள் வேறு பிறந்தது அவள் கணவனிடமிருந்து... பெத்தெடுத்துக் கொடுத்தமா பணத்தை வாங்கினமான்னு   கச்சிதமா இருக்கணும், மத்தபடி ஏதும்  மனசு பிசகக்கூடாது... பணக்கணக்குப் போட்டவன் பக்குவம் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே, கண்ணீர்த் துளிகளுக்குக்  கணக்கெழுதிக்கொண்டிருந்தாள் அவள்... வாடகைக்குப் பெத்தெடுத்தா வலியே இருக்காதோ? கூடவே நெஞ்சினிலே   பாலும் சுரக்காதோ? கோடிகோடியாய்க்  கொட்டிக்கொடுத்தாலும் கொடுத்துவிட்டுவந்த அந்தக் குழந்தைமுகம் மறக்குமா? என்று , அழுதவளின் வார்த்தைகளெல்லாம், அவசியத்தேவைகளைச் சொல்லி அலட்சியப் படுத்தப்பட்டது... உயிரூட்டிய கருவினை  உள்ளே பதியமிட, விதியை நொந்தவளுக்குள், வேகவேகமாய் வளர்ந்தது குழந்தையும் கூடவே குமுறல்களும்... வயிற்றுக் குழந்தைக்கு வளையல்சத்தம் பிடிக்குமென்று, வளைகாப்பு...

ஈரம்

படம்
ஈரவாசனை படர்ந்திருந்தது அந்தக் கூரைக் குடிசையின் எல்லாப் பக்கமும்... கோரைப்பாயும் ஈரக்கோணியும் அதனதன் பங்குக்கு வாசனை பரப்ப, அரிசிப் பானைக்குள் அடிவரைக்கும் துழாவி, உரசிக் கிடைத்த ஒன்றிரண்டு மணிகளை, வாசல் குருவியின் வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு, ஈரச் சட்டையுடன் சோகைப்பிள்ளை சிரிக்க, உள்ளே, மூத்திர   ஈரத்தில் அழுதது, சேலைத் தொட்டிலில் சின்னப் பிள்ளை... மாசம் முடியுமுன்னால் முன்பணம் கேக்குதா? நாசமாய்ப் போச்சுதென்று ஓசைஉயர்த்திய எஜமானியிடம், ஈரத்தால் வெளுத்த இருகையும் பிசைந்தபடி, வாரேம்மா என்றபடி, வெளியிறங்கி நடந்தவளின் வீட்டுக்குள் அன்றைக்குக் காய்ந்து கிடந்தது, ஓரத்து விறகடுப்பும், ஒன்றிரண்டு வயிறுகளும்... ********** படம் : இணையத்திலிருந்து

விக்கியதில் கசிந்த விவகாரங்கள்!

படம்
                                                இப்போதெல்லாம், அக்கம்பக்கத்தில் பேசக்கூட அச்சப்படுகிறார்களாம் சிலர்... ஏனென்றால், ''விக்கி'யதில் வெளியான விவகாரங்கள் அப்படி... கட்டிப்பிடித்துக் கொண்டே கழுத்தறுத்த யுக்திகள், கைகுலுக்கிக் கூட்டிச்சென்று கழுவேற்றிய புத்திகள்... அத்தனையும் வெளியில்வர அதிர்ந்துபோயிருக்கின்றன, அரசியல் அரங்கத்தின் அசகாய சக்திகள்! அண்ணனுக்கும் ஆப்பு அவனுக்குக் குடைபிடித்த அடுத்தவனுக்கும் ஆப்பு... இங்கே, கண்ணின் விழிபிதுங்கக் கலங்கிப்போய்நிற்கிறது கயமை... அரசியலின் போர்வையில் அக்கிரமம் செய்தவர்களின் ரகசியங்களெல்லாம் விக்கியதில் வெளியேற, விக்கியவனின் வாயைத் தைக்கும்  முயற்சியில் மும்முரமாய் இறங்கியிருக்கின்றன, ஆத்திரம் தலைக்கேறிய சில ஆதிக்க முதலைகள்!

முடியாத துயரம்

படம்
இவை, எல்லாம் கடந்துபோகும், இயல்பாயிரு  என்றார்கள்... இருந்து பார்த்தாள், இயலவில்லை... ஆடுகிற மாட்டை ஆடியும் பாடுகிற மாட்டைப் பாடியும் படியவைக்கலா மென்றார்கள்... முயன்று பார்த்தாள், முடியவில்லை... வேதனையாயிருந்தால் கொஞ்சம்  விலகியிரு... விலக விலகத்தான் விருப்பம் வருமென்றார்கள்... விலகியும் பார்த்தாள், ஆனால், வெறுப்பைத் தவிர வேறெதுவும் வரவில்லை... இறுதியில் விட்டு விலகி வெளியில் வந்தபின்தான் விபரம் புரிந்தது, அது வெந்த புண்ணில்  வேலைப் பாய்ச்சுகிற சொந்தம் மட்டுமல்ல, எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற எந்திரமும் தானென்று!!!

உறுத்தலில் உருவாகி...

மனசுமுதிராத முன்னிருபதுகளில் ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மாலையிட்டவள் அவள்... காலையில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம் நிலைமாற முன்னேறி நடந்தாலும் குற்றமென்று, கண்ணால் சுட்டெரித்த கனலுக்குக் கட்டுப்பட்டுப் பெண்ணாக மண்டியிட்ட பேதைப் பிறவியவள்... எண்ணிக்கைக் கடங்காத இருட்டுக் கதைகளை, எண்ணியெண்ணி அழுதிருந்தால் இருண்டிடும் வாழ்க்கையென்று, எல்லாவற்றையும், மண்ணாகிப்போன தன் மனசுக்குள் புதைத்தவள்... எண்ணைந்து வயசுகளின் இறுதிப் பிராயத்தில், பெண்ணென்றால் இவளென்று அவள் பொறுமையைச் சிரசிலேற்றித் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தேடிவந்தன உறவுகள்... உறுத்தி உறுத்தியே ஓய்ந்துபோன உறவுக்கும்கூட, மருத்துவம் சொல்லி மனதை மாற்றுமளவுக்குப் பக்குவப்பட்டுப் போனது அவளது அப்பழுக்கில்லாத மனசு... எப்படிப் பார்த்தாலும் இவளுடைய பெருமைக்கு மொத்தக் காரணம் எப்பவும் நான்தானென்று கண்ணீரைமீறி ஓர்நாள் உண்மை கரைபுரள, அங்கே, புடமிட்ட பொன்னில்கோர்த்த வடமாக ஜொலித்தது முத்து!