Tuesday, January 27, 2009

மழைவிழும் எழில்வனம்



மழைக் காற்றது மூங்கில்வழி
நுழையும் ஒலி கேட்கும்
இசைகேட்டிட மகிழ்வில்
தரு வகைகள் தலையாட்டும்

இதழின் வழி மதுவோடிட
இலையும் நிலை தளரும்
கிளை யாடிய மலர்கள்பல
மண்ணின் மடியுதிரும்

வழியும்இசை பரந்தோடிட
மகிழும் உயிரினங்கள்
வழிமாறிட மலைப்பாறையில்
வதியும் குருகினங்கள்

துளியும்விழத் தோகைமலர்
விரிக்கும் மயிலினங்கள்
ஒளியும்செல ஓசையுடன்
பிளிரும் களிறினங்கள்

ஊதும்இசை யொலிகேட்டிட
அதிரும் எழில்மேகம்
காதில்குளிர் வாடைதொடத்
தழுவும் இளமானும்...

மன்றின்மழை பெரிதாகிட
வெளியில் வரும்நாகம்
கொன்றைமலர் விரிபோர்வையில்
களித்தே நெளிந்தாடும்...

கண்டேயதன் எழிலில்மிக
மையல்கொடு தானும்
வண்டாடிடும் மலர்த்தூளியில்
கவியும் விளையாடும்...

கொண்டாடிடும் மழைநாளதன்
கோலம்நிறை அழகில்
உண்டோ அதன் நிகராய்
மற்றெதுவும் இவ்வுலகில்?

2 comments:

திகழ்மிளிர் said...

அழகின்
அருமை
ஒவ்வொரு வரிகளிலும்
ஒளிக்கின்றன


வாழ்த்துகள்

சுந்தரா said...

நன்றி திகழ்மிளிர்!

இயற்கையென்றாலே அழகாய்த்தானே இருக்கும் :)