என்னத்தைச் செய்தீங்க...(4)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை- நான்காவது பகுதி)

என்று பதிலுரைத்தார்
எண்ணத்தை எடுத்துரைத்தார்
கொன்று விடுவதுபோல்
கோபம்கொண்டு நின்றவளை
சொல்லித் திருத்திடவோர்
வழியேதும் அறியாமல்
மெல்லக் கரம்பிடித்தார்
மின்னல் பாய்ந்த மரமானார்...

கன்னல் கரும்பே
கனியமுதே என்றுசொல்லி
கல்யாணம் கழிந்தபோது
காதலுடன் கைப்பிடிக்க
மெல்லத் தலைகுனிந்து
உள்ளம்சிதைத்த பெண்ணை
எங்கே தொலைத்தேனென்று
ஏங்கினார் செல்வமணி...

கணவனின் மனப்போக்கை
அறியாத மடமையுடன்
நினைத்ததை நடத்திடும்
பிடிவாதம் பிடித்திழுக்க
அடுத்த அம்பினை
ஆத்திரம் தோய்த்தபடி
எடுத்து எறியலானாள்
சினத்துடன் சிவகாமி...

"என்னத்தைச் செய்தீங்க?
எதை வாங்கித் தந்தீங்க?
ஒண்ணுக்கு ரெண்டுபெற்று
ஓடாகத் தேய்ந்தாலும்
நாய்பட்ட பாட்டில்
ஒரு
நானோ வாங்கத் துப்பில்லை,
என்ன இது அநியாயம்?
என்று குரலுயர்த்த,

மானம் போகுதென்று
மனவருத்தம் கொண்டவராய்
"போ நீ உள்ளே"யென்று
புகைச்சலுடன் சொல்லிவிட்டுத்
தானெழுந்து சென்றார்
தன் நடையில் தளர்ச்சியுற்றார்
தாயுடன் கைகோர்த்த
மக்கள்கண்டு மனமுடைந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!