தூரமாகிப்போன சாமியும் சந்தோஷமும்!
 தூரமா யிருக்கிறப்ப  தெருவுக்கெல்லாம் கூடாது,  ஓரமா உக்காந்து  பரமபதம் ஆடென்று  காரமாய்ச் சொல்லிவிட்டுக்  கண்ணை உருட்டியது பாட்டி...  வேறெதுவும் பிடிக்காமல்  வெற்றுத் தாளெடுத்துவைத்து,  சுற்றிக் கோடுபோட்டு  ஸ்ரீராம ஜெயம் எழுத,  கெட்டுதுபோ குடியென்று  பட்டென்று பிடுங்கிவிட்டு,  சுத்தமாகிற வரைக்கும்  சாமியெல்லாம் வேண்டாம்,  குத்தமாகிப் போகுமடி  என்று பயமுறுத்த,  தூரமாகிப்போனது  சாமியுமா என்று  பாரமாகிப்போன மனதுடன்  பாயில்போய் விழுந்தது,  பெரியவளாகிப் போன  பத்துவயசுச் சின்னப் பூ. *****
